சமுதாயத்தின் அவலங்களை நிலைக்காட்சிகளாக அரங்கேற்றி அசத்திய கல்லூரி மாணவிகள்
சாதனைப் பெண்கள், பெண் கல்வி, பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள், பசுமை விவசாயம், சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு கருத்துகளில் நிலைக்காட்சிகளை மாணவிகள் அரங்கேற்றினர்.

Published : January 9, 2026 at 6:43 PM IST
திருநெல்வேலி: சமுதாயத்தில் நடக்கும் அவலங்களை பாளயங்கோட்டையை சேர்ந்த கல்லூரி மாணவிகள் நிலைக்காட்சியாக நடித்துக் காட்டி அசத்தினர்.
சமுதாயத்தில் நடக்கும் பிரச்சினைகள், பெண்கள் முன்னேற்றம், கல்வி அவசியம், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் சவால்கள், மத நல்லிணக்கம் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலி பாளையங்கோட்டை தூய இஞ்ஞாசியார் (St ignatius) கல்வியியல் கல்லூரி சார்பில் மாணவிகள் நிலைக்காட்சியாக நின்று நடித்துக் காட்டுவார்கள்.
இந்த ஆண்டுக்கான நிலைக்காட்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றதை அறிந்து ஈடிவி பாரத் சார்பில் நேரில் சென்றோம். இந்த நிகழ்ச்சியில் 130 மாணவிகள் கலந்துகொண்டு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களின் பெயரில் 5 குழுக்களாக பிரிந்து சமூக நல்லிணக்கம், பெண் கல்வியின் அவசியம், பெண்கள் முன்னேற்றம், போதையில்லா சமுதாயம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற 5 தலைப்புகளில் தத்ரூபமாக வேடமிட்டு நிலைக்காட்சியாக நின்றனர்.
மேலும் சாதனைப் பெண்கள், பெண்களின் பன்முகத்தன்மை, பெண்கல்வி, பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள், பசுமையான விவசாயம், சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு கருத்துகளில் மாணவிகள் நிலைக்காட்சிகளை அரங்கேற்றினர்.

குறிப்பாக பெண் கல்விக்கான காட்சியில் மருத்துவர், காவல்துறை அதிகாரி போன்ற உயர் பொறுப்புகளில் பெண்கள் இருப்பது போன்ற காட்சிகள், பழங்காலத்தில் பெண்கள் சமையலறையிலேயே முடங்கி கிடந்தது போன்ற காட்சிகள், போதையால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் விபத்துகள், பெண் வன்கொடுமை குறித்த காட்சிகள், ஜாதிய வேற்றுமைகளை களையும் பொருட்டு கைகளில் அடையாள கயிறுகளை கட்டி இருப்பதை அறுத்து தீயிட்டு கொளுத்துவது போன்ற காட்சிகள் என பலவும் பார்வையாளர்களை கவரும் விதமாகவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அமைந்திருந்தது. இதனை பள்ளி மாணவ மாணவிகள், பொதுமக்கள் ஆகியோர் ஆர்வமுடன் பார்வையிட்டுச் சென்றனர்.

| இதையும் படிங்க: சென்னையில் 'குளு குளு' சீசன் தொடரும் - வானிலை ஆய்வு மையம் |
குறிப்பாக மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் ஐயப்ப பக்தர்களுக்கு கிறிஸ்தவ பாதிரியார்கள் தண்ணீர் கொடுப்பது போன்ற காட்சிகள் தத்ரூபமாக காண்பிக்கப்பட்டது. இதைப் பார்த்தபடியே வாகன விபத்து தொடர்பான விழிப்புணர்வு காட்சியை காணச் சென்றோம். அங்கு மாணவிகள் இருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி ரத்த காயத்தோடு உயிரிழந்து கிடப்பது போன்ற காட்சியை நாம் காண முடிந்தது. இந்த காட்சியில் இடம்பெற்ற இரண்டு மாணவிகள் நிஜமாகவே உயிரிழந்து கிடப்பதை போன்று முக பாவனையை வெளிப்படுத்தி பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தனர்.

இதுகுறித்து மாணவி ஜெயபாலா நம்மிடம் கூறுகையில், “சமுதாயத்தில் நடைபெறும் சில மோசமான செயல்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லக்கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக ஆண்டுதோறும் எங்கள் கல்லூரியில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் நாங்கள் ஐந்து குழுக்களாக பிரிந்து நிலைக்காட்சி நடத்தியுள்ளோம். குறிப்பாக மத நல்லிணக்கம், பிளாஸ்டிக் ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு, பெண் சமூக நீதி, வாகன விபத்து உட்பட பல்வேறு விஷயங்களை சுட்டிக்காட்டி உள்ளோம்” என்றார்.

மாணவி சல்மா பர்ஷானா நம்மிடம் கூறும்போது, “நாங்கள் ஐந்து குழுக்களாக இதில் பங்கேற்றுள்ளோம். இதற்காக கடந்த ஒரு மாதமாக நாங்கள் உழைத்தோம். இந்த ஒரு மாதத்தில் தினமும் ஆசிரியர்கள் எங்களுக்கு பயிற்சி கொடுத்தார்கள்” என்று கூறினார்.

