ETV Bharat / state

16 வருட காத்திருப்பு - மக்கள் பயன்பாட்டிற்கு வந்த குரோம்பேட்டை சுரங்கப்பாதை

ராதா நகர் ரயில்வே சுரங்கப்பாதையில் கார், ஆம்புலன்ஸ், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் செல்லும் வகையில் 5.5 மீட்டர் அகல சாலை மற்றும் 2 மீட்டர் அகல நடைபாதையுடன் அமைக்கப்பட்டுள்ளது.

குரோம்பேட்டை சுரங்கப்பாதை திறந்து வைத்த   துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
குரோம்பேட்டை சுரங்கப்பாதை திறந்து வைத்த  துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 8, 2026 at 7:39 AM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: 16 வருடங்களாக கட்டப்பட்டு வந்த குரோம்பேட்டை ராதா நகர் சுரங்கப்பாதையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை அடுத்த பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குரோம்பேட்டை ராதா நகர், ஜமீன் ராயப்பேட்டை, நெமிலிச்சேரி, பாரதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் வசிக்கும் மக்கள் ஜிஎஸ்டி சாலையை அடைவதற்கு குரோம்பேட்டை, ராதா நகர் எல்.சி–27 ரயில்வே கேட்டை கடந்து செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது.

ஆனால், அந்த ரயில் தடம் மின்சார ரயில்கள், தொலைதூர எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும் முக்கிய வழித்தடம் என்பதால் ரயில்வே கேட் பத்து நிமிடத்திற்கு ஒருமுறை மூடப்படுகிறது. இதனால் பணிக்கு செல்வோர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் என ஏராளமான பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்து வந்தது.

இப்படி ரயில்வே கேட் மூடப்படும் நேரங்களில் குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலை மற்றும் ராதா நகர் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்று கடுமையான போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. மேலும், ரயில்வே கேட் மூடப்பட்டு இருக்கும் நேரத்திலும், தண்டவளங்களை கடக்கும் பொழுது ரயில் மோதி பல உயிரிழப்புகளும் ஏற்பட்டது. இதனால், அப்பகுதி மக்கள் ரயில் பாதையை கடந்து, ஜி.எஸ்.டி சாலை வருவதற்கு ஏதுவாக சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க: அஜித்குமார் கொலை வழக்கு; டிஎஸ்பி-யின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி - நீதிமன்றத்தின் கேள்வியால் 'டுவிஸ்ட்'

அதன் அடிப்படையில் கடந்த 2009 ஆம் ஆண்டு நெடுஞ்சாலைத்துறை மற்றும் தெற்கு ரயில்வே இணைந்து ரயில்வே சுரங்கப்பாதை திட்டத்தை தொடங்கியது. முதலில் ரயில் பாதைக்கு கீழ் கான்கிரீட் பாக்ஸ் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையில், நிலம் கையகப்படுத்தல், கட்டிட இடிப்பு இழப்பீடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் காரணமாக இந்த திட்டம் பல ஆண்டுகள் இழுபறியில் இருந்தது.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் பதிவு
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் பதிவு (@Udhaystalin)

சுரங்கப்பாதை திறப்பு

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், வீடுகளை இழந்த நபர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்ட பின்னர், பணிகள் மீண்டும் 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இருப்பினும், கரோனா வைரஸ் தொற்றால் மறுபடியும் பணி தோய்வு ஏற்பட்டது. இதையடுத்து, 2022ஆம் ஆண்டு முதல் முழுவீச்சில் கட்டுமானம் நடைபெற்று வந்த நிலையில், தற்போது ராதா நகர் ரயில்வே சுரங்கப்பாதையின் அனைத்து பணிகளும் நிறைவடைந்தன.

இந்நிலையில், கடந்த 16 வருடங்களாக ரூ.31.62 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வந்த இந்த சுரங்கப்பாதையை நேற்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தார்.

சுரங்கப்பாதையின் வசதிகள்

இந்த ரயில்வே சுரங்கப்பாதையில் கார், ஆம்புலன்ஸ், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் செல்லும் வகையில் 5.5 மீட்டர் அகல சாலை மற்றும் 2 மீட்டர் அகல நடைபாதையுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குரோம்பேட்டை கிழக்கு பகுதியில் இருக்கும் பல லட்சக்கணக்கான மக்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஜிஎஸ்டி சாலையில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசலும் குறையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.