ETV Bharat / state

பாலங்களில் ஏற்படும் டடக்... டடக்... சத்தத்திற்கு தீர்வு - சிஎஸ்ஐஆர் அமைப்பின் அசத்தல் முயற்சி

இந்த தொழில்நுட்பம் வழக்கமான பால விரிவாக்க இணைப்புகளுடன் ஒப்பிடுகையில், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு செலவுகள் இரண்டையும் குறைக்கிறது.

பாலம் மற்றும் விஞ்ஞானி சிந்துவின் புகைப்படம்
பாலம் மற்றும் விஞ்ஞானி சிந்துவின் புகைப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 26, 2026 at 8:42 PM IST

3 Min Read
Choose ETV Bharat

சென்னை: பொறியியல் சிமென்டேஷன் கலவைகளை பயன்படுத்தி விரிவாக்கம் மற்றும் இணைப்பு இல்லாத மேம்பாலத்தின் தளம் அமைப்பதற்கான தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளார் சிஎஸ்ஐஆர் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி சிந்து.

போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பயணத்தை எளிதாக்கவும் சாலையில் ஆங்காங்கே பாலம் கட்டப்பட்டிருப்பதை பார்த்திருப்போம். அந்த பாலத்தில் செல்லும்போது, டடக்.. டடக் என வாகனங்கள் லேசாக தூக்கிப் போடுவதையும் நம்மால் உணர முடியும். இதனால், பாலத்தின் குறிப்பிட்ட இணைப்புப் பகுதியில் மட்டும் நாம் வாகனத்தின் வேகத்தை குறைத்து ஓட்டுவோம்.

அதாவது, பாலத்தின் நடுவே சிறிய அளவு இடைவெளி விட்டு இரும்பு சட்டங்களை பொருத்தியிருப்பார்கள். அதன் காரணமாகவே, வாகனம் பாலத்தில் வேகமாக செல்லும் போது லேசாக தூக்கிப் போடும். பாலத்தில் இடைவெளி வைப்பதன் மூலம், வெப்பத்தினால் பாலம் விரிவடையும்போது, மீதம் உள்ள பகுதிகளுக்கு சிமெண்ட் பாலத்தின் அழுத்தம் போகாமல் தடுப்பதற்கும், அது விரியும் அளவிற்கு ஏற்ப வளைந்து கொடுக்கவும் இந்த அமைப்பு வைக்கப்படுகிறது.

விஞ்ஞானி சிந்து பேட்டி (ETV Bharat Tamil Nadu)

நீண்டகால தீர்வு

என்னதான் தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும், இதற்கு ஒரு தீர்வு இல்லையா? என்ற வாகன ஓட்டிகளின் ஏக்கத்திற்கு தீர்வு கிடைத்துவிட்டது. அதற்கான தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த சென்னை தரமணியில் உள்ள சிஎஸ்ஐஆர் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் மூத்த முதன்மை விஞ்ஞானி பெ.சு.சிந்து, வாகன ஓட்டிகளின் வயிற்றில் பால் வார்த்துவிட்டார். இதனால், வாகனங்கள் தூக்கிப் போட்டு வரும் டடக்.. டடக் என்ற சத்தமே வராது என்கிறார் அவர்.

இதுகுறித்து விஞ்ஞானி பெ.சு.சிந்து கூறியதாவது, “பாலங்களில் செல்லும்போது, சில இடத்தில் லேசாக தூக்கிப் போடுவதை அனுபவித்திருப்போம். அதற்கு காரணம் மேம்பாலத்தில் பொருத்தப்பட்டிருக்கும், 2 கம்பிகள் தான். இதனால் வாகனத்தின் வேகத்தைக் குறைத்து இயக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. வழக்கமாக பாலங்கள் கட்டும்போது, அதன் உறுதித்தன்மை மற்றும் அதன் மீது விழும் அழுத்தத்தை குறைப்பதற்காகவும், கான்கிரிட் மீது குறிப்பிட்ட அளவில் வெப்ப தாக்கத்தில் பாலம் விரிவடையும் என்பதற்காக, வழக்கமான பாலங்களில் விரிவாக்க மூட்டுகள் நீண்ட காலமாக அமைக்கப்படுகிறது.

