ஜனநாயகன் டிக்கெட் ரூ.1000-க்கு விற்பனை? ரசிகர்கள் புகார்
வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் வரும் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகிறது.

Published : January 6, 2026 at 6:21 PM IST
தூத்துக்குடி: கோவில்பட்டியில் 'ஜனநாயகன்' திரைப்பட டிக்கெட் ரூ.1000 வரை விற்கப்படுவதாக துணை வட்டாச்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ள ’ஜனநாயகன்’ திரைப்படம் வரும் 9ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்த திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள மூன்று திரையரங்குகளில் ஜனநாயகன் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், இந்த திரைப்படத்திற்கு ஒரு டிக்கெட் ரூ.1000 வரை விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவரிடம், ரசிகர் ஒருவர் பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில், ஜனநாயகன் படத்திற்கு டிக்கெட் வேண்டும் என்று கேட்பதும், அதற்கு ரசிகர் மன்ற நிர்வாகி, மூன்று திரையரங்குகளில் 600 முதல் 1000 ருபாய் வரை விற்கப்படுவதாக கூறுகிறார்.
இந்நிலையில் ஜனநாயகன் திரைப்படத்திற்கு அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூல் செய்வதாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் துணை வட்டாட்சியர் பாலுவிடம் புகார் மனு கொடுத்துள்ளனர். இதற்கிடையே, ஜனநாயகன் படத்திற்கு அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுவது குறித்து வெளியான ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியா நாட்டில் பிரமாண்டமாக நடைபெற்றது. மேலும் மலேசியாவில் அதிகம் பேர் பங்கேற்ற இசை வெளியீட்டு விழா என்ற சாதனையும் படைத்தது.
| இதையும் படிங்க: ஜனநாயகன் VS பராசக்தி - எத்தனை திரையரங்குகள்? |
இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி என்ற படத்தின் ரீமேக். இதனிடையே ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் பெறுவதில் இழுபறி நீடித்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் பல்வேறு திரையரங்குகளில் முன்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

