ETV Bharat / state

மாநிலக் கல்லூரி வளாகத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அரங்கம் திறப்பு

முத்தமிழறிஞர் கலைஞர் அரங்கமானது 60,672 சதுரஅடி பரப்பளவில் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் கூடிய கலையரங்கம், நிர்வாக அலுவலகம், முக்கிய பிரமுகர்கள் அறை, கலைஞர்கள் ஓய்வு அறையுடன் அமைந்துள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (TN DIPR)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : March 4, 2026 at 5:30 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: மாநிலக் கல்லூரி வளாகத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அரங்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் ரூ.63 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அரங்கத்தினை திறந்து வைத்தார். மேலும் 'உலகம் உங்கள் கையில்' திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளையும் வழங்கினார்.

முத்தமிழறிஞர் கலைஞர் அரங்கத்தின் சிறப்பம்சங்கள்:

சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அரங்கமானது 60,672 சதுரஅடி பரப்பளவில் முழுவதும் குளிரூட்டப்பட்ட கலையரங்கம், நிர்வாக அலுவலகம், முக்கிய பிரமுகர்கள் அறை, கலைஞர்கள் ஓய்வு அறையுடன் கலையரங்கத்தின் தரைத்தளத்தில் 1,272 நபர்களும், முதல் தளத்தில் 800 நபர்களும் என மொத்தம் 2,072 நபர்கள் அமரக்கூடிய வகையில் "முத்தமிழறிஞர் கலைஞர் அரங்கம்" அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில் அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களை தொடங்குதல், அதன் வாயிலாக ஆராய்ச்சி, புதுமைப் படைப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் மாணவர்களின் திறன்களை வளர்த்து வேலைவாய்ப்பினை உறுதி செய்தல், "நான் முதல்வன்" திட்டத்தின் மூலம் தகுதிவாய்ந்த திறன்மிகு இளைஞர்களை உருவாக்குதல், அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர்கல்வி பயில "புதுமைப் பெண்” திட்டம் மற்றும் மாணவர்கள் உயர்கல்வி பயில "தமிழ்ப் புதல்வன்” ஆகிய திட்டங்களின் கீழ் மாதம் ரூபாய் 1,000 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு இளநிலை தொழிற்கல்வி படிப்புகளுக்கான சேர்க்கையில் 7.5 விழுக்காடு முன்னுரிமையின் அடிப்படையில் இடஒதுக்கீடு, முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு சலுகைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதால் அகில இந்திய அளவில் தமிழ்நாடு உயர்கல்வி மாணவர்கள் சேர்க்கையில் 47 சதவீதத்துடன் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

இதையும் படிங்க: குடியுரிமையை மறைத்து 10 வருடங்கள் தமிழகத்தில் வசித்த இலங்கைப் பெண் கைது

திமுக அரசு பொறுப்பேற்ற இந்த 5 ஆண்டுகளில் கிராமப்புற மாணவர்களின் உயர்கல்வித் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யும் நோக்கில் 38 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், 4 வேளாண்மை கல்லூரிகளும், ஒரு பாலிடெக்னிக் கல்லூரி, ஒரு சட்டக்கல்லூரி மற்றும் 41 தொழில்பயிற்சி கல்லூரிகள் என மொத்தம் 85 புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டு 28,351 மாணவர்கள் கூடுதலாகவும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மட்டும் 252 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளதால் 13,346 மாணவர்கள் கூடுதலாகவும் பயனடைந்து வருகின்றனர்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.