தருமபுரியில் 12.5 லட்சம் வாக்காளர்கள் - மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல்
தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகளில் மொத்தமாக 6 லட்சத்து 15 ஆயிரத்து 311 பெண் வாக்காளர்கள் இருப்பது இறுதி வாக்காளர் பட்டியல் மூலம் தெரியவந்துள்ளது.


Published : February 23, 2026 at 7:18 PM IST
தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான சதீஷ் இன்று வெளியிட்டார்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் குறிஞ்சி கூட்டரங்கில், தருமபுரி, பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியலை, மாவட்ட ஆட்சியர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.
அதன்படி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தமாக 6 லட்சத்து 15 ஆயிரத்து 311 பெண் வாக்காளர்கள் உள்ளனர். 6,24,647 ஆண் வாக்காளர்கள் உடன் மொத்தமாக 12 லட்சத்து 40 ஆயிரத்து 108 வாக்காளர்கள் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க தகுதி உள்ளவர்களாக கணக்கிடப்பட்டுள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியலின் படி, பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,19,611 பேரும், பெண் வாக்காளர்கள் 1,17,845 பேரும், 3-ம் பாலினத்தவர்கள் 20 என மொத்தமாக 2,37,476 வாக்காளர்கள் உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
அடுத்ததாக, பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,26,763, பெண் வாக்காளர்கள் 1,19,521, 3-ம் பாலினத்தவர்கள் 9 என மொத்தமாக 2,46,293 வாக்காளர்கள் உள்ளதாக இறுதி பட்டியலில் கணக்கிடப்பட்டுள்ளது.
தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,29,393, பெண் வாக்காளர்கள் 1,28,464, 3-ம் பாலினத்தவர்கள் 82 பேர் என மொத்தமாக 2,57,939 வாக்காளர்கள் உள்ளனர்.
பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,27,427, பெண் வாக்காளர்கள் 1,27,217, 3-ம் பாலினத்தவர்கள் 14 பேர் என மொத்தமாக 2,54,658 வாக்காளர்கள் உள்ளனர்.
அரூர் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,21,453, பெண் வாக்காளர்கள் 1,22,264, 3-ம் பாலினத்தவர்கள் 25 என மொத்தமாக 2,43,742 வாக்காளர்கள் உள்ளதாக பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
| இதையும் படிங்க: இறுதி வாக்காளர் பட்டியல்; தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள் |
முன்னதாக, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்பட்டு, அதன் வாயிலாக வாக்காளர்கள் பெயர்கள் சரிபார்க்கப்பட்டு, விடுபட்ட பெயர்கள் சேர்க்கப்பட்டன. மேலும், இறந்தவர்கள், நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள் ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டன.
இவை அனைத்தும் சீராக சரிபார்க்கப்பட்டு, எதிர்வரும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வாக்களிக்கத் தகுதியான வாக்காளர்கள் பட்டியல்களை, ஒவ்வொரு மாவட்டத்திலும், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டனர்.

