ETV Bharat / state

டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 வாங்க சொன்னது யார்? திமுக Vs தவெக பேரவையில் வார்த்தை மோதல்

பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்க சொன்னது முழுக்க முழுக்க திமுக தான் என மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் குற்றஞ்சாட்டினார்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 31, 2026 at 8:19 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்க சொன்னது யார்? என திமுக, தவெக உறுப்பினர்களிடையே பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.

டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக, சட்டப்பேரவையில் இன்று பேசிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, "திமுகவின் கொள்கை பூரண மதுவிலக்குதான். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதனால்தான் படிப்படியாக மதுக்கடைகள் திமுக ஆட்சியில் மூடப்பட்டன. பொதுப்பணித்துறை அமைச்சர் ஊழல் ஊழல் என்கிறார். திமுக அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்த வேண்டும், மக்கள் மத்தியில் திமுக மீது கெட்ட பெயரை உருவாக்க வேண்டும் என்பதற்காக நீங்கள் வழக்கு போட்டு பூதக்கண்ணாடி போட்டு தேடுகிறீர்கள்.

கடந்த காலங்களில் தவறு நடைபெற்றதா? இல்லையா? என்பதை நீதிமன்ற தீர்பின் மூலம் தெரியவரும். கடந்த காலங்களில் தவறுகள் நடைபெற்றது போல ஒரு மாய தோற்றத்தை உருவாக்கி மக்கள் மத்தியில் கடந்த ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்த இந்த அரசு முயல்கிறது. அது உண்மைக்கு மாறான வழக்கு. இதில் நாங்கள் நிரபராதி என்பதை நிரூபிப்போம்" எனத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "கடந்த ஆட்சியில் மது ஆலைகளுக்கான லைசன்ஸ் கொடுப்பதில் வெளிப்படை தன்மை இல்லை. திமுகவின் சொந்த டிரஸரிக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே திமுக லைசன்ஸ் கொடுத்துள்ளது. ஒரு சாமானியன் அந்த லைசன்ஸை பெற்றுவிட முடியுமா? இது தான் ஊழல். மக்கள் கொடுத்த அதிகாரம் சாராய நிறுவனங்களுக்கான லைசன்ஸாக மாற்றப்பட்டது. தனக்கு வேண்டியவர்களுக்கு லைசென்ஸ் கொடுத்து தான் மது விற்பனையை திமுக அதிகரித்தது. இனிமேல் டாஸ்மாக் வெளிப்படை தன்மையுடன் செயல்படும். அரசியல் பின்புலத்துடன் சாராய ஆலை நடத்துபவர்களின் ஆலைகள் மூட வைக்கப்பட வேண்டும்" என்றார்.

இதற்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் கே.என் நேரு, "குடித்தால் என்ன மாதிரியான தீங்கு வரும் என்று பாடம் நடத்தி உள்ளீர்கள். பாட்டலுக்கு பத்து ரூபாய் என்று எங்களை சொன்னீர்கள். ஆனால் தற்பொழுது பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்காமல் இருக்கிறீர்களா? பத்து ரூபாய் வாங்குகிறார்கள் என்றால், அவர்களுக்கு சாக்கு சணல் போன்றவை தரவில்லை. அவர்கள் தகுந்த கூலி கொடுக்கவில்லை, அதனால் அந்த பத்து ரூபாய் வாங்குகிறார்கள் என்று நீங்கள் கூறுகிறீர்கள். உங்கள் ஆட்சியில் பத்து ரூபாய் வாங்கினால் அது ஜஸ்டிஃபிகேஷன். எங்க காலத்தில் வாங்கினால் அது ஊழலா?" என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மதுவிலக்குத்துறை அமைச்சர் விக்னேஷ், "பாட்டிலுக்கு பத்து ரூபாய் வரலாறு கொரோனா காலத்திற்கு முன்பாக பாட்டிலுக்கு இரண்டு ரூபாயாக இருந்தது. பின்னர் ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என மாறியது. கடந்த காலங்களில் ரூ.2000 ஊதியத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். ஊதிய உயர்வு என்று அவர்கள் கேட்கும்போதெல்லாம் ரூ.500, 1000 என்று வழங்கியுள்ளார்கள்.

2003-இல் டாஸ்மார்க் பணியாளராக பணியில் சேர்ந்தவருக்கு வயது தற்போது 53. ஆனால் அவருடைய வருமானம் தற்போது ரூ.14,000 ஆக உள்ளது. இதில் பிடித்த போக 11 ஆயிரம் கைக்கு கிடைக்கும். ரூ.11 ஆயிரம் ரூபாய் ஒருவருக்கு சம்பளம் என்று கொடுத்தால், அந்த தொகையை வைத்து அவரால் எப்படி குடும்பத்தை பார்க்க முடியும்.

11,000 ரூபாய் சம்பளம் கொடுக்கும் நீங்கள் அந்த கடைக்கு முறையாக மின்சார கட்டணம் செலுத்த வேண்டும். வாடகை கொடுக்க வேண்டும், குடிப்பதற்கு தண்ணீராவது தர வேண்டும். இதை செய்தீர்களா? என்ன மதுபானம் வேண்டும் என்பதை நுகர்வோர் முடிவு செய்வது இல்லை. கடைக்காரர்கள் தான் முடிவு செய்கிறார்கள். எந்த பிராண்ட் விற்பனை செய்ய வேண்டும் என்பதை ஆட்சியாளர்கள்தான் முடிவு செய்கிறார்கள்.

இந்த துறையை சீரமைப்பது சாதாரண விஷயம் அல்ல, கிட்டத்தட்ட 20 ஆண்டாக ஊழல் ஊறிப்போய் உள்ளது. டாஸ்மாக் பணியாளர்களை பத்து ரூபாய் வாங்க தூண்டியது திமுக. ஒரு தொழிலாளி நாங்கள் ஐந்து ரூபாய் தான் வாங்கினோம். எங்களுடைய அதிகாரிகள் கூட 5 ரூபாயை சேர்த்து பத்து ரூபாயாக வாங்க வேண்டும் என்று சொன்னார்கள் எனக் கூறினார்கள். பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்க சொன்னது முழுக்க முழுக்க திமுக தான். பாட்டிலுக்கு பத்து ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று சொன்னது கடந்த ஆட்சியில் துறை சார்ந்த அதிகாரிகளும், துறை சார்ந்த அமைச்சர்களும் தான்" எனக் குற்றஞ்சாட்டினார்.