ETV Bharat / state

இடதுசாரிகள், விசிகவின் ஆதரவே தவெக அரசுக்கு போதுமானது- வீரபாண்டியன் பேட்டி

கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியிருப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.

சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன்
சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 28, 2026 at 10:47 PM IST

1 Min Read
Choose ETV Bharat

விழுப்புரம்: இடதுசாரிகள் மற்றும் விசிக வழங்கும் ஆதரவே தவெக அரசுக்கு போதுமானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவைச் சார்ந்த மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகிய நான்கு பேர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இது அதிமுக மட்டுமின்றி தமிழ்நாட்டு அரசியலில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்திருந்தனர்.

குறிப்பாக, தவெக ஆட்சியமைக்க ஆதரவுத் தெரிவித்திருந்த இடதுசாரிகள் மற்றும் விசிகவும் கடும் எதிர்ப்பைப் பதிவுச் செய்திருந்தனர். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "அதிமுகவினருக்கு நாங்கள் ஆஃபர் கொடுக்கவில்லை. அவர்களாகவே தவெகவில் வந்து இணைகின்றனர்" என்று கூறி விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்த நிலையில் விழுப்புரத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் இன்று (மே 28) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், "தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சமீபத்தில் பிரதமரைச் சந்தித்து தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், வான்வழி திட்டம் தமிழ்நாட்டில் அமைய வேண்டும், மேகதாது அணை குறித்து தமிழ்நாட்டின் கருத்து கேட்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தது வரவேற்கத்தக்கது.

இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவது ஏற்க முடியாதது; அவர்களை உடனடியாக தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் இருக்க வேண்டும். கச்சத்தீவு பிரச்சனை குறித்தும் மத்திய அரசு சிந்திக்க வேண்டும். பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சர் இருக்க வேண்டிய உரிமை மாநிலத்துக்கு கிடைக்க வேண்டும்; கீழடி அகழாய்வுகள் தொடர மத்திய அரசு முழு ஆதரவு வழங்க வேண்டும். கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை அரசியல் பழிவாங்கும் செயல்.

இதையும் படிங்க: இன்னும் ஒரு மாதத்தில் 90% அதிமுகவினர் தவெகவிற்கு வருவார்கள்; அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு

இதேபோன்ற சோதனைகள் பாஜக நிர்வாகிகள் வீடுகளில் நடைபெறாதது ஏன்? அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து தவெகவில் இணைவது ஏற்கத்தக்கதல்ல; தற்போது இடதுசாரிகள் மற்றும் விசிக வழங்கும் ஆதரவே தவெக அரசுக்கு போதுமானது.

டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் அரசு பணியாளர்களின் கோரிக்கைகளை அரசு கவனத்தில் கொண்டு தீர்வு காண வேண்டும். தேசிய கட்சிகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை மாநில கட்சிகளுக்கும் மத்திய அரசு வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.