ETV Bharat / state

வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை - திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி கருத்து

கோயிலுக்கு சொந்தமான மரத்தில் சந்தனக்கூடு கொடியேற்ற நடத்த எப்படி அனுமதித்தீர்கள்? என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வி எழுப்பினார்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 9, 2026 at 7:20 PM IST

2 Min Read
Choose ETV Bharat

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவை வேண்டுமென்றே அதிகாரிகள் பின்பற்றவில்லை என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்ற போதிய முன்னேற்பாடு செய்யாத அலுவலர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய வழக்கை பிப்ரவரி 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற போதிய முன்னேற்பாடுகள் செய்யாத அலுவலர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய வழக்கு, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

சட்டம் ஒழுங்கின் முன்னாள் கூடுதல் காவல்துறை தலைவரும், தற்போதைய காவல்துறை தலைவருமான டேவிட்சன் ஆசீர்வாதம் காணொலி வாயிலாகவும், மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், காவல் ஆணையர் லோகநாதன், உதவி ஆணையர் டேவிட் இனிகோ, திருப்பரங்குன்றம் உதவி ஆணையர் சசி பிரியா, கோயில் செயல் அலுவலர் ஆகியோர் நேரிலும் ஆஜராகினர்.

அப்போது, ஒவ்வொருவரின் தனிப்பட்ட விளக்கம் என்ன? என நீதிபதி கேள்வி எழுப்பினார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் உத்தரவை எதிர்த்த LPA வழக்குகளின் விசாரணைக்கு நேரம் போதாமையால் நேற்று (ஜன 8) விசாரணைக்கு எடுக்கப்படவில்லை என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஏதேனும் எழுத்துப்பூர்வ பதில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு, அடுத்த விசாரணையில் பதில்மனு தாக்கல் செய்வதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, முழுமையாக ஒரு மாதம் அவகாசம் இருந்தும், எழுத்துப்பூர்வமான பதில்மனு தாக்கல் செய்யப்படவில்லை. ஆகவே, திங்கட்கிழமை (ஜன 12) நடவடிக்கை விவரங்கள் தெரிவிக்கப்படும் என குறிப்பிட்டார்.

தொடர்ந்து, “தீபத்தூண் அமைந்துள்ள இடம் கோயிலுக்கு சொந்தமானது என்பதை இரு நீதிபதிகள் அமர்வும் உறுதி செய்துள்ளது. அப்படி இருக்கையில் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள கல்லத்தி மரத்தில் தர்கா தரப்பில் சந்தனக்கூடு கொடியேற்ற எப்படி அனுமதித்தீர்கள்? அதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அதில் ஏதேனும் முரண் உள்ளதா? கல்லத்தி மரத்தில் கொடியேற்ற கோயில் தரப்பிடம், தர்கா தரப்பு அனுமதி பெறவில்லை. என்ன செய்யலாம்? நீங்களே பரிந்துரையுங்கள்” என்றார்.

இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவு செல்லும்: 2 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு

அதற்கு, ஒரே ஒரு முறை அவகாசம் வழங்க வேண்டுமென அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைக் கேட்ட நீதிபதி, "வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மறுத்திருக்கிறார்கள். அவர்களை அப்படியே விடுவதா?”என கேள்வி எழுப்பினார். மாவட்ட ஆட்சியர் மற்றும் துணை காவல் ஆணையர் தரப்பில், அவர்கள் எடுத்த முடிவுகள் அவர்களுடைய சுய முடிவுகள் தான் எனவும், வேறு யாரும் நிர்பந்திக்கவோ, அறிவுறுத்தவோ இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, கோயில் செயல் அலுவலரிடம் இதை நீங்களாக செய்தீர்களா? அல்லது அமைச்சர் சேகர்பாபு செய்யச் சொன்னரா? என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, இதுவரை நீதிமன்ற அவமதிப்பாளர்கள் தரப்பில் மன்னிப்பு கோரியோ, விளக்கமளித்தோ எந்த மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் பேசிய நீதிபதி, "மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவை பிறப்பித்தார். ஆனால், நீதிமன்றம் அந்த உத்தரவை தடை செய்து உத்தரவிட்டும், அதனை உதவி ஆணையர் டேவிட் இனிகோ நிறைவேற்றவில்லை. இந்த இருவரையும் மன்னிக்க இயலாது" என குறிப்பிட்டார்.

அரசுத் தரப்பில் இது தொடர்பாக பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து, நீதிபதி வழக்கை பிப்ரவரி 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்