தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணியா? கேள்வியால் சட்டென முகம் மாறிய கிரிஷ் சோடங்கர்
திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு குறித்து இன்று பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளதாக கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார்.

Published : February 28, 2026 at 8:21 AM IST
சென்னை: தவெக உடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு, திமுக - காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளது. தேவையில்லாத கேள்விகளை ஏன் கேட்கிறீர்கள்? என கிரிஷ் சோடங்கர் கடிந்து கொண்டார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசியல் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அந்த வகையில், திமுக கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. அதில், இந்த முறை கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கூட்டணிக் கட்சிகள் கேட்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, காங்கிரஸ் 30-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் நேற்று (பிப்.27) சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூட்டணி குறித்து பேசிய அவர், “திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது. அப்போது எத்தனை தொகுதிகள் என்பது குறித்து முடிவு செய்யப்படும். அதன் பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்” என்றார்.
தொடர்ந்து காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறப்படுகிறதே? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “காங்கிரஸ் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இந்த சூழலில், இது போன்ற கேள்விகளை எதற்காக கேட்கிறீர்கள்?" என கிரிஷ் சோடங்கர் கடிந்து கொண்டார்.
ஆட்சி அதிகாரம் குறித்து பேசுவீர்களா? என்ற கேள்விக்கு, அனைத்தும் பேசப்படும் எனக் கூறிய அவர், உங்களுடைய அனைத்து கேள்விகளுக்கும் நாளை விடை கிடைக்கும் என்றார்.
மேலும் பேசிய அவர், "முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், திமுகவில் இணைந்துள்ளார். இது நல்ல விஷயம். இதனால் கூட்டணி மேலும் வலுவாகியுள்ளது. தமிழக மக்கள் ஒரு போதும் பாஜக கூட்டணியை ஏற்க மாட்டார்கள். அதை புரிந்து கொண்டு தான் ஓபிஎஸ் போன்றவர்கள் பாஜக கூட்டணியை விட்டு வெளியேறினர்.
ராகுல் காந்தி தமிழ்நாட்டுக்கு பிரச்சாரம் செய்ய நிச்சயம் வருவார். அவருடைய பயணம் அடுத்த 15 நாட்களுக்கும் இருக்கும். ராகுல் காந்தி தமிழகத்திற்கு வரும் தேதி விரைவில் முடிவு செய்து அறிவிக்கப்படும்” என அவர் தெரிவித்தார்.

