ETV Bharat / state

வெனிசுலா அதிபர் கைது - சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்

இந்திய மக்கள் வெனிசுலாவுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநிலச் செயலாளர் முத்தரசன் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 6, 2026 at 5:59 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: அமெரிக்க அரசு வெனிசுலா அதிபரை கைது செய்ததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

வெனிசுலா நாட்டின் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தி அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்த அமெரிக்க அரசை கண்டிக்கும் விதமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் முத்தரசன் தலைமையில் அக்கட்சியினர் அண்ணா சாலையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் இருந்து பேரணியாக சென்று அமெரிக்க தூதரத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து முத்தரசன் உள்ளிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்து பேருந்தில் அழைத்துச் சென்றனர்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன், ”அமெரிக்க நாடு வெனிசுலா நாட்டின் மீது படையெடுத்து பெரும் தாக்குதலை நடத்தியது. மேலும், அந்த நாட்டின் அதிபரையும், அவரது மனைவியையும் கடத்தல் கும்பலை போல கப்பலில் கடத்திச் சென்று அமெரிக்க சிறையில் அடைத்துள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை அமெரிக்கா கைது செய்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. அமெரிக்காவுக்கு எதிராகவும், வெனிசுலாவுக்கு ஆதரவாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் தற்போது போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்திய நாடும், இந்திய நாட்டு மக்களும் வெனிசுலாவுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். ஆனால் மோடி மட்டும் அமெரிக்காவுக்கு ஆதரவாக இருக்கிறார். ஜனநாயகத்தின் மீது அக்கறை உள்ள அனைவரும் அமெரிக்காவுக்கு எதிராக தனது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்” என்றார்.

வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்த நிலையில், கடந்த 3ஆம் தேதி வெனிசுலா மீது தாக்குதல் நடத்தி அந்நாட்டு அதிபரை அமெரிக்க ராணுவம் சிறைபிடித்தது. தொடர்ந்து விமானம் மூலம் அவர் வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார். இந்நிலையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு வெனிசுலா நாடாளுமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கு - அதிகாரிகளிடம் இழப்பீடு வசூலிக்க நீதிமன்றம் உத்தரவு

மேலும், வெனிசுலா உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி டெல்சி ரோட்ரிகஸ் இடைக்கால அதிபராக பதவி ஏற்றுள்ளார். வெனிசுலா அதிபர் கைது செய்யப்பட்டது குறித்து பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், "நாங்கள் வெனிசுலாவில் ஆட்சி செய்ய போகிறோம். அங்கு அமைதியை ஏற்படுத்தவே அமெரிக்கா விரும்புகிறது. அந்நாட்டில் உள்ள எண்ணெய் வளங்களை முறைப்படுத்தி, அதன் மூலம் பணம் ஈட்டி அந்நாட்டின் வளர்ச்சிக்கு கொடுக்க போகிறோம்" என தெரிவித்தார்.