வர்த்தக சிலிண்டர் விலை உயர்வு; ஹோட்டல் உரிமையாளர்கள் கொடுத்த "ஷாக்"
வர்த்தக சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளதால், சென்னையில் பல்வேறு உணவகங்கள் மற்றும் சாலையோர உணவுக் கடைகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

Published : May 2, 2026 at 4:41 PM IST
சென்னை: வர்த்தக சிலிண்டரின் விலை ஒரே நாளில் 993 ரூபாய் உயர்ந்ததால் ஹோட்டல் உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், உணவு விலை உயரும் என்பதால் வாடிக்கையாளர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை நேற்று அதிரடியாக உயர்ந்தது. சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகத் தட்டுப்பாடு மற்றும் தடைகள் காரணமாக விலை உயர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. 19 கிலோ எடை கொண்ட வர்த்தக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ஏற்கெனவே கடந்த மார்ச் மாதம் 144 ரூபாயும், ஏப்ரல் மாதம் 203 ரூபாயும் உயர்த்தப்பட்டது. இதனால் உணவகங்கள் மற்றும் சாலையோர கடைகளில் தேநீர் முதல் அனைத்து உணவுகளின் விலையும் உயர்த்தப்பட்டன.
இந்த நிலையில் நேற்று வர்த்தக பயன்பாட்டு சிலிண்டரின் விலை 993 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதனால் வர்த்தக சிலிண்டரின் விலை தற்போது ரூ.3,239-ஆக உள்ளது. இதன் காரணமாக, உணவுப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் தெற்காசியப் போர் எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உணவகங்களில் உணவு வகைகளில் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. பல்வேறு கடைகள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டன. இதன் தொடர்ச்சியாக தற்போது வர்த்தக சிலிண்டரின் விலை கிட்டத்தட்ட 1000 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் பல்வேறு உணவகங்கள் மற்றும் சாலையோர உணவுக் கடைகள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
"ஏற்கெனவே மளிகை பொருட்களின் விலை உயர்ந்து விட்டது. உணவகங்களின் வாடகை, ஊழியர்களுக்கான ஊதியம், மின் கட்டணம் போன்றவற்றை சமாளிக்க முடியாமல் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளும் நிலையில், திடீரென ஒரே நாளில் 993 ரூபாய் சிலிண்டரின் விலை உயரத்தப்பட்டது, பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்" என ஹோட்டல் உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க.. வாக்கு எண்ணும் மையங்களில் ஆய்வு: ஏற்பாடுகளை பார்வையிடும் தேர்தல் அலுவலர்கள்
சிலிண்டரின் விலை உயர்வால் உணவு பண்டங்களின் விலையை உயர்த்தியே ஆக வேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், இதனால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்து, வருவாய் குறைய வாய்ப்புள்ளதாகவும் ஹோட்டல் உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே உணவுப் பொருட்களின் விலை 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. 130 ரூபாய்க்கு விற்கப்பட்ட மதிய உணவு (மீல்ஸ்) ரூ.150-க்கும், 70 ரூபாய்க்கு விற்ற தோசை ரூ.90-க்கும், பூரி செட் 70 ரூபாயில் இருந்து 90 ரூபாய்க்கும், புரோட்டா 15 ரூபாயில் இருந்து 25 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. டீ, காபியின் விலை ரூ.5 வரை உயர்ந்துள்ளது.
"சிலிண்டர் தட்டுப்பாடு பிரச்சனை காரணமாக கடந்த இரண்டு மாதங்களாவே ஹோட்டல் வியாபாரம் நஷ்டத்தை மட்டுமே சந்தித்து வருகிறது. வர்த்தக சிலிண்டரின் விலை, 993 ரூபாய் உயர்த்தப்பட்டாலும் அரசு அறிவித்த விலையின்படி ரூ.3,239-க்கு எங்களுக்கு சிலிண்டர் கிடைப்பதில்லை. கள்ளச் சந்தையில் சிலிண்டரின் விலை 6000 ரூபாய் முதல் 7000 ரூபாய் வரை கூடுதல் விலைக்கு விற்கப்பட்டு வருகிறது. இதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தேனாம்பேட்டையைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் முத்துராமலிங்கம் கேட்டுக் கொண்டார்.
"ஏற்கனவே வீட்டு உபயோக சிலிண்டர்கள் முறையாக கிடைக்காததால், அவ்வப்போது மக்கள் ஹோட்டல்களில் சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது வர்த்தக சிலிண்டர் உயர்வால், ஹோட்டல் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து மாதம் 3 ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை ஒவ்வொரு குடும்பத்திற்கும் கூடுதல் செலவு ஏற்படும்" என தேனாம்பேட்டையைச் சேர்ந்த சேகர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க.. விஜய் எந்த தொகுதியிலும் ஜெயிக்க மாட்டார் - நயினார் நாகேந்திரன்
இது தொடர்பாக வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா கூறுகையில், "வணிக சிலிண்டர்களின் விலை உயர்வு என்பது சாமானிய ஏழை எளிய மக்கள், கூலி தொழிலாளர் உள்ளிட்டோர் சாப்பிடும் உணவின் விலையை உயர்த்தியுள்ளது. சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக மறு பரிசீலனை செய்ய வேண்டும். விலை உயர்வை திரும்பப் பெறவில்லை என்றால் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்" என தெரிவித்தார்.

