ETV Bharat / state

எதிர்க்கட்சிகள் வரிசையில் அமர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ தாரகை கத்பட் - சட்டப்பேரவையில் பரபரப்பு

காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் தாரகை கத்பட் தனது பதிவியின் அடிப்படையில், எதிர்கட்சியினர் அமரும் முன் வரிசையில், பாமக உறுப்பினர் சவுமியா அன்புமணிக்கு அருகே இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டு அமர்ந்துள்ளார்.

இடமாற்றம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ தாரகை கத்பட்
இடமாற்றம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ தாரகை கத்பட் (Screengrab from YT/ @tamilnaduassembly)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 31, 2026 at 4:14 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ தாரகை கத்பட் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது பேசுபொருளாகியுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று மானியக் கோரிக்கை மீதான விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெறுகிறது. தொடர்ந்து கேள்வி - பதில் நேரமும் இடம்பெறுகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவருமான தாரகை கத்பட் இதுவரை ஆளும்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தார். ஆனால் இன்று சட்டமன்ற குழு தலைவர் என்கிற அடிப்படையில், எதிர்கட்சியினர் அமரும் முன்வரிசையில், பாமக சட்டமன்ற உறுப்பினர் சவுமியா அன்புமணிக்கு அருகே இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டு அமர்ந்துள்ளார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ எதிர்கட்சி வரிசையில் அமர்ந்தது பேசுபொருளானது. இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சட்டமன்றத்தில் இருக்கை மாற்றம் என்பது வழக்கமான நிர்வாக நடைமுறையின் ஒரு பகுதி தான். சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியின் புதிய தலைவர் நியமிக்கப்பட்டதன் காரணமாக இருக்கை மாற்றப்பட்டுள்ளது.

மேலும், கூட்டணிக் கட்சிகளின் சட்டமன்றக் கட்சித் தலைவர்களின் அமர்வை கருத்தில் கொண்டு, காங்கிரஸ் கட்சியின் இரண்டு அமைச்சர்களும் முதல் வரிசையில் அமர்ந்துள்ளனர். பேரவைத் தலைவர் இந்த மாற்றத்தை செய்திருப்பது வரவேற்கத்தக்கது. ஒரு வழக்கமான இருக்கை மாற்றத்தை வைத்து, இல்லாத அரசியல் அர்த்தங்களை கற்பனை செய்து பரப்ப வேண்டாம். செய்தியை செய்தியாகவே பாருங்கள்; அரசியலை கற்பனையாக உருவாக்க வேண்டாம்” என கூறியுள்ளார்.

முன்னதாக கேள்வி நேரத்தின்போது பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் எ.வ.வேலு, ஜவாஹிருல்லா போன்ற மூத்த உறுப்பினர்களை முன்வரிசையில் அமர வைக்க வேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

இதுகுறித்து பேசிய எ.வ.வேலு, “ஏற்கனவே இதுகுறித்து கடிதம் அளித்திருந்தோம். அதனை பரிசீலிப்பதாக சபாநாயகர் தெரிவித்திருந்தார். மூத்த உறுப்பினர்கள் முன்வரிசையில் அமரும்போது சட்டப்பேரவைக்கு தங்களது அனுபவத்தின் அடிப்படையில் சிறந்த ஆலோசனைகளை வழங்குவார்கள்” என்றும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர், ”தற்போது உறுப்பினர்கள் எந்தக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள் என்பதன் அடிப்படையில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் ஒருவர் சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டதால், அவருக்கு உரிய இடம் வழங்கப்பட்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பால் கொள்முதல் விலை உயர்வு முதல் செமிகண்டக்டர் உற்பத்தி பூங்கா வரை - முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்புகள்

ஜவாஹிருல்லா மற்றும் தமிமுன் அன்சாரி உள்ளிட்டோரின் கோரிக்கையும் பரிசீலிக்கப்பட்டு, உரிய நேரத்தில் தகுந்த முடிவு எடுக்கப்படும்” என சபாநாயகர் உறுதியளித்தார்.

இதனையடுத்து, பேசிய எ.வ.வேலு, நீங்கள் எடுக்கும் முடிவில் தலையிட நான் தயாராக இல்லை, நீங்கள் முடிவு எடுத்தால் அது நடைமுறைக்கு வரும் என்பதால் தான் இந்த கோரிக்கையை முன்வைக்கிறேன்” என தெரிவித்தார். அதற்கு சபாநாயகர், உங்கள் கோரிக்கை பரிசீலனை செய்யப்படும் என பதிலளித்தார்.