ETV Bharat / state

33 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து | சென்னை பேருந்து நிலையங்களில் அலை மோதும் பயணிகள் கூட்டம்

சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டாலும் பயணிகள் அதிகப்படியாக உள்ள காரணத்தினால், ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகரித்துள்ளது. ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி வருகின்றனர்.

ரயில் நிலையத்தில் அலை மோதும் கூட்டம்
ரயில் நிலையத்தில் அலை மோதும் கூட்டம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : July 12, 2026 at 3:08 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இன்று 33 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை பேருந்து நிலையங்களில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான ரயில் தண்டவாள பாதையில் பராமரிப்பு பணி மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை 33 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் ஏற்கெனவே வெளியிட்டிருந்த அறிவிப்பில் 41 மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பராமரிப்பு பணிகளின் நேரம் மாற்றப்பட்டதை தொடர்ந்து ரயில்வே சென்னை கோட்டம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

புறநகர் ரயில் நிலையத்தில் அலை மோதும் கூட்டம்
புறநகர் ரயில் நிலையத்தில் அலை மோதும் கூட்டம் (ETV Bharat Tamil Nadu)

அதில் எட்டு மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும் எனவும், இதனால் மீதமுள்ள 33 புறநகர் மின்சார ரயில்கள் மட்டுமே ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இயக்கப்படும் 8 மின்சார ரயில்களின் விவரம்

  • காலை 10:30 மணிக்கு சென்னை கடற்கரை முதல் தாம்பரம்
  • காலை 10.45 மணிக்கு சென்னை கடற்கரை – செங்கல்பட்டு
  • பிற்பகல் 3.15 – சென்னை கடற்கரை – தாம்பரம்
  • பிற்பகல் 3.45 – சென்னை கடற்கரை – தாம்பரம்
  • காலை 9.30 – செங்கல்பட்டு – சென்னை கடற்கரை
  • காலை 10.45 – தாம்பரம் – சென்னை கடற்கரை
  • பிற்பகல் 2.25 - செங்கல்பட்டு – சென்னை கடற்கரை
  • பிற்பகல் 3.30 – தாம்பரம் – சென்னை கடற்கரை

மேலும், இதைத் தவிர பயணிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில் தாம்பரம் - செங்கல்பட்டு, தாம்பரம் - அரக்கோணம், தாம்பரம் - திருமால்பூர், செங்கல்பட்டு - காஞ்சிபுரம், திருமால்பூர் - தாம்பரம் ஆகிய சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் இன்று காலை 11:00 மணி முதல் ஆயிரக்கணக்கான பயணிகள் தாம்பரம், பெருங்களத்தூர், பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் குவிந்தனர். இதனால் பேருந்து நிலையங்களில் கடுமையான கூட்டல் நெரிசல் ஏற்பட்டது. சிறப்பு பேருந்துகளிலும் கூட்டம் அலைமோதுகிறது.

இதையும் படிங்க: இளைஞர் வெட்டி படுகொலை; நெல்லையில் பட்டப்பகலில் பயங்கரம்

சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டாலும் பயணிகள் அதிகப்படியாக உள்ள காரணத்தால், முந்தியடித்துக்கொண்டு ரயிலில் ஏறும் நிலை உள்ளது. இதன் காரணமாக ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி வருகின்றனர்.

ரயில்களுக்காக செல்லும் பொதுமக்கள்
ரயில்களுக்காக செல்லும் பொதுமக்கள் (ETV Bharat Tamil Nadu)

தாம்பரம் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களை சுற்றிய முக்கிய சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஜிஎஸ்டி சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாட்களில் கூடுதல் எண்ணிக்கையில் சிறப்பு மின்சார ரயில்களை இயக்கவும், கூடுதல் மாநகர பேருந்துகளை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.