நல்லகண்ணு உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - இந்திய கம்யூ. மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் உருக்கமான வேண்டுகோள்
வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக போராடிய தலைவர் தற்பொழுது தனக்குத்தானே போராடிக் கொண்டிருக்கிறார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Published : February 25, 2026 at 1:35 PM IST
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ள நிலையில், மருத்துவமனையின் அதிகாரப்பூர்வ அறிக்கை வரும்வரை எத்தகைய தகவல்களையும் நம்ப வேண்டாம் என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுதந்திர போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான ஆர். நல்லகண்ணு வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 15 நாட்களாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நல்லகண்ணுவின் உடல்நிலை மேலும் மோசமடைந்ததை தொடர்ந்து நேற்று மாலை முதல் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வரும் நல்லக்கண்ணுவின் உடல்நிலை குறித்து அறிய தொடர்ச்சியாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்ற வண்ணம் உள்ளனர். இந்நிலையில், இன்று காலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி. ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்டோர் மருத்துவமனைக்குச் சென்று நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.
| இதையும் படிங்க: கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் 9 பேர் விடுதலை: கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்த உயர்நீதிமன்றம் |
அதன்பிறகு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நல்லக்கண்ணுவின் மீது அக்கறை கொண்டு, தமிழகம் முழுவதும் உள்ள உழைப்பாளி மக்கள், அவர் உடல்நலம் தேறி வரவேண்டும் என்று, எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக போராடிய தலைவர் தற்பொழுது தனக்குத்தானே போராடிக் கொண்டிருக்கிறார். அவர் உடல் நலம்பெற்று திரும்பி வருவார் என்று நாங்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வீரபாண்டியன், “தன் வாழ்வின் பெரும்பகுதியை நாட்டிற்காகவும் மக்களுக்காகவும், அர்ப்பணித்த ஒரு தலைவர். இன்று அவர் இயற்கையோடு போராடிக் கொண்டிருக்கிறார். மருத்துவமனையின் அதிகாரப்பூர்வ அறிக்கையின் அடிப்படையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, நல்லக்கண்ணு உடல்நலம் குறித்த தகவல்களை தெரிவிக்கும். அதுவரை எத்தகைய தகவல்களை நம்ப வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.

