ETV Bharat / state

அஜித்குமார் கொலை வழக்கு; மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரத்திற்கு பிடிவாரண்ட்

டிஎஸ்பி சண்முகசுந்தரம் தலைமறைவாக இருப்பதாக அவர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்ததால் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.

போலீஸ் கஸ்டடியில் அஜித்குமார் தாக்கப்பட்டதாக வெளியான வீடியோ காட்சி
போலீஸ் கஸ்டடியில் அஜித்குமார் தாக்கப்பட்டதாக வெளியான வீடியோ காட்சி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 25, 2026 at 9:47 PM IST

2 Min Read
Choose ETV Bharat

மதுரை: திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரத்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளியாக அஜித்குமார் எனும் இளைஞர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூன் 27ஆம் தேதி நகை காணாமல் போனது தொடர்பான புகாரில் தனிப்படை காவலர்களால் அழைத்து செல்லப்பட்ட இவர் போலீஸ் கஸ்டடியில் அடித்து கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

பின்னர் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவுபடி சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி முதல் டி.எஸ்.பி மோஹித் குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், அஜித்குமார் கொலை சம்பவத்தன்று பணியில் இருந்த மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல்நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமார், சார்பு ஆய்வாளர் சிவக்குமார், தலைமை காவலர் இளையராஜா ஆகிய 4 பேரின் பெயர்களும் வழக்கில் சேர்த்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், இந்த வழக்கில் காவல்துறை வாகன ஓட்டுநராக இருந்த தனிப்படை காவலர் ராமச்சந்திரனை 6து குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைது கைதானார். இந்நிலையில், இந்த வழக்கு முன்னதாக விசாரணைக்கு வந்த போது, டிஎஸ்பி சண்முகசுந்தரம் உள்ளிட்ட நான்கு காவல் அதிகாரிகளும் இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், இந்த வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி செல்வ பாண்டி இன்று விடுமுறை என்பதால், மாவட்ட கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி அசன் அலி முன்பாக இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் இடம்பெற்றுள்ள டிஎஸ்பி சண்முகசுந்தரம் தவிர, திருப்புவனம் காவல்நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமார், சார்பு ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் தலைமை காவலர் இளையராஜா ஆகிய 3 பேரும் நேரில் ஆஜராகினர்.

அப்போது, டிஎஸ்பி சண்முகசுந்தரம் தலைமறைவாக இருப்பதாக அவர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனால் நீதிபதி, டிஎஸ்பி சண்முகசுந்தரத்தை சிபிஐ போலீசார் பிடித்து நாளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

மேலும், திருப்புவனம் காவல்நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமார், சார்பு ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் தலைமை காவலர் இளையராஜா ஆகிய 3 பேரையும் நாளை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜர் ஆக வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: 'மூச்சு விட முடியல..' பழுது ஏற்பட்டு 5 மணி நேரம் நின்ற விமானம்; மீண்டும் சிக்கலில் இண்டிகோ ஏர்லைன்ஸ்