ETV Bharat / state

"வா வாத்தியார்" திரைப்படம் பொது ஏலத்தில் விடப்படும் - நீதிமன்றம் எச்சரிக்கை

ஞானவேல்ராஜா தன்னை திவாலானவர் என அறிவித்தால் நீதிமன்றமே அவரது சொத்துக்களை பறிமுதல் செய்து கடனை அடைக்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 9, 2026 at 5:40 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: ஜனவரி 19 ஆம் தேதிக்குள் கடனை கொடுக்கவில்லை என்றால் "வா வாத்தியார்" திரைப்படத்தை பொது ஏலத்தில் விடுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள "வா வாத்தியார்" திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தை கடந்த ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது.

இந்த நிலையில், உயர் நீதிமன்ற சொத்தாட்சியர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தொழிலதிபர் அர்ஜுன்லால் சுந்தர் தாஸ் என்பவர்
திவாலானவர் என கடந்த 2014 ஆம் ஆண்டு அறிவித்து அவருடைய சொத்துக்களை நிர்வகிக்க சொத்தாட்சியரையும் நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திவாலானவர் என அறிவிக்கப்பட்ட அர்ஜூன்லால் சுந்தர் தாஸிடம் இருந்து ஸ்டூடியோ கிரீன் படத் தயாரிப்பு நிறுவனம் 10 கோடியே 35 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தது. அந்த தொகை வட்டியுடன் சேர்த்து தற்போது 21 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உள்ளது. அந்த தொகையை செலுத்த ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், அதுவரை "வா வாத்தியார்" திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கவும், படம் மூலம் கிடைக்கும் வருவாயை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஏற்கனவே பலமுறை ஸ்டுடியோ கீரின் நிறுவனத்திற்கு அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், முழு தொகையையும் செலுத்தவில்லை. கங்குவா, தங்கலான் உள்ளிட்ட படங்களை திரையிடுவதற்கு முன் 1 கோடி ரூபாய் நீதிமன்றத்தில் செலுத்துவதாக உறுதி அளித்து நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று திரைப்படத்தை வெளியிட அனுமதி பெற்றது.

இதுவரை 7 முறை கடனை செலுத்த ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்துக்கு அவகாசம் அளிக்கப்பட்டது. அதனால், கடனை செலுத்தாமல் "வா வாத்தியார்" படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில், நீதிமன்றத்தின் இந்த உத்தரவில் மாறுதல்கள் செய்யக் கோரி ஸ்டூடியோ கிரீன் நிறுவினம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள், எஸ்.எம். சுப்ரமணியம், குமரப்பன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தயாரிப்பாளர் தரப்பில், கடன் தொகைக்காக சுமார் 3 கோடியே 75 லட்சம் ரூபாய் பணத்தை செலுத்த தயாராக இருப்பதால் இறுதி வாய்ப்பாக "வா வாத்தியார்" திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஏற்கனவே பல முறை அவகாசம் வழங்கப்பட்டது. கடனை அடைக்கவில்லை. ஞானவேல்ராஜா தன்னை திவாலானவர் என அறிவித்தால் நீதிமன்றமே அவரது சொத்துக்களை பறிமுதல் செய்து கடனை அடைக்கும்.

'வா வாத்தியார்' திரைப்படத்தை பொது ஏலத்தில் விட்டு அதில் வரும் பணத்தில் கடனை அடைக்கலாம் என தெரிவித்த நீதிபதிகள், ஜன 19ம் தேதிக்குள் கடனை திருப்பி செலுத்தவில்லை என்றால் படத்தை பொது ஏலத்தில் விடுவதற்கான அனுமதியை நீதிமன்றம் சொத்தாட்சியிருக்கு வழங்கும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: சம்பவ இடத்தில் மத்திய தடயவியல் அதிகாரிகள் திடீர் ஆய்வு