ETV Bharat / state

அதிமுக - பாமக கூட்டணி; தருமபுரியில் பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்

2006-ல் தேர்தல் முடிவை எப்படி பாமக மாற்றியதோ, அதே போல இந்த ஆண்டும் உறுதியாக மாற்றம் ஏற்படும் என தருமபுரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் தெரிவித்தார்.

தருமபுரியில் பட்டாசு வெடித்து கொண்டாடிய பாமகவினர்
தருமபுரியில் பட்டாசு வெடித்து கொண்டாடிய தொண்டர்கள் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 7, 2026 at 3:10 PM IST

1 Min Read
Choose ETV Bharat

தருமபுரி: அதிமுக - பாமக கூட்டணி அறிவிப்பு வெளியானதை முன்னிட்டு, தருமபுரியில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.

2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக இணைந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதற்காக, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் வந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இன்று (ஜன.7) இபிஎஸ்-ஐ சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து, 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்து போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்தார்.

மேலும், “எங்கள் கூட்டணி வலுவான வெற்றிக் கூட்டணி. திமுக ஆட்சியை அகற்றும் ஒரே லட்சியத்துடன் தேர்தலை சந்தித்து, பெரும்பாலான தொகுதிகளை வென்று ஆட்சி அமைப்போம்” எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், அதிமுக - பாமக கூட்டணி உறுதியானதையொட்டி, அதனைக் கொண்டாடும் விதமாக தருமபுரி பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்து உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. அப்போது, தருமபுரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.செந்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

தருமபுரியில் பட்டாசு வெடித்து கொண்டாடிய தொண்டர்கள் (ETV Bharat Tamil Nadu)
இதையும் படிங்க: தூய்மை பணியாளர்கள் காலை தொட்டு வணங்குகிறேன் - அமைச்சர் ஆவடி நாசர் நெகிழ்ச்சி

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தருமபுரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில், “தமிழகத்தின் எதிர்காலம், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று அதிமுக பொதுச் செயலாளரைச் சந்தித்து, 2026 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதிமுக-பாமக கூட்டணி அறிவிப்பை தமிழகமே கொண்டாடுகிறது. இந்த நாள் கூட்டணி அறிவிப்பு வந்த நாள் அல்ல, தேர்தல் முடிவு வந்த நாள். எப்படி 2006-ல் தேர்தல் முடிவை பாமக மாற்றியதோ, அதேபோல இந்த ஆண்டும் உறுதியாக மாற்றம் ஏற்படும்.

கடந்த 5 ஆண்டுகாலமாகத் தமிழ்நாட்டில் கொடுங்கோல் ஆட்சி நடத்திய, மக்கள் விரோத ஆட்சி நடத்திய, தமிழகத்தின் எல்லா முன்னேற்றங்களுக்கு முட்டுக்கட்டை போட்ட, பொய் புள்ளி விவரங்களால் ஒரு புனைவைக் கட்டி அமைத்த திமுகவை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்து விட்டது. 2026 சட்டமன்றத் தேர்தல் மக்களுக்கான தேர்தல், இதுதான் உண்மையான விடியல் எனகாட்டக்கூடிய தேர்தல். தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளிலும் எங்கள் கூட்டணியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்று, சட்டமன்றத்திற்கு செல்வார்கள்” என்று தெரிவித்தார்.