ETV Bharat / state

ஓபிஎஸ் திமுகவின் 'பி' டீம் மட்டுமல்ல பினாமியும் ஆவார் - சி.வி.சண்முகம் பரபரப்பு பேட்டி

அதிமுகவை அழிக்க வேண்டும் என்றால் அதிமுகவிலேயே ஒருவரை கைக்கூலியாக மாற்றி சின்னத்தை முடக்கிட தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் இந்த ஓபிஎஸ்.

சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 27, 2026 at 5:59 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: ஓபிஎஸ் திமுகவின் 'பி' டீம் மட்டுமல்ல, பினாமியும் ஆவார் என அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டினார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தலைமையில் கட்சியின் வழக்கறிஞர் பிரிவுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக வேட்பாளரின் தகுதி, தகுதியின்மை, விருப்பமனு மீதான தகுதி உள்ளிட்ட பல குறிப்புகள் அடங்கிய 'தேர்தல் முகவர் கையேடு 2026' என்ற பெயரில் புத்தகம் வழங்கப்பட்டது.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம், 'முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின் பல்வேறு சோதனை, இன்னல்கள் கடந்து கட்சி இரண்டாக பிளவுபட்டு சின்னம் முடக்கப்பட்டது. அதன்பின் எஃகு கோட்டையாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் வீரநடை போடுகிறோம். ஓபிஎஸ் அதிமுகவை பிளவுப்படுத்தி உள்ளிருந்தே தர்ம யுத்தம் பெயரில், இரவோடு இரவாக அனைவரிடமும் கையெழுத்து பெற்று பதவி ஏற்றுக்கொண்டார். ஓபிஎஸ்-க்கு தேவைப்பட்டால் நண்பர்கள், இல்லையென்றால் துரோகிகள் என கால சூழ்நிலைக்கு ஏற்ப பச்சோந்தி போல மாறிக்கொண்டிருந்தார்.

ஓபிஎஸ் அதிமுகவுக்கு பிடித்த சனி. அவர் தானாக செயல்படவில்லை. ஒருவர் தூண்டுதலின் பேரில் மிகப்பெரிய சதி வலையை பின்னினார். நண்பன் துரோகியாக மாறினால் 1000 எதிரிக்கு சமம். அதிமுகவை அழிக்க வேண்டும் என்றால் அதிமுகவிலேயே ஒருவரை கைக்கூலியாக மாற்றி சின்னத்தை முடக்கிட தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் இந்த ஓபிஎஸ். இன்று அவர் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அதிமுகவில் இருந்துக்கொண்டே கட்சி பணிகளை தடுக்கும் வேலையை செய்து கொண்டிருந்தார்.

அதிமுக கொடுத்த சேர்மன், நகர் மன்ற தலைவர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், முன்னாள் முதலமைச்சர், ஒருங்கிணைப்பாளர் பதவிகளையும், அதிமுக அலுவலகத்தையும் தனது காலால் எட்டி உதைத்து களங்கப்படுத்தினார். அதனை அடுத்து அவரை கட்சியில் இருந்து நீக்க பொதுக்குழுவில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்பின் அழுதார், உருண்டார், புரண்டார், நியாயஸ்தன் போல எந்த பதவியும் வேண்டாம் என கூறினார். ஆமையை வீட்டிற்குள் விட்டால் நாசம் செய்து விடும். சசிகலா, டிடிவி தினகரன் ஒன்றிணைய வேண்டும் என ஒருமுறை கூட மூவரும் ஒன்றாக சேர்ந்து பார்க்கவில்லை.

நாங்கள் அன்று சொன்னது இன்று நிரூபணமாகி விட்டது. ஓபிஎஸ் திமுகவின் 'பி' டீம் மட்டுமல்ல பினாமியும் ஆவார். இதை அனைத்தும் செய்தது திமுக. துரோகம் என்றுமே ஜெயித்ததாக சரித்திரம் இல்லை. அதிமுகவினருக்கு இன்று தான் பொங்கல், தீபாவளி. தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். பிடித்த சனி விட்டுவிட்டது. துணை முதல்வராக ஒபிஎஸ் இருந்தபோது தான் தேனி மாவட்டத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தோல்வி தழுவியது'' என தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'என்னது... தாய்க்கழகமா? என்னால் ஜீரணிக்க முடியவில்லை': ஓபிஎஸ்ஸை விமர்சித்த தமிழிசை செளந்தரராஜன்