டிஜிட்டல் அரெஸ்ட்டில் சிக்கிய விஞ்ஞானியின் ரூ. 57 லட்சம் எங்கே? சென்னை சைபர் கிரைம் பரபரப்பு தகவல்
ராமசாமிக்கு வந்த வாட்ஸ்அப் அழைப்புகள் கம்போடியாவின் புனோம் பென் நகரில் இருந்து வந்திருப்பதை சைபர் கிரைம் போலீசார் கண்டறிந்துள்ளனர்.

Published : December 15, 2025 at 10:32 PM IST
சென்னை: பத்மபூஷன் விருது பெற்ற விஞ்ஞானி ராமசாமியிடம் இருந்து சைபர் மோசடி கும்பல் ஏமாற்றிய 57 லட்சம் ரூபாய் வெளிநாடுகளில் கிரிப்டோகரன்சியாக மாற்றப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் முன்னாள் செயலாளராக பணிபுரிந்தவர் சென்னையைச் சேர்ந்த டி. ராமசாமி (77). புகழ்பெற்ற தோல் விஞ்ஞானி மற்றும் ஆராய்ச்சியாளரான இவருக்கு கடந்த 2001 ஆம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதும், 2014 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருதும் வழங்கியது.
இந்நிலையில், இவர் தற்போது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தோல் தொழில்நுட்ப விசிடிங் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், ராமசாமியை கடந்த செப்டம்பர் மாதம் சைபர் மோசடி கும்பல் டிஜிட்டல் அரெஸ்டில் வைத்து மிரட்டி ரூ.57 லட்சத்தை ஏமாற்றியது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து ராமசாமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார்.
புகாரின் அடிப்படையில், சைபர் கிரைம் தனிப்படை குழுவினர் நடத்திய விசாரணையில், ராமசாமி அனுப்பிய பணம் கிரிப்டோகரன்சியாக மாற்றப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது, ராமசாமியின் வாங்கி கணக்கில் இருந்து வெவ்வேறு கணக்கிற்கு பணத்தை அனுப்ப வைத்துள்ளனர். அதன் பிறகு வெவ்வேறு பகுதிகளில் காசோலைகள் மூலம் பணம் எடுக்கப்பட்டு, பணப் பரிவர்த்தனை தடயத்தை மறைப்பதற்காக கிரிப்டோகரன்சியாக மாற்றியுள்ளனர். பணத்தை எடுப்பதற்கும், பண மோசடி நடவடிக்கைகளை எளிதாக்குவதற்கும் முகவர்களைப் பயன்படுத்தி, அதே நாளில் அந்த நிதி விரைவாக வெளிநாடுகளுக்கு மாற்றப்பட்டதும் தெரிய வந்துள்ளது.
ராமசாமிக்கு வந்த வாட்ஸ்அப் அழைப்புகளை குறித்து மேம்பட்ட தொழில்நுட்ப உதவியுடன் அலசிய சைபர் கிரைம் போலீசார், அவை கம்போடியாவின் புனோம் பென் நகரில் இருந்து வந்ததை கண்டறிந்துள்ளனர்.
மேலும், இடைத்தரகர் கணக்குகளில் பெறப்பட்ட நிதியை பல வங்கிக் கணக்குகளில் பரவலாக்கப்பட்டு, போலி நிறுவனங்கள் மூலம் பல அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டு, இறுதியில் வெளிநாட்டு கிரிப்டோகரன்சியாக மாற்றப்பட்டுள்ளன. இந்த ஆன்லைன் பரிவர்த்தனைகள் டோக்கியோ மற்றும் சிங்கப்பூரில் இருந்து இயக்கப்பட்டுள்ளன என்பதையும் சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து இந்த வழக்கு குறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இதுபோன்ற மோசடியால் ஏதேனும் பண இழப்பு ஏற்பட்டால், உடனடியாக 1930 என்ற இணையக் குற்ற உதவி எண் மற்றும் https://cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் புகார் அளிக்குமாறும் காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

