மதுரையில் ரோந்து வரும் 'சைக்கிள் போலீஸ்'; சுழலும் சைரனுடன் 'மாஸ் என்ட்ரி' - என்ன விசேஷம்?
வெள்ளை நிற சைக்கிள், பின்பக்கத்தில் சொருகப்பட்ட லத்தி, கைப்பிடியின் நடுவே ஒலிபெருக்கி, சுழலும் சைரன் என அசத்தல் கெட்டப்பில் கெத்தாக வலம் வருகிறார்கள் இந்த சைக்கிள் போலீஸார்.

Published : August 30, 2026 at 1:05 PM IST
-BY இரா.சிவக்குமார்
காவல்துறையை தேடி மக்கள் செல்வதை விட, மக்களை தேடி செல்லும் காவல்துறையால்தான் அதிக அளவில் பாதுகாப்பு உணர்வை தர முடியும். அப்படியொரு அசத்தலான முன்னெடுப்பைதான் மதுரை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் திருக்குடமுழுக்கு வரும் செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் இந்த குடமுழுக்கு நிகழ்வில் பங்கேற்பார்கள் என்பதால் இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
கோயில் நிர்வாகம் சார்பில் ஒருபக்கம் விழா ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க, காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிலொரு பகுதியாகவே, இந்த 'சைக்கிள் போலீஸ் ரோந்து' திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சித்திரை வீதியில் முத்திரை
வெள்ளை நிற சைக்கிள், பின்பக்கத்தில் சொருகப்பட்ட லத்தி, கைப்பிடியின் நடுவே ஒலிபெருக்கி, சுழலும் சைரன் என அசத்தல் கெட்டப்பில் கெத்தாக வலம் வருகிறார்கள் இந்த சைக்கிள் போலீஸார். மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றியுள்ள 4 சித்திரை வீதிகள்தான் இந்த போலீஸாரின் பணித்தளம்.
| இதையும் படிங்க: உலகப்புகழ் பெற்ற இருட்டுக்கடை அல்வாவின் விலை கிடுகிடுவென உயர்வு - அல்வா பிரியர்கள் கடும் அதிர்ச்சி |
தற்போது அந்தப் பகுதிகளுக்கு சென்றாலே கம்பீரமாக ஒலிக்கும் குரல்கள் நம்மை தைரியமூட்டுகின்றன. 'உங்கள் உடைமைகளை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்'; 'சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் இருந்தால் தைரியமாக எங்களை அழையுங்கள், அடுத்த நொடி உங்கள் அருகில் நாங்கள் வந்து நிற்போம்'; 'கடவுள் தரிசனம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு உங்கள் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம்' என ஒலிப்பெருக்கியில் சொல்லிக்கொண்டே ரோந்து செல்கின்றனர் சைக்கிள் போலீஸார்.
இந்த ரோந்து பணியில் ரமேஷ்குமார், பாலாஜி, சதீஷ்வேல், சுரேஷ் என 4 துடிப்பான இளம் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
'பாதுகாப்பு மட்டுமல்ல.. உதவியும் செய்வோம்..'
நான்கு சித்திரை வீதிகளையும் போலீசார் சுற்றி சுற்றி சைக்கிளில் ரோந்து வருவதால் அங்கு எந்த தவறுகளும் நடக்க வாய்ப்பே இல்லை என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவது மட்டுமல்லாமல், ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு தேவையான ஆலோசனைகளை நேசத்துடன் வழங்குகிறார்கள் இந்த காவலர்கள்.
மேலும், கோயிலுக்கு வரும் வயது முதிர்ந்த பக்தர்களை கோவிலுக்கு அழைத்து செல்வது; வெளியே கொண்டு வருவது என அனைத்துவிதமான உதவிகளையும் இந்த போலீஸார் தயக்கமின்றி செய்கின்றனர்.
நாளொன்றுக்கு 30 சுற்றுகள்
காலை 8 அல்லது 9 மணியளவில் துவங்கும் இவர்களின் ரோந்துப் பணி, பிற்பகல் 12 மணி வரை நீடிக்கிறது. இதில் அவர்கள் 15 சுற்றுகளை (ரவுண்டு) நிறைவு செய்கின்றனர். பிறகு, மாலை 4 மணிக்கு துவங்கி இரவு 10 மணி வரை 20 சுற்றுகளை நிறைவு செய்கின்றனர். இவ்வாறு நாளொன்றுக்கு சராசரியாக 30லிருந்து 35 சுற்றுகள் வரை ரோந்து சென்று கண் கொத்திப் பாம்பாக நிலவரங்களை கண்காணிக்கின்றனர்.
'விசித்திரமாக உள்ளது'
இதுகுறித்து மதுரைக்கு வந்துள்ள சென்னையை சேர்ந்த சசி கூறுகையில், "பக்தர்களின் பாதுகாப்புக்கு சைக்கிளில் போலீஸார் ரோந்து வருவதை பார்ப்பதே விசித்திரமாக உள்ளது. வழக்கமாக கார், ஜீப், பைக் என்று காவலர்களைப் பார்த்து பழகிய எங்களுக்கு சைக்கிள் ரோந்து என்பது வியப்பாக உள்ளது" என்கிறார்.

