ETV Bharat / state

தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை - காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கூறியது என்ன?

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கூட்டணி எப்போதும் ஒரே நிலைப்பாடு தான் என தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர்
காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 3, 2026 at 4:24 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: நாங்கள் திமுக உடன் கூட்டணியில் தொடர விரும்பியதால் தான் முதலில் குழு அமைத்து முதலமைச்சரை சந்தித்து பேசினோம் என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் கூறினார்.

சென்னையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் மற்றும் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் இன்று நடைபெற்றது.

இதற்கு பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர், செல்வப்பெருந்தகை ஆகியோர் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது பேசிய கிரிஷ் ஜோடங்கர், “ஜோதிமணி முன் வைத்த புகார் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது குற்றச்சாட்டு தொடர்பாக காங்கிரஸ் தேசிய தலைமைக்கு பரிந்துரை வழங்கியுள்ளோம். விரைவில் இந்த பிரச்சனை சரி செய்யப்படும். காங்கிரஸ் என்பது தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை கட்டுக்கோப்பாக உள்ள கட்சி. உட்கட்சி விவகாரங்களை பொது வெளியில் பேசக் கூடாது. இது போன்ற விவகாரங்கள் தேர்தல் நேரத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும்” என்றார்.

காங்கிரஸ் விருப்ப மனு குறித்து கேட்ட போது, “மாவட்ட தலைவர்கள் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும். பூத் லெவல் முதல் தலைமை வரை கட்டமைப்பை பலப்படுத்தி வருகிறோம். சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விருப்ப மனு வழங்கியுள்ளனர். இது காங்கிரஸ் கட்சி துடிப்புடன் செயல்படுவதை காட்டுகிறது” என்றார்.

தவெக உடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்குமா? என்ற கேள்விக்கு, ”நாங்கள் திமுக உடன் கூட்டணியை தொடர ஆர்வமாக இருந்த காரணத்தால் தான் முதலில் குழு அமைத்து முதலமைச்சரை சந்தித்து பேசினோம். திமுக கூட்டணி என்றும் நம்பிக்கையானது. தமிழ்நாட்டில் யாரோ ஒருவர், யாரையோ சந்தித்தால் நாங்கள் ஏன் அதை பொருட்படுத்த வேண்டும்? தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கூட்டணியில் எப்போதும் ஒரே நிலைபாடு தான். காங்கிரஸ் கட்சி சட்டமன்றத் தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பதை விரைவில் அறிவிப்போம்” என கூறினார்.

இதையும் படிங்க: சென்னை ஐஐடியின் புதிய அடையாளமான குளோபல் மையத்தை தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்த கேள்விக்கு பதில் அளித்த கிரிஷ் சோடங்கர், “எந்த கட்சியாவது ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டாம் என கூறுமா?” என பதில் கேள்வி எழுப்பினார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நடைபயண தொடக்க விழாவை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் புறக்கணித்தது குறித்த கேள்விக்கு, ”பிரபாகரன் புகைப்படம் இருந்ததால் பங்கேற்க வேண்டாம் என காங்கிரஸ் மாநிலத் தலைவர் முடிவெடுத்தது சரியானது தான்” என்றார்.

முன்னதாக காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.