நேபாளத்தில் சிக்கிய 148 தமிழர்களின் நிலை என்ன? ஆன்மீக சொற்பொழிவாளர் வெளியிட்ட வீடியோ
நேபாளத்தில் இருந்து வெளியேற என்ன வழி உள்ளது என நேபாளம், இந்தியா மற்றும் சீன அரசுடன் பேசி வருவதாக, ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்கரசி வீடியோ மூலம் கூறியுள்ளார்.

Published : August 27, 2026 at 7:12 PM IST
புதுடெல்லி: நேபாளத்தில் 148 தமிழர்களுடன் யாத்திரை சென்ற, பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்கரசி வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நேபாளத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், ஆற்றின் கரையோரம் இருக்கக்கூடிய ராசுவா, தாடிங், நுவாகோட், கோர்க்கா உள்ளிட்ட நகரங்கள் மொத்தமாக சேதமடைந்தன.
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 332ஆக உயர்ந்துள்ளதாக நேபாள காவல் துறை செய்தித் தொடர்பாளர் அபி நாராயண் கஃப்லேவின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இருந்து 103 பேர் சென்றுள்ளதாகவும், அதில் 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக மீதமுள்ள நபர்கள் குறித்த தகவல் இன்று இரவுக்குள் தெரியவரும் என கும்பகோணம் சூப்பர் யாத்ரா ஏஜென்சி உரிமையாளர் சையத் சாதிக் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஆகஸ்ட் 17ஆம் தேதி சென்னையில் இருந்து குழுக்காளாக நேபாளம் சென்ற பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்கரசி, நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என நேபாளத்தில் இருந்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது, அனைவருக்கும் வணக்கம். திருக்கைலாய மானசரோவர் யாத்திரைக்கு இரண்டு குழுக்களாக நாங்கள் ஆகஸ்ட் 17 மற்றும் 18ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு, காட்மண்டு வந்தடைந்தோம். 20ஆம் தேதி கெருங் எல்லையை கடந்து வந்தோம்.
தற்போது 2வது நாள் பரிக்கிராமை நிறைவு செய்யும் போதுதான், நேபாள வெள்ளப்பெருக்கு செய்தியை கேள்விப்பட்டோம். பல்லாயிரக்கணக்கான நேபாள மக்களும், தமிழ்நாட்டில் இருந்து வந்த யாத்ரீகர்கள், இந்தியா உட்பட வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் பாதிக்கப்படைந்துள்ளார்கள் என்ற செய்தி கேட்டு அதிர்சசியடைந்தோம். வெள்ளத்தால், பலபேரின் நிலைமை என்ன ஆனது என அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கவில்லை.
| இதையும் படிங்க: நேபாள பெரு வெள்ளம்: சென்னையை சேர்ந்த 49 பேரின் நிலை என்ன? |
எங்கள் குழுவில் மொத்தம் 150 பேர் உள்ளனர். 148 தமிழர்களும், 2 வெளிநாட்டவாக்ளும் உள்ளனர். நாங்கள் அனைவருமே பாதுகாப்போடுதான் இருக்கிறோம். தற்போது, சாஹாவில் இருக்கோம், இங்கிருந்து நாங்கள் வெளியேற என்ன வழி என்பது குறித்து நேபாளம், இந்தியா மற்றும் சீன அரசாங்கத்துடன் பேசிக்கொண்டிருக்கிறோம். எந்த வழியாக எங்களுக்கு அனுமதி கிடைக்கிறேதா, அந்த வழியாக தாய் நாடு திரும்ப முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.
நாங்கள் அனைவரும் தற்போது பாதுகாப்போடு இருக்கிறோம் என்ற தகவலை பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். அதே சமயம், இந்த பேரிடரில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பிரார்த்தனை செய்கிறோம். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழந்த அனுதாபங்களை சொல்லிக் கொள்கிறோம். எல்லா அரசாங்கமும் இணைந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி, நிலைமையை சீர் செய்ய வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறோம் என அவர் கூறியுள்ளார்.