சிஎஸ்ஐஆர் கண்டுபிடித்துள்ள தொழில்நுட்பம்
சிஎஸ்ஐஆர் கண்டுபிடித்துள்ள தொழில்நுட்பம் (ETV Bharat Tamil Nadu)

பழைய பாலத்திற்கு பராமரிப்பு செலவு அதிகம்

இதன்மூலம் பாலம் தட்ப நிலையில் விரிவடையும் போதும், வெயில் குறையும் போது மீண்டும் பழைய நிலைக்கு வரும். இந்த நிலையை சரி செய்வதற்காக பாலத்தின் தூண்களுக்கு மேற்பகுதியில் இணைப்பு உள்ள இடங்களில் இரும்பு பட்டைகளை பொருத்தப்பட்டிருக்கும். வெயில் தாக்கம் அதிகரித்து, பாலம் 2 மில்லி மீட்டர் முதல் 25 மில்லி மீட்டர் வரையில் விரிவடையும் வகையில், அந்தந்த பகுதியின் வெப்பத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டு இருக்கும்.

ஆனால், பாலத்தின் இடையே போடப்பட்டுள்ள இணைப்பு கம்பிகளுக்கு இடையே குப்பைகள், மண் சேரும்போது அதன் தன்மை மாறிவிடும். மேலும் மழைக்காலங்களில் தண்ணீர் இதன் வழியாக இறங்கி பாலத்தின் கீழே அமைக்கப்பட்டுள்ள தூண்களின் மீதும் விழும். இதனால் அதன் உறுதித்தன்மை குறைந்து, பாலத்தின் காலமும் குறையும். ஒரு பாலம் கட்டப்பட்ட பிறகு அதன் ஆயுட்காலம் 100 ஆண்டுகள் என்றால், இணைப்பு கம்பிகளின் காலம் 25 ஆண்டுகள் தான் இருக்கும். அதற்கு ஏற்ப அதனை மாற்ற வேண்டும். இதனால் பராமரிப்பு செலவும் அதிகரிக்கும்.

சிஎஸ்ஐஆர் கண்டுபிடித்துள்ள தொழில்நுட்பத்தின் மாடல்
சிஎஸ்ஐஆர் கண்டுபிடித்துள்ள தொழில்நுட்பத்தின் மாடல் (ETV Bharat Tamil Nadu)

CSIR-ன் புதிய முயற்சி

இதுபோன்ற சவாலை எதிர்கொள்ள CSIR-கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம், ஒரு புதுமையான மற்றும் வலுவான பொறியியல் சிமென்டேஷன் கலவைகளை பயன்படுத்தி, விரிவாக்க இணைப்பு பாலம் அமைப்புக்கான தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. அதன்படி சிமெண்ட் உடன் சில கலவைகளை இணைத்து, பாலத்தில் இணைப்புப் பகுதி அமைக்க வேண்டிய இடம் கான்கிரிட் மூலம் போடப்படும். அருகிலுள்ள எளிய இடைவெளி கர்டர்களை இணைக்கிறது. மேலும், வாகனங்கள் பாலத்தில் செல்லும்போதும், தட்ப வெட்ப நிலைக்கும் ஏற்ப, இணைப்பு அடுக்குகள் எதிர்மறை வளைவை அளிக்கிறது.

அப்படி என்ன சிறப்பு?

