ETV Bharat / state

தொடர் விடுமுறை: சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்களால் கடும் போக்குவரத்து நெரிசல்

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல பேருந்துகளில் பயணிகள் முண்டியடித்து ஏறினர்.

கடும் போக்குவரத்து நெரிசல்
கடும் போக்குவரத்து நெரிசல் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 1, 2026 at 1:06 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்களால் கிளாம்பாக்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மே உழைப்பாளர் தினம், சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு நேற்று (ஏப்ரல் 30) மாலை முதல் செல்லத் தொடங்கினர்.

இதனால் கிளாம்பாக்கம் அருகே உள்ள சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கார்கள், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மெல்ல மெல்ல ஊர்ந்துச் சென்றதால் ஓட்டுநர்கள், பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

பேருந்துகளில் முண்டியடித்து ஏறிய பயணிகள்
பேருந்துகளில் முண்டியடித்து ஏறிய பயணிகள் (ETV Bharat Tamil Nadu)

கிளாம்பாக்கத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோல், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசுப் பேருந்துகளில் கூட்டம் அலைமோதியது. பேருந்துகளில் ஏற பயணிகள் முண்டியடித்தனர்.

இன்று (மே 01) சித்ரா பௌர்ணமி என்பதால் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் பேருந்துகளில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. இதனால் பயணிகள் கடும் சிரமமடைந்தனர். ஆபத்தை உணராமல் திருவண்ணாமலை பேருந்துகளைத் துரத்திக் கொண்டு இருக்கையை பயணிகள் பிடித்தனர்.

இது குறித்து திருவண்ணாமலைக்கு செல்லும் பயணிகள் கூறுகையில், "மாதந்தோறும் பௌர்ணமி அன்று சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்ல பேருந்துகளில் கூட்டம் அதிகரித்திருக்கும். தற்போது சித்ரா பௌர்ணமி மிகவும் பிரசித்திப் பெற்றது என்பதால் பக்தர்களின் கூட்டம், பல மடங்கு உயர்ந்துள்ளது.

கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம்
கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம் (ETV Bharat Tamil Nadu)

இதனால் வழக்கத்தை விட திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படாததால் பேருந்து பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்" என்று குற்றம்சாட்டினர்.

இதையும் படிங்க: ஆராய்ச்சி பணிகளுக்கு இந்தியா அதிக நிதி ஒதுக்க வேண்டும்; பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் வலியுறுத்தல்

இதனிடையே, தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது என்பது குறிப்பிடத்தக்கது.

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலை, திருச்செந்தூர், மதுரை, பழநி உள்ளிட்ட ஆன்மீக தலங்களில் பக்தர்களின் கூட்டம் இன்று (மே 01) அதிகளவில் காணப்பட்டது. அனைத்து திருக்கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.