ETV Bharat / state

ரூ.1,000 கொடுக்க முடியாத இபிஎஸ் எங்கிருந்து ரூ.10,000 கொடுப்பார் - காங்கிரஸ் எம்பி கேள்வி

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக உள்ள அ.தி.மு.க-வை பா.ஜ.க அழித்துவிடும் என்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் சுதா
காங்கிரஸ் கட்சியின் மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் சுதா (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 25, 2026 at 1:16 PM IST

1 Min Read
Choose ETV Bharat

நாகப்பட்டினம்: மகளிருக்கு ரூ.1,000 கொடுக்காத எடப்பாடி பழனிசாமி, எப்படி ரூ.10,000 கருணைத் தொகையை வழங்குவார்? என்று காங்கிரஸ் கட்சியின் மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் சுதா கேள்வி எழுப்பியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பாக முகவர்கள் கூட்டம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பானுசேகர் தலைமையில் நடைபெற்றது. இதில் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜகுமார், மக்களவை உறுப்பினர் சுதா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சுதா, எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமை கூட்டணி அமைக்கும் கட்சி வேட்பாளர்களுக்கும், காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கும் அயராது பாடுபடுவோம் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்திக்கு, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு கடுமையாக கண்டனங்களை பதிவுசெய்தார்.

மேலும், “கூட்டணி குறித்து ஊடகங்களில் பேசக்கூடாது என்று கட்சி தலைமை தெரிவித்துள்ளது. சமூக வலைதளங்களில் வருவது நம்ப வேண்டியதில்லை. கூட்டணி, எத்தனை தொகுதி என்பது குறித்து தமிழக தலைமை, தேசிய தலைமை தான் முடிவு செய்யும். அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம்,” என்றார்.

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக உள்ள அ.தி.மு.க-வை பா.ஜ.க அழித்துவிடும் என்று குறிப்பிட்ட அவர், அக்கட்சியின் தொண்டர்களை நினைத்து கவலைப்படுவதாக விமர்சித்தார். மேலும், மகளிருக்கு ரூ.1,000 கொடுக்கத் தயங்கிய எடப்பாடி பழனிசாமி, எப்படி ரூ.10,000 கருணைத் தொகையை வழங்குவார் என்று சந்தேகிப்பதாக தெரிவித்தார்.

இதனையடுத்து நூறு நாள் வேலைத்திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியது, அந்த திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு குறைத்தது தொடர்பாகவும் சுதா கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: திடீர் சாம்பார், திடீர் இட்லியை போல கட்சியை தொடங்குகிறார்கள்: சசிகலாவை விமர்சித்த டிடிவி தினகரன்

அதேபோல, டெல்லியில் நடைபெற்ற ஏஐ மாநாட்டில் சீன ரோபோட்டுகள் காட்சிப்படுத்தப்பட்டது இந்தியாவிற்கு தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது என சுதா வருத்தம் தெரிவித்தார். நமது நாட்டில் என்னென்ன தயாரித்து இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தி இருக்க வேண்டுமே தவிர, சீனத் தயாரிப்புகளை நாம் தயாரித்ததாகக் கூறி காட்சிப்படுத்தியது மிகப்பெரியத் தவறு என்று அவர் கூறினார்.

மேலும், இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா வரி விதிக்கும் நிலையில், அங்கிருந்து வரும் பொருட்களுக்கு வரி விலக்கு அளித்து பிரதமர் ஏன் அண்டை நாட்டுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்ற கேள்வியையும் மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் சுதா முன்வைத்தார்.