முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு - திமுக எம்பி ஆ.ராசா மீது பெரம்பலூர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார்
ஆ.ராசா பேசிய உரை குறித்து முழுமையான விசாரணை நடத்துமாறும், சட்டமீறல் உறுதிச் செய்யப்பட்டால் வழக்குப்பதிவுச் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மருத்துவர் வலியுறுத்தியுள்ளார்.

Published : July 12, 2026 at 1:59 PM IST
|Updated : July 12, 2026 at 2:31 PM IST
பெரம்பலூர்: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக திமுகவின் துணைப் பொதுச் செயாலாளரும், எம்பியுமான ஆ.ராசா மீது பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வரும் ராசா மணிகண்டன் என்பவர் திமுவின் துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா மீது புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அந்த புகார் மனுவில், "கடந்த ஜூன் 25- ஆம் தேதி, திருவாரூர் கலைஞர் கோட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, டி.ஆர்.பாலு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் மதிவாணனின் இல்ல திருமண விழாவில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா கலந்து கொண்டு உரையாற்றினார். இவரது காணொளி ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியாகி உள்ளது.

அவரது உரையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பதவியின் கண்ணியத்தையும், மரியாதையும் இழிவுபடுத்தும் வகையில் ஆ.ராசா பேசியுள்ளார். இத்தகைய பேச்சு அரசியல் நாகரிகத்திற்கு முரணானதோடு, பொதுமக்களிடையே தேவையற்ற கருத்து மோதலையும், சமூக அமைதிக்கு குந்தகத்தையும் ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பொதுவெளியில் இதுபோன்ற கருத்துகளை வெளியிட்டால், அது பொறுப்பற்றச் செயலாகும். கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் ஒருவரின் கண்ணியத்திற்கும், அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் உள்ள உயரிய பதவியின் மரியாதைக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் பேசுவதற்கு சட்டம் அனுமதி வழங்கவில்லை.
எனவே மேற்கண்ட நிகழ்வு தொடர்பாக வெளியான முழுமையான காணொளிகள், ஊடகச் செய்திகள் மற்றும் பிற ஆதாரங்களைச் சேகரித்து, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசிய உரை குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும். அவரது உரையில் சட்டமீறல் இருப்பது உறுதிச் செய்யப்பட்டால் இந்திய நீதிச் சட்டம் (BNS 2023) மற்றும் பிற பொருந்தக்கூடிய சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அரசு மருத்துவர் ராசா மணிகண்டன் கூறுகையில், "ஆ.ராசாவின் பேச்சு என்னைப் போன்ற லட்சக்கணக்கான ரசிகர்களை உண்மையிலேயே வேதனை அடையச் செய்துள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளேன். அவரும் மனுவைப் பார்த்துவிட்டு நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறியுள்ளார். அவர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்திற்கு செல்வேன்" என்று தெரிவித்துள்ளார்.