பெரும்பாலும் இழுவிசை விரிசல்களை உருவாக்குகின்றன. வழக்கமான நடைமுறைக்கு இழுவிசை விரிசல் அகலங்களைக் கட்டுப்படுத்த இணைப்பு அடுக்குகளில் அதிக வலுவூட்டல் தேவைப்படுகிறது. இதன் விளைவாக தேவையற்ற விரிசல், வடிவமைப்பு சிக்கல்கள் மற்றும் கட்டுமான சவால்கள் ஏற்படுகின்றன. ஆனால், CSIR சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கான்கிரீட்டை (eCON) பயன்படுத்தியுள்ளது. இது அதிக இழுவிசை வலிமை, உயர்ந்த நீர்த்துப் போகும் தன்மை மற்றும் விரிசல் கட்டுப்பாட்டு பண்புகளை கொண்ட நுண்ணிய இயந்திர ரீதியாக வடிவமைக்கப்பட்ட சிமென்டிஷியஸ் கலவையாகும்.

சாதாரண கான்கிரீட்டை போல் இல்லாமல், eCON அதிக வளையும் தன்மையையும், குறியீட்டையும் பெரிய சிதைவுகளுக்கு இடமளிக்கும் திறனையும் கொண்டுள்ளது. இணைப்பு அடுக்குகள் கனமான வலுவூட்டலை நம்பாமல், திறம்படச் செயல்பட அனுமதிக்கிறது. இது ஒரு பிரிட்ஜ் டெக் அமைப்பாகும். கட்டமைப்பு ரீதியாக திறமையானது, கட்டமைக்க எளிதானதாகவும், பல ஆண்டுகள் நீடிக்கக் கூடியது.

இதையும் படிங்க: தாம்பரம் முதல் கடற்கரை வரை கட்டணமில்லா பேருந்து வசதி: தெற்கு ரயில்வே ஏற்பாடு

இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்போது, இணைப்பு இருப்பு கம்பிகள் அகற்றப்படுகிறது. அதன்மூலம் பாலங்களுக்குள் நீர் செலுத்துதல், குப்பைகள் மற்றும் வெப்பத்தால் ஏற்படும் வழக்கமான சேதங்களை தவிர்க்கும். வழக்கமான விரிவாக்க இணைப்புகளுடன் ஒப்பிடுகையில், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு செலவுகள் இரண்டையும் குறைக்கிறது. வாகனங்கள் மென்மையான சவாரிகளை அனுபவிக்கின்றன. அதிக ஆறுதல் மற்றும் குறைந்த தேய்மானத்திற்கு பங்களிக்கின்றன. தொடர்ச்சியான வாகன அதிர்வுகள் மற்றும் ஆற்றல் இழப்புகளை குறைக்கின்றன. இதன்மூலம் எரிபொருள் செயல்திறனை மேம்படுத்துகின்றன.

பாலத்தின் வடிவமைப்பு காட்சி
பாலத்தின் வடிவமைப்பு காட்சி (ETV Bharat Tamil Nadu)

விரைவில் பயன்பாட்டிற்கு

இதை புதிய கட்டுமானங்கள் மற்றும் ஏற்கனவே உள்ள பாலங்களுக்கான மறுசீரமைப்புகளாக வடிவமைக்க, கட்டமைக்க மற்றும் பயன்படுத்த முடியும். இந்த அமைப்பு செலவு குறைந்த, பராமரிப்பு இல்லாத மற்றும் அதே கான்கிரீட் மூலம் எளிதில் சரிசெய்யக்கூடியது. பல்வேறு சுற்றுச்சூழல் வெளிப்பாடுகள் மற்றும் வெப்பநிலைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும்.

இத்தனை சிறப்பம்சங்கள் கொண்ட இது இந்தியாவின் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் ஒரு பெரிய மாற்றாக இருக்கும். இதனை தேசிய நெடுஞ்சாலைத்துறை, சாலை போக்குவரத்து நிறுவனம் போன்றவற்றுக்கு அளித்துள்ளோம். பரிசோதனை முடிவடைந்து தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வர தயாராக உள்ளது” என்றார்.