தவெகவுடன் கைகோர்த்த காங்கிரஸ்; தமிழ்நாட்டில் மீண்டும் வலிமை பெற புது வியூகம்
"தமிழ்நாட்டில் மதவாத சக்திகள் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக திமுகவுடன் பயணித்தோம். தற்போது அதே அடிப்படையில் தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளோம்" என காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Published : May 6, 2026 at 10:56 PM IST
BY அமித் அக்னிஹோத்ரி
புது டெல்லி: தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளித்து, மீண்டும் கட்சியை வலுப்படுத்துவதற்கு காங்கிரஸ் கட்சி புது வியூகம் வகுத்துள்ளது.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி சுமார் 60 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை. அதன் பிறகு திமுக, அதிமுக ஆகிய திராவிட கட்சிகள் ஆட்சி செய்து வந்தன.
இந்நிலையில், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனி பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும் ஆட்சியமைப்பதற்கு தேவையான 118 இடங்கள் இல்லாததால் காங்கிரஸ் கட்சியின் ஆதரவை தமிழக வெற்றிக் கழகம் நாடியது.
இதையடுத்து, திமுக கூட்டணியில் கடந்த 10 ஆண்டுகளாக இடம்பெற்று வந்த காங்கிரஸ் கட்சி, அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளது.
இருப்பினும், மதவாத சக்திகளை கூட்டணியில் சேர்க்க கூடாது என்ற நிபந்தனையுடன் காங்கிரஸ் கட்சி, தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி கடந்த ஓராண்டாகவே கட்சியை அமைப்பு ரீதியாக வலுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வந்தது. எனவே, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் 39 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கேட்டிருந்தது. அத்துடன் தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சிக்கு வந்தால், ஆட்சியில் பங்கு தர வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது.
இதையும் படிங்க.. எந்த சூழலிலும் தவெகவுக்கு ஆதரவு இல்லை; யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த அதிமுக
ஆனால், வரும் தேர்தலில் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்றும், ஆட்சியில் பங்கு தர முடியாது என்றும் திமுக கூறிவிட்டது. பின்னர், 28 தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிய திமுக, அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் ஒதுக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தது. நடந்து முடிந்த தேர்தலில், 28 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அவற்றில், 18 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தை திமுக கணிக்கத் தவறி விட்டது. ஆனால், காங்கிரஸ் எம்.பி.க்களான மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, காங்கிரஸ் நிர்வாகி பிரவீண் சக்கரவர்த்தி உள்ளிட்ட சிலர், தேர்தலுக்கு முன்பே தவெகவுடன் கூட்டணி சேரலாம் என்று தெரிவித்தனர். ஆனால், காங்கிரஸ் தலைமை திமுகவுடன் தொடர்ந்து பயணிக்க விரும்பியதால் திமுக கூட்டணியில் இருந்தே காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்தித்தது.
தேர்தலுக்குப் பிறகு தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால் அக்கட்சிக்கு ஆதரவு தர காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
இதகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில், "தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டும் அதற்காக தவெக ஆட்சியமைக்க ஆதரவு தர காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது. தவெக அரசுக்கு வெளியில் இருந்த ஆதரவு தருவதா? அமைச்சரவையில் பங்கு பெறுவதா? என்பது குறித்து தவெக தலைமையுடன் கலந்து பேசி இறுதி முடிவு எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க.. கூட்டணியில் இருந்து பிரிந்தாலும் பரஸ்பர மரியாதை முக்கியம்; காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் அறிவுரை
தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு தருவதாக அறிவித்தவுடன் அதிருப்தி அடைந்த திமுகவின் மூத்த தலைவர்கள், காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். ஏனெனில் தேர்தல் பிரச்சாரத்தின்போது தவெக தலைவர் விஜய், திமுக அரசு கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில், தவெக உடனான கூட்டணி 2029 மக்களவைத் தேர்தலிலும் தொடர வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. கிறிஸ்டோபர் திலக் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஈடிவி பாரத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தொடக்கம் அமைந்துள்ளது. இதுவரை கூட்டணி அரசியலில் காங்கிரஸ் கட்சியால் முழுமையாக செயல்பட முடியவில்லை. தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் கட்சியை வலுப்படுத்த முயற்சி செய்தும் முடியவில்லை.
தற்போது காங்கிரஸ் கட்சியை வளர்த்தெடுக்க போதிய அரசியல் வெளி கிடைத்துள்ளது. நாங்கள் எங்கள் எதிர்காலத்தை பார்க்க வேண்டியுள்ளது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி வளர வேண்டும் எனில் மிக கடுமையாக உழைக்க வேண்டும். தமிழக மக்கள், காங்கிரஸ் கட்சிக்கு எப்போதும் மிகப்பெரிய ஆதரவை தருகிறார்கள்.
இந்த கூட்டணி, வரும் 2029 மக்களவைத் தேர்தலிலும் தொடரும் என்று நம்புகிறோம். மாநிலங்களவை உறுப்பினர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்குமா என்பது குறித்து முன்கூட்டியே சொல்ல முடியாது.
தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்ததால், அரசு மீது இருந்த அதிருப்தி, தேர்தலில் பிரதிபலித்து நாங்களும் பாதிக்கப்பட்டுள்ளோம். தற்போது தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற கூட்டணி அரசு அமைய வேண்டும் என்பதே எங்கள் முக்கிய நோக்கமாக உள்ளது" என்றார்.
இதையும் படிங்க.. திமுகவின் முதுகில் குத்திய சந்தர்ப்பவாத காங்கிரஸிலிருந்து விலகுகிறேன்; காங்கேயம் நிர்வாகி அறிக்கை
இதற்கிடையே, காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், "2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகளாலும், தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிப்பதாலும் திமுக அதிருப்தியில் உள்ளது. ஆனால், அதிமுக கூட்டணி வழியாக தமிழ்நாட்டிற்குள் பாஜக வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் திமுகவுடன் இணைந்து ஒவ்வொன்றையும் செய்தோம் என்பதை திமுக புரிந்து கொள்ள வேண்டும்.
அந்த அடிப்படையிலேயே தற்போது தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு தருகிறது. தவெக தலைவர் விஜய்க்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழத்து தெரிவித்தார். தமிழ்நாட்டை அடுத்தகட்ட வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதில் இருவரும் உறுதியுடன் இருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

