ETV Bharat / state

ஆடம்பரமாக வாழும் ஆசையில் வயதானவர்களை குறி வைத்து வழிப்பறி: மாணவன் - மாணவி கைது

கல்லூரி மாணவர்களிடம் இருந்து 4 பவுன் தங்கச் சங்கிலி, 2 கைப்பேசிகள் மற்றும் இரு சக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

சிசிடிவி காட்சி
கல்லூரி மாணவர்கள் தப்பி சென்ற சிசிடிவி காட்சி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : September 2, 2026 at 2:40 PM IST

1 Min Read
Choose ETV Bharat

கோயம்புத்தூர்: போத்தனூர் அருகே முகமூடி அணிந்து மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவத்தில், கல்லூரி மாணவரும், அவரது தோழியும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளலூர் பகுதியில் வசிப்பவர் சரஸ்வதி (73). இவர் கடந்த ஆக.30 ஆம் தேதி மாலை 5.30 மணியளவில், தனது உறவினர்களுடன் வெள்ளலூர் கறிக்கடை பேருந்து நிறுத்தம் அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது, அங்கு வந்த முகமூடி அணிந்து நபர் ஒருவர், அவர்களிடம் அருகில் உள்ள க்ளினிக் எப்போது திறக்கப்படும்? எனக் கேட்டுள்ளார். மேலும், மருத்துவரின் வீடு எங்குள்ளது என அந்த நபர் கேட்க, அதற்கு சரஸ்வதி வழி சொல்லியுள்ளார்.

அப்போது, முகமூடி அணிந்து வந்த அவர், திடீரென சரஸ்வதி அணிந்திருந்த சுமார் 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடியுள்ளார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சரஸ்வதி கூச்சலிடவே, அங்கிருந்தவர்கள் அவரை பிடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால், அதற்குள் அந்த நபர் தப்பியோடிவிட்டதாக தெரிகிறது.

பின்னர், செய்வதறியாது தவித்த சரஸ்வதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போத்தனூர் போலீசார், நகைப்பறிப்பில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை அமைத்தனர். தொடர்ந்து, சம்பவம் நடந்த பகுதியில் சுற்றியுள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தனர்.

அப்போது, சற்று தொலைவில் இருசக்கர வாகனத்தில் தயாராக இந்த பெண்ணுடன், சங்கிலியை பறித்த நபர் தப்பிச் சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தன. பின்னர், அந்த இருசக்கர வாகனத்தின் எண்ணை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இதையும் படிங்க: ஆகஸ்ட் மாதத்தில் அதிரடி காட்டிய லஞ்ச ஒழிப்புத்துறை - கணக்கில் வராத ரூ.1.21 கோடி ரொக்கம் பறிமுதல்

இதில், அந்த வாகனம் திருநெல்வேலியைச் சேர்ந்த சிந்து (21) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், கல்லூரி விடுதியில் வைத்து பரணிதரன் (21) என்ற மாணவரையும் போலீசார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

விசாரணையில், இவர்கள் கோவை மாவட்டம், கேஜி சாவடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி எம்பிஏ படித்து வருவதும், ஆடம்பரமாக வாழ்வதற்காக ஆசைப்பட்டு வயதான பெண்களை நோட்டமிட்டு நகைப்பறிப்பில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, அவர்களிடம் இருந்து 4 பவுன் தங்கச் சங்கிலி, 2 கைப்பேசிகள் மற்றும் இரு சக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.