இந்திய கம்யூ. மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நிலையில் பின்னடைவு; மருத்துவமனை விரைந்த முதலமைச்சர்
நல்லகண்ணு உடல்நிலை பின்னடைவை சந்தித்து வருவதாக தகவல் வெளியான நிலையில், முதல்வர் ஸ்டாலின் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு விரைந்து வந்து மருத்துவர்களிடம் அவரின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.

Published : February 23, 2026 at 7:43 PM IST
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலை தொடர்ந்து பின்னடைவு சந்தித்து வருவதாக அக்கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாடு அரசியலின் மிக முக்கியமான ஆளுமையுமான ஆர். நல்லகண்ணு, உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 101 வயதான மூத்த தலைவர் நல்லகண்ணு, கடந்த சில காலமாகவே வயது முதிர்வு மற்றும் உடல்நலப் பிரச்சினைகளால் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.
இது போன்ற சூழலில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி எதிர்பாராத விதமாக வீட்டில் தவறி விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அப்போது அவருக்கு மூச்சுத் திணறல் பாதிப்பும் உண்டானதால், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்த அவர் வீடு திரும்பினார்.
ஆனால், அவருக்கு அவ்வப்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு வந்த நிலையில், பிப்ரவரி 1 ஆம் தேதி இரவு திடீரென பாதிப்பு அதிகரித்தது. இதையடுத்து, அவர் உடனடியாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு நல்லகண்ணுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், மூத்த மருத்துவர்கள் அடங்கிய ஒரு சிறப்புக் குழு அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

| இதையும் படிங்க: 'சஹர்' உணவு தயாரிக்கும் பணியில் இந்துப் பெண்மணி - மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டு |
குறிப்பாக, வயது முதிர்வு காரணமாக அவருக்கு சுவாசப் பிரச்சினைகள் மீண்டும் மீண்டும் ஏற்படுவதால், அவருக்கு தேவையான உயர்தர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. தற்போது, உடல் நிலையில் முன்னேற்றம் அடைவது குறைவாக உள்ளதால், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து விசாரிக்க ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு வருகை தந்தார். முதல்வரிடம் டீன் சாந்தாராமன் நல்லகண்ணு உடல்நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
அதனைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நல்லகண்ணு உடல்நிலை தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது. வாழ்நாள் முழுவதும் நாட்டுக்காக போராடியவர் தற்போது இயற்கையுடன் போராடி வருகிறார்" என வேதனையுடன் தெரிவித்தார்.

