ETV Bharat / state

புறநகர் ரயில்களில் 5 கூடுதல் பெட்டிகள் - தயாநிதி மாறன் தகவல்

புறநகர் ரயில் சேவை குறைக்கப்பட்டுள்ளதால், காலை மாலை பீக் (peak hours) நேரங்களில் மக்கள் அதிகமாக பாதிக்கப்படுவதாக தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

ரயில்வே துறையினருடன் தயாநிதி மாறன் உரையாடல்
ரயில்வே துறையினருடன் தயாநிதி மாறன் உரையாடல் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 25, 2026 at 5:16 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: பயணிகள் பாதிக்கப்படாத வகையில் ஏற்கனவே இருக்கக்கூடிய ரயில்களில் 5 பெட்டிகள் கூடுதலாக சேர்க்கப்படும் என ரயில்வே துறையினர் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கூறியுள்ளார்.

சென்னையில் எழும்பூர் - நுங்கம்பாக்கம் இடையே தண்டவாளம் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில் ஏப்ரல் 5ஆம் தேதிவரை குறைந்த எண்ணிக்கையில் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காலை, மாலை என பீக் நேரங்களில் 5 நிமிடத்திற்கு ஒருமுறை சென்ற மின்சார ரயில்கள் தற்போது 15 நிமிடத்திற்கு ஒருமுறை செல்லும் வகையில் கால அட்டவணையை ரயில்வே நிர்வாகம் மாற்றி இருக்கிறது.

அதற்கேற்ப பயணிகள் தங்களது பயணத்தை திட்டமிட்டு கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும், காலை, மாலை நேரங்களில் ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. சென்னை மாநகரில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள தெற்கு ரயில்வே அலுவலகத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங்கை சந்தித்து மக்களின் சிரமத்தை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோரிக்கை அளித்தார்.

இதையும் படிங்க: சிறையில் இருந்து வந்த பிறகும் எனக்கு பல கெடுபிடிகள் விதிக்கப்பட்டன: உணர்ச்சி பொங்க பேசிய சசிகலா

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “மறுசீரமைப்பு பணிகள் காரணமாக 60 சதவீதம் ரயில்கள் இயக்கப்படாமல் உள்ளன. இந்த பணிகள் மார்ச் 30க்குள் முடிவடையும் என்று ரயில்வே துறையினர் கூறுகின்றனர். இருப்பினும் மக்கள் சிரமத்தை கருத்தில்கொண்டு அதற்கு முன்னதாகவே முடிப்பதற்கான முயற்சிகளை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

60 சதவீதம் ரயில்கள் இயக்கப்படாத நிலையில் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சி செய்ய வேண்டுமென்று கூறியிருக்கிறேன்.

ஆனால் எழும்பூர் ரயில் நிலையம் பழுதடைந்த நிலையில் இருப்பதால், அதனை சரிசெய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும், அப்படி செய்யாவிட்டால் இன்னும் பழுதடைந்துவிடும் என்றும் ரயில்வே தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் பாதிக்கப்படாத வகையில் ஏற்கனவே இருக்கக்கூடிய ரயில்களில் 5 பெட்டிகள் கூடுதலாக சேர்க்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

காலை நேரத்தில் விரைவு ரயில் செல்லும் பாதையில் விரைவு ரயில் செல்லாத நேரத்தில் மின்சார ரயில் இயக்கப்பட வேண்டும் என கூறினேன். மேலும் வேலையை படிப்படியாக செய்திருந்தால் மக்கள் பாதிப்படைந்திருக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்தேன்.

குறிப்பாக, காலை மாலை பீக் நேரங்களில் மக்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே இந்தப் பிரச்சனை உடனடியாக தீர்க்கப்படவில்லை என்றால் துறை சார்ந்த மத்திய அமைச்சருக்கு இப்பிரச்சினை சம்பந்தமாக எடுத்துச் செல்லலாம் என இருக்கிறோம்” என்றார்.