மயிலை சிவக்குமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி சரண்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு
கடந்த 1997-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ரவுடி தோட்டம் சேகரின் கொலைக்கு பழி வாங்க சேகரின் மகன்கள் இருவர் திட்டம் தீட்டி 24 ஆண்டுகளுக்கு பிறகு சிவக்குமாரை கொலை செய்தது தெரிய வந்தது

Published : December 15, 2025 at 4:36 PM IST
சென்னை: ரவுடி மயிலை சிவக்குமார் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த முக்கிய குற்றவாளியான ரவுடி அழகு ராஜாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க சென்னை 3-வது, கூடுதல் அமர்வு நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.
சென்னை மயிலாப்பூரில் பிரபல ரவுடியாக வலம் வந்த சிவக்குமார் மீது 3 கொலை வழக்குகள், 10 கொலை முயற்சி வழக்குகள் என உள்ளிட்ட 35 வழக்குகள் இருந்தன. கரோனா காலத்தில் காவல் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த ரவுடி மயிலை சிவக்குமார் ஜாமீனில் வெளியே வந்த நிலையில் கடனை வசூலிக்க சென்ற இடத்தில், அசோக் நகரில் 2021 ஆம் ஆண்டு மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக அசோக் நகர் காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் குற்றவாளிகள் 5 பேர் கள்ளக்குறிச்சி நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்ததாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, கள்ளக்குறிச்சி விரைந்த அசோக் நகர் காவல் துறை 5 பேரையும் நீதிமன்ற அனுமதியுடன் புழல் சிறையில் அடைத்தது.
காவல் துறை விசாரணையில் கடந்த 1997-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ரவுடி தோட்டம் சேகரின் கொலைக்கு பழி வாங்க சேகரின் மகன்கள் இருவர் திட்டம் தீட்டி 24 ஆண்டுகளுக்கு பின் சிவக்குமாரை கொலை செய்தது தெரிய வந்தது. இந்த வழக்கில் மேலும் சிலரை காவல் துறையினர் தேடி வந்தனர்.
இந்த நிலையில் சிவக்குமார் கொலையில் தேடப்பட்டு வந்த தோட்டம் சேகரின் மகனும், முக்கிய குற்றவாளியுமான ரவுடி அழகு ராஜா, சென்னை 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கே. கீதா ராணி முன்பு இன்று (டிசம்பர் 15) சரண் அடைந்தார்.
நீதிமன்றத்தில் சரண் அடைந்த அழகு ராஜாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதை அடுத்து பலத்த காவல் துறை பாதுகாப்புடன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழகு ராஜா மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டார். அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்ததும் புழல் சிறைக்கு காவல் துறையினர் கொண்டு சென்று அடைத்தனர்.

