ETV Bharat / state

காங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தர முதல்வர் உறுதி: செல்வப்பெருந்தகை தகவல்

திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது; எங்களுக்கு என்ன தேவையோ அதை கேட்டுக்கொண்டிருக்கிறோம் என செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

நிருபர்களிடம் பேசும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை
நிருபர்களிடம் பேசும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 28, 2026 at 2:36 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: காங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தர முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதியளித்துள்ளதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக தொடங்கியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்துக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் இன்று வருகை தந்தனர். வைகோ (மதிமுக), செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், வேல்முருகன் (த.வா.க.) உள்ளிட்ட தலைவர்கள் வந்திருந்தனர்.

இதையடுத்து, அவர்களுடன் திமுக நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்ததை முடிந்து வெளியே வந்த செல்வப்பெருந்தகை, செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் கூறுகையில், "திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. எங்களுக்கு (காங்கிரஸ்) என்ன தேவையோ அதை கேட்டுக்கொண்டிருக்கிறோம். அவர்களும் பரிசீலிப்பதாக கூறியுள்ளார்கள். காங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

இதையும் படிங்க: தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணியா? கேள்வியால் சட்டென முகம் மாறிய கிரிஷ் சோடங்கர்

பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. எங்கள் கூட்டணி இயற்கையான கூட்டணி, கொள்கை கூட்டணி, தமிழகத்தை காக்கும் கூட்டணி, மதவாதிகளை விரட்டும் கூட்டணி. எனவே, இங்கு பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் இனி இடம் கிடையாது" என செல்வப்பெருந்தகை கூறினார்.

சட்டமன்றத் தேர்தலில் 35-க்கும் மேற்பட்ட இடங்களை காங்கிரஸ் கோரி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், 20 தொகுதிகளுக்குள் காங்கிரஸை அடக்கிவிட திமுக முயன்று வருவதாக கூறப்படுகிறது. மநீம, தேமுதிக போன்ற கட்சிகளுக்கும் ஓரளவுக்கு திருப்தியாக தொகுதி ஒதுக்கீடு செய்ய வேண்டியுள்ளதால், திமுகவும் கடும் நெருக்கடியில் உள்ளதாக தெரிகிறது.

தற்காலிகமாக ஒத்திவைத்த காங்கிரஸ்?

முன்னதாக, ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என காங்கிரஸ் முழக்கமிட்டு வந்தது. இதனால் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு நிலவியது. குறிப்பாக, மாணிக்கம் தாகூர் திமுகவை கடுமையாக விமர்சித்து வந்தார். கூட்டணி இல்லையென்றால் திமுகவால் ஆட்சியமைக்க முடியாது என்றும், எனவே கூட்டணி கட்சிகளுக்கு உரிய மரியாதையை திமுக கொடுக்க வேண்டும் எனவும் அவர் பேசி வந்தார். இந்நிலையில், ஆட்சியில் பங்கு என்பதெல்லாம் தமிழகத்திற்கு ஒத்துவராது என முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார். இதையடுத்து, ஆட்சியில் பங்கு கோரிக்கையை காங்கிரஸ் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதாக தெரிகிறது.