தமிழகத்தில் பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை - எம்.பி கார்த்திக் சிதம்பரம் கருத்து
நடிகர் விஜய் கட்சியின் தற்போது வரை ரசிகர் மன்றமாக மட்டுமே உள்ளது, ஒரு ஆக்கப்பூர்வமான கட்சியாக இன்னும் மாறவில்லை என எம்.பி கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார்.

Published : January 3, 2026 at 9:30 PM IST
கோயம்புத்தூர்: தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்பது சாத்தியமே இல்லை என சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் நடத்திய பேச்சு வார்த்தை மூலம், ஒய்வூதிய விவகாரம் தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து, ஜாக்டோ ஜியோ அமைப்பினரும் போராட்டத்தை நிறுத்தியுள்ளனர். முழுமையாக பார்த்துவிட்டு கருத்தை தெரிவிக்கிறேன்" என்றார்.
மேலும் பேசிய அவர், "இந்தியாவில் இந்தியா கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை தாங்குகிறது. அதேபோல தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் தான் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. தமிழ்நாட்டில் போதைப் பொருள் உற்பத்தி செய்வதையும், சந்தைப்படுத்துவதையும் முதலில் கட்டுப்படுத்த வேண்டும். அது காவல்துறையின் கடமை. மேலும் போதைப் பொருளை பயன்படுத்துபவர்களை தடுத்து, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும்.
குற்றச் சம்பவங்களை தடுக்க காவல்துறையினர் தொடர்ந்து ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து காவல் நிலையத்திலும் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட ரவுடிகளை கணக்கெடுத்து, வாரத்துக்கு இரண்டு முறை காவல் நிலையம் வந்து அவர்களை கையெழுத்து போட சொல்ல வேண்டும், தொடர்ந்து அவர்களை கண்காணிக்க வேண்டும்.
உலகமெங்கும் பூரண மதுவிலக்கு வெற்றியடைந்ததே கிடையாது. பூரண மதுவிலக்கு வந்தால் கள்ளச்சாராயம் பெருகிவிடும், மாபியாக்கள் பெருகிவிடுவார்கள். வேண்டுமென்றால் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பதும், அடையாள அட்டை வைத்து மதுவை விநியோகிப்பது போன்றவற்றை வைத்து கட்டுப்படுத்தலாமே தவிர, பூரண மதுவிலக்கு என்பது தோல்வி அடைந்த ஒரு கொள்கையாகவே நான் பார்க்கிறேன்.
| இதையும் படிங்க: தேர்தல் அறிக்கை: மக்களிடம் கருத்து கேட்க அதிமுக தேர்தல் தயாரிப்பு குழு முடிவு; சுற்றுப்பயண தேதி அறிவிப்பு |
மத்திய அரசின் பார்வை இந்திய இந்துத்துவா பார்வையாக உள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றி, நிதி சுமையை மாநிலங்களுக்கு ஏற்படுத்தி, அதற்கு மூடு விழா காணும் முயற்சியில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டுள்ளதாக” குற்றம் சாட்டினார்.
மேலும் பேசிய அவர், “விஜய்க்கு மக்கள் அதிகளவு ஆதரவு உள்ளது. அதனால், வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு கணிசமான வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், அந்த வாக்குகள் சீட்டாக மாறுமா என்பது கேள்விக்குறியே? தற்போது வரை ரசிகர் மன்றமாக மட்டுமே அந்த கட்சி உள்ளது. ஒரு ஆக்கப்பூர்வமான கட்சியாக இன்னும் மாறவில்லை” என விமர்சித்தார்.

