''தவெகவுடன் ஆட்சியிலும், அதிகாரத்திலும் காங்கிரஸ் பங்கு பெற வேண்டும்'' - கருத்து பதிவிட்டு நிர்வாகி ராஜிநாமா
நாடாளுமன்ற உறுப்பினரான தம்மையே தேர்தல் ஆணையத்திற்கு வாக்குச் சாவடி முகவர் பட்டியலை கொடுக்க விடாமல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் தடுப்பதாக ஜோதிமணி எம்பி குற்றம்சாட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

Published : January 2, 2026 at 5:45 PM IST
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினரும், காங்கிரஸ் சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினருமான வழக்கறிஞர் சூரியப்பிரகாசம் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
முன்னதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தவெகவுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியிலும், அதிகாரத்தில் காங்கிரஸ் பங்கு பெற வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, காங்கிரஸ் நிர்வாகி சூரிய பிரகாசம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''திமுகவின் அடிமைகள் கூடாரமாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை மாற்ற தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தீவிர முயற்சி செய்கிறார். தமிழ்நாடு அரசின் கடன் சுமை 10 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என்பதை திமுக அரசே தன்னுடைய 2025 பட்ஜெட்டில் தெரிவித்துள்ளதாக கூறிய பிரவின் சக்கரவர்த்தி மீது கடுமையாக குற்றம் சாட்டப்படுகிறது.
தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் 2026 சட்டப் பேரவை தேர்தலில் மக்களின் கடும் எதிர்ப்பினால் படுதோல்வி அடையப் போகின்ற திமுகவோடு சேர்ந்து காங்கிரசும் படுதோல்வி அடையாமல் இருக்க தவெகவுடன் கூட்டணி சேர வேண்டும்.
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு வாக்காளர்களிடம் உள்ள ஆதரவு மற்றும் பிரகாசாமான வெற்றி வாய்பை கருத்தில் கொண்டு தவெகவோடு தேர்தலில் கூட்டணி அமைத்தால் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்கின்ற காங்கிரசாரின் நீண்ட கால கனவு நனவாகும்.

மாறாக தவெக கூட்டணிக்காக போராடும் காங்கிரஸ் தொண்டர்களை தற்குறிகள் என, அவமானப்படுத்திய செல்வப்பெருந்தகை தலைமையின் கீழ் வேலை செய்ய எனது சுயமரியாதை இடம் கொடுக்காததால் இன்று (ஜன.02) முதல் தமிழக காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துவதுடன், காங்கிரஸ் அடிப்படை உறுப்பினர் பதவியியிலிருந்து விலகுகிறேன்'' என்று வழக்கறிஞர் சூரியப்பிரகாசம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் அறிவித்துள்ளார்.
முன்னதாக தமிழக காங்கிரஸ் கட்சி அழிவின் பாதையில் சென்று கொண்டு இருப்பதாக அக்கட்சியின் எம்.பி ஜோதிமணி வேதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினரான தம்மையே தேர்தல் ஆணையத்திற்கு வாக்குச் சாவடி முகவர் பட்டியலை கொடுக்க விடாமல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் தடுப்பதாக குற்றம்சாட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
இந்த பரபரப்பு அடங்கும் முன் தவெக கூட்டணிக்காக போராடும் காங்கிரஸ் தொண்டர்களை தற்குறிகள் என அவமானப்படுத்திய செல்வப்பெருந்தகை தலைமையின் கீழ் வேலை செய்ய விரும்பவில்லை என கூறி வழக்கறிஞர் சூரியப்பிரகாசம் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளது கட்சி வட்டாரத்தில் மீண்டும் புயலை கிளப்பி உள்ளது.

