கர்ப்பம் தரிப்பது பல பெண்களுக்கு சவாலாக மாறியுள்ளது - நடிகை குஷ்பு வேதனை
எனது இரண்டு கர்ப்ப காலங்களையும் நான் மிகவும் மகிழ்ச்சியாக அனுபவித்தேன் என நடிகை குஷ்பு சுந்தர் தெரிவித்துள்ளார்.

Published : September 2, 2026 at 10:50 PM IST
சென்னை: இன்றைய வாழ்க்கை முறையில் கர்ப்பம் தரிப்பது பல பெண்களுக்கு சவாலாக மாறியுள்ளது என நடிகையும், பாஜகவின் மாநில துணைத் தலைவருமான குஷ்பு சுந்தர் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் விடுதியில் தனியார் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசிய நடிகையும், பாஜகவின் மாநில துணைத் தலைவருமான குஷ்பு சுந்தர், "திருமணமான முதல் மாதத்திலேயே “எப்போது குழந்தை?” என கேட்கும் பழக்கத்தை சமூகம் நிறுத்த வேண்டும்; ஒரு தம்பதி எப்போது குழந்தையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்ய வேண்டும். அதை மற்றவர்கள் தீர்மானிக்க முடியாது. இன்றைய வாழ்க்கை முறையில் கர்ப்பம் தரிப்பது பல பெண்களுக்கு சவாலாக மாறியுள்ளது. உணவுப் பழக்கம், தூங்கும் நேரம், பணிச்சுமை, மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் கர்ப்பம் தொடர்பான விஷயங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

ஒரு பெண்ணால் உடனடியாக தாயாக முடியாத சூழல் ஏற்பட்டால், அதற்கான குற்றத்தை பெரும்பாலும் பெண்ணின் மீதே சுமத்துவது வேதனையானது. இதுபோன்ற சமூக அழுத்தங்களைத் தாண்டி தாய்மையை அடைவது பல பெண்களுக்கு மிகப்பெரிய போராட்டமாக உள்ளது. ஒரு காலத்தில் IVF சிகிச்சையும், சமூகத்தால் தவறாகப் பார்க்கப்பட்டதாகவும், தற்போது குழந்தைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்கும் முக்கியமான மருத்துவ உதவியாக IVF மாறியுள்ளது .
ஒவ்வொரு பெண்ணுக்கும் தாய்மையை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். கருவில் குழந்தையின் அசைவை முதன்முறையாக உணர்வது, முதல் ஸ்கேனில் குழந்தையின் சிறிய விரல்கள், கால்கள், முகம் போன்றவற்றைப் பார்ப்பது என ஒவ்வொரு தருணமும் மறக்க முடியாத அனுபவம். எனது இரண்டு கர்ப்ப காலங்களையும் நான் மிகவும் மகிழ்ச்சியாக அனுபவித்தேன். சமீபத்தில் எனது மூத்த மகளின் திருமணத்தில், அவர் மணப்பெண்ணாக மண்டபத்திற்கு வந்தபோது, அவரது பிறப்பு மற்றும் கர்ப்ப கால நினைவுகள் அனைத்தும் என் மனதில் வந்து சென்றன.

முதன்முறையாக குழந்தையின் அசைவை உணர்ந்த தருணத்தை இன்னும் மறக்க முடியாது. அப்போது படப்பிடிப்பில் இருந்த தான், குழந்தை அசைந்ததை உணர்ந்து, என் கணவருக்கு தொலைபேசியில் அழைத்து, ‘குழந்தை அசைந்தது’ என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தேன். சில நேரங்களில் குழந்தையின் அசைவு தெரியாமல் மருத்துவரிடம் சென்றபோது, குழந்தை நன்றாகத் தூங்கிக் கொண்டிருப்பது தெரிய வரும். இவ்வாறான ஒவ்வொரு சிறிய தருணங்களும் தாய்மையின் அழகை உணர்த்துகின்றன. இன்றைய காலகட்டத்தில் குழந்தை பெறுவதில் சிரமம் ஏற்படும் தம்பதிகளுக்கு IVF போன்ற மருத்துவத் தொழில்நுட்பங்கள் எவ்வளவு உதவியாக இருக்கின்றன என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

