தமிழகத்தில் விஜய் ஒரு சக்தியாக உருவாகிவிட்டார் - பிரவீன் சக்கரவர்த்தி பேட்டி
அதிக தொகுதிகள், ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு என்ற மூன்று தான் காங்கிரஸின் கோரிக்கைகள் என பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

Published : January 7, 2026 at 4:05 PM IST
கோயம்புத்தூர்: மக்கள் விஜய்யை ஒரு அரசியல்வாதியாக பார்க்க வருவதாகவும், அவர் ஒரு சக்தியாக தமிழகத்தில் உருவாகிவிட்டார் எனவும் காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
கோவை தனியார் ஹோட்டலில் காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், தமிழகத்தில் கடந்த 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இல்லை எனவும், அதிக சீட், ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு என்பது தான் தங்களது கோரிக்கை எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “எதற்கு இந்த கோரிக்கை எழுகிறது என்றால், 60 ஆண்டுகளாக காங்கிரஸ் பலவீனமாகவே போய்க் கொண்டு இருக்கிறது. தற்போது பலப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்திற்காக இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஒருமித்த கருத்து இல்லாதது குறித்த கேள்விக்கு, “காங்கிரஸ் கட்சியில் சில எம்எல்ஏ, எம்பிக்களிடையே சில தனிப்பட்ட காரணங்களால் பிரச்சினை இருக்கலாம். ஊட்டி விடும் கையை யாராவது கிள்ளுவார்களா?” என கேள்வி எழுப்பினார்.
பிரவீன் சக்கரவர்த்தி உட்பட சிலர் பேசுவதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என எம்.பி.கார்த்தி சிதம்பரம் பேசியது குறித்த கேள்விக்கு, “கூட்டணி குறித்து காங்கிரஸ் கட்சி தலைமை தான் முடிவு எடுக்கும். காங்கிரஸ் தொண்டர்கள் அவர்கள் கோரிக்கையை வைக்கலாம். ஏனென்றால் இது ஒரு ஜனநாயகரீதியான கட்சி. ஆனால் கடைசியில் தலைமை தான் முடிவு எடுக்கும்” என பதிலளித்தார்.
விஜய் உடனான சந்திப்பு குறித்து கேட்டதற்கு, “தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை சந்தித்து பேசினேன். அவ்வளவு தான். ஏன் இரண்டு பேர் சந்திக்க கூடாதா? பிரவீன் சக்கரவர்த்திக்கு நிறைய அடையாளங்கள் இருக்கின்றன. விஜயை தனிப்பட்ட முறையில் சந்தித்தேன். டெல்லியில் இதே போல நிறையப் பேரை சந்திக்கிறேன். தமிழகத்தில் தான் இப்படி கேட்கிறீர்கள்” என பதில் அளித்தார்.
தொடர்ந்து தமிழக வெற்றி கழகம் குறித்து கணிப்பு தேவையில்லை என தெரிவித்த அவர், “விஜய் கூட்டத்திற்கு மக்கள் உற்சாகமாக வருகின்றனர். அது வெளிப்படையாக தெரிகிறது. ஆனால் அது ஓட்டாக மாறுமா? மாறாதா ? என்பது குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அதே சமயம் மக்கள் அவரை நடிகராக பார்க்க வரவில்லை. ஒரு அரசியல்வாதியாக தான் பார்க்க வருகின்றனர். அது நன்றாக தெரிகிறது. அவர் ஒரு சக்தியாக தமிழகத்தில் உருவாகிவிட்டார்” என்றார்.
காங்கிரஸ் கூட்டணி குறித்து கேட்டதற்கு, “அதிக சீட்டுகள், ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு என்ற மூன்று தான் காங்கிரஸின் கோரிக்கை. காங்கிரஸ் கட்சியின் நலனுக்காக எதிர் காலத்திற்காக இந்த கோரிக்கை வைக்கப்படுகிறது. இதில் எந்த பிரச்சினையும் இல்லை” என்றார்.
தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிடலாமே? என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது குறித்த கேள்விக்கு, யார் எப்படி வேண்டுமானாலும் பேசட்டும், அதற்கு பதில் சொல்ல தேவையில்லை என பிரவீன் சக்கரவர்த்தி பதிலளித்தார்.