மீனாட்சி அம்மன் கோவிலில் சுற்றுலா வழிகாட்டியாக பணிபுரியும் மணிகண்டன் கூறுகையில்,"சித்திரை வீதிகளில் சைக்கிள் உட்பட எந்தவித வாகனங்களுக்கும் அனுமதி கிடையாது. சைக்கிளில் வலம் வரும் காவலர்கள், தொடர்ந்து பொதுமக்களையும், பக்தர்களையும் 'அலர்ட்' செய்தபடியே செல்கின்றனர். அதனால் திருட்டு சம்பவங்கள் நிகழ வாய்ப்பில்லை. பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் பாதுகாப்பான ஒரு சூழலை இது உருவாக்கியுள்ளது" எனக் கூறினார்.

'பாதுகாப்பாக உணர்கிறோம்'
வடக்கு சித்திரை வீதியில் கடை வைத்திருக்கும் அங்கயற்கண்ணி கூறுகையில், "சைக்கிள் போலீசார் கோவிலுக்கு வருகின்ற அனைத்து பக்தர்களையும் தொடர்ந்து கண்காணித்த வண்ணம் உள்ளனர். மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி பெரும்பாலும் திருட்டு பயம் இல்லை என்றாலும், தற்போது பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் காரணத்தால், இதுபோன்ற முயற்சிகள் உண்மையிலேயே வரவேற்கத்தக்கது. போலீஸார் சைக்கிளில் ரோந்து செல்வதாக பாதுகாப்பாக உணர்கிறோம்" என்கிறார்.
'ஃப்ளாஷ்பேக் போல உள்ளது'
இதுகுறித்து மதுரையை சேர்ந்த 80 வயதுள்ள பெரியவர் ஒருவர் நம்மிடம் பேசும்போது, "50 ஆண்டுகளுக்கு முன்னால் காவல்துறையினர் மட்டும்தான் சைக்கிளில் வருவார்கள். அப்போது சைக்கிள் புழக்கம் பொதுமக்களிடம் அவ்வளவாக இல்லை. போலீசாரின் சைக்கிள் வருகை மக்களுக்கும் நெருக்கமாக இருந்தது.
தற்போது, அதேபோல சைக்கிள் ரோந்தினை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைமுறைப்படுத்தியிருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனது இளமைக் காலத்துக்கு சென்றது போல உள்ளது" என்றார்.
மதுரையில் ரோந்து வரும் 'சைக்கிள் போலீஸ்'; சுழலும் சைரனுடன் 'மாஸ் என்ட்ரி' - என்ன விசேஷம்?#madurai | #cyclepolice | #meenakshiammantemple | #kovilKumbabishekam | #Sep17th | #EtvBharatTamilNaduhttps://t.co/Cjhti5Pi7L pic.twitter.com/effdHN96qx
— ETV Bharat Tamil Nadu (@ETVBharatTN) August 30, 2026
சென்னை - டெல்லி - மணிப்பூர்
கடந்த 2016, 2021 ஆகிய ஆண்டுகளில் சென்னை மாநகரத்தில் போலீஸாரின் சைக்கிள் ரோந்து நடைமுறைப்படுத்தப்பட்டது. அந்தந்த பகுதிகளில் சட்ட விரோத செயல்பாடுகளை காவலர்கள் அறிந்து கொள்வதற்கு இந்து முறை நல்ல வாய்ப்பாக இருந்தது.
அதேபோன்று, டெல்லி காவல்துறையிலும் 2017-ஆம் ஆண்டு சைக்கிள் போலீஸ் ரோந்து தொடங்கப்பட்டது. 2018ஆம் ஆண்டு மணிப்பூரிலும் சைக்கிள் ரோந்து போலீஸ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
காவல்துறை அதிகாரிகள் சொல்வது என்ன?
இதுகுறித்து மதுரை மாநகர காவல்துறை உயரதிகாரிகள் கூறுகையில், "இது ஒரு சோதனை அடிப்படையிலான முயற்சிதான். எனினும், மக்களின் வரவேற்பை பொறுத்து இதனை விரிவுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும். இந்த நடைமுறையின் மூலம் போலீஸாரின் உடல் நலனும் பேணப்படுகிறது. மக்களுக்கும் பாதுகாப்பு உணர்வு மேலோங்குகிறது" என்றனர்.

