3,000 விஏஓ பணியிடங்களை உருவாக்கி நிரப்ப வேண்டும் - தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தல்
புதிய அரசுக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் முழு ஒத்துழைப்பை வழங்கும். பொதுமக்களுக்கு சிறப்பான சேவையை தொடர்ந்து வழங்க உறுதுணையாக இருப்போம் என அருள்ராஜ் தெரிவித்தார்.

Published : July 8, 2026 at 4:12 PM IST
சென்னை: பெரிய கிராமங்களில் ஒருவர் மட்டுமே பணியாற்றுவதால் கூடுதலாக 2,000 முதல் 3,000 புதிய கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடங்களை உருவாக்கி அரசு நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அருள்ராஜ் வலியுறுத்தினார்.
சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அருள்ராஜ், வருவாய்த் துறை அமைச்சர் மற்றும் வருவாய்த் துறை செயலாளரை இன்று சந்தித்தார். அப்போது, கிராம நிர்வாக அலுவலர்கள் நியமனம் தொடர்பான 7 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவர் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒவ்வொரு கோரிக்கையையும் அமைச்சர் விரிவாக கேட்டு, பொதுமக்களின் சிரமங்களை குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு வழி மாவட்ட மாறுதல் கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போதைய தமிழக அரசின் நடவடிக்கையால் 182 விஏஓ-க்களுக்கு எந்தவித லஞ்சமும் இன்றி, வெளிப்படையான முறையில் மாவட்ட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக முதலமைச்சர், வருவாய்த் துறை அமைச்சர், வருவாய்த்துறை செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் இணை வருவாய் நிர்வாக ஆணையருக்கு சங்கத்தின் சார்பில் நன்றி.
தமிழகத்தில் சுமார் 17 ஆயிரம் கிராமங்கள் உள்ளன. தற்போது சுமார் 12,500 விஏஓ-க்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். பெரிய கிராமங்களில் ஒரு விஏஓ மட்டுமே பணியாற்றுவதால், கூடுதலாக 2,000 முதல் 3,000 புதிய விஏஓ பணியிடங்களை உருவாக்கி, பெரிய கிராமங்களுக்கு கூடுதல் விஏஓக்களை நியமிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன்" என்று கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், "கிராமங்களில் விஏஓக்கள் பணியாற்றும் பல அலுவலகங்களில் கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இது குறித்து முதலமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.
182 விஏஓ-க்களுக்கு வெளிப்படையான முறையில் மாவட்ட மாறுதல் வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், எனது ஒரு மாத சம்பளத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிளேன்.
தற்போதைய அரசின் நடவடிக்கையால் வருவாய்த்துறையில் நடைமுறைச் சிக்கல்கள் பெருமளவில் குறைந்துள்ளன. பட்டா மாறுதல், அடங்கல், வருவாய் சான்றிதழ் உள்ளிட்ட பெரும்பாலான சேவைகள் ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளதால், வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு பொதுமக்கள் அலைய வேண்டிய நிலை குறைந்து விட்டது.
புதிய அரசுக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் முழு ஒத்துழைப்பை வழங்கும். பொதுமக்களுக்கு சிறப்பான சேவையை தொடர்ந்து வழங்க உறுதுணையாக இருப்போம்" என்றும் அருள்ராஜ் கூறினார்.

