''பரிசு, பணப்பட்டுவாடா'' - மதுரையில் 5 தொகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும்; ஆட்சியர் பிரவீன் குமார்
பரிசு பொருட்கள், பணப்பட்டுவாடா உள்பட பல்வேறு செலவினங்கள் அடிப்படையில் மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, திருப்பரங்குன்றம் மற்றும் திருமங்கலம் தொகுதிகள் கூடுதல் கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட உள்ளன.

Published : February 23, 2026 at 7:55 PM IST
மதுரை: வரும் சட்டப் பேரவை தேர்தலில் பரிசு மற்றும் பணப்பட்டுவாடா ஆகியவற்றின் அடிப்படையில் மதுரை மாவட்டத்தில் 5 தொகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் கூறியுள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று வெளியிடப்பட்டது. இதன் பிறகு செய்தியாளரை சந்தித்த மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், ''இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடந்து முடிந்துள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19.12.2025 அன்று வெளியிடப்பட்டது.
அப்போது மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 23,60,157 (ஆண்கள் 11,58,601, பெண்கள் 12,01,319 மற்றும் மூன்றாம் பாலினத்தனவர் 237) ஆகும். வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்க்கவும், நீக்கம், திருத்தம் போன்ற பணிகளுக்காக 19.12.2025 முதல் 30.01.2026 வரை உரிய படிவங்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட படிவங்கள் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களால் முறையாக விசாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்களால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு படிவங்கள் முடிவு செய்யப்பட்டன.
இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (23.02.2026) வெளியிடப்பட்டது. ஆண் வாக்காளர்கள் 12,08,651, பெண் வாக்காளர்கள் - 12,58,051 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 252 ஆக மொத்தம் 24,66,954 வாக்காளர்கள் உள்ளனர்.

மேலூர் (188) தொகுதி
ஆண்கள் 1,13,091, பெண்கள் 1,14,687 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 11 என மொத்தம் 2,27,789 வாக்காளர்கள்.
மதுரை கிழக்கு (189) தொகுதி
ஆண்கள் 1,61,361, பெண்கள் 1,69,579, மூன்றாம் பாலினத்தவர் 53 என மொத்தம் 3,30,993 வாக்காளர்கள் உள்ளனர்.
சோழவந்தான் (தனி) தொகுதி
ஆண்கள் 1,04,246, பெண்கள் 1,08,243, மூன்றாம் பாலினத்தவர் 13 என மொத்தம் 2,12,502 வாக்காளர்கள்.
மதுரை வடக்கு (191) தொகுதி
ஆண்கள் 1,06,263, பெண்கள் 1,12,410, மூன்றாம் பாலினத்தவர் 46 என மொத்தம் 2,18,719 வாக்காளர்கள் ஆவர்.
மதுரை தெற்கு (192) தொகுதி
ஆண்கள் 87,179, பெண்கள் 90,378, மூன்றாம் பாலினத்தவர் 48 என மொத்தம் 1,77,605 பேர் வாக்காளர்கள்.
மதுரை மத்தி (193) தொகுதி
ஆண்கள் 95,632, பெண்கள் 1,01,198, மூன்றாம் பாலினத்தவர் 26 என மொத்தம் 1,96,856 வாக்காளர்கள்
மதுரை மேற்கு (194) தொகுதி
ஆண்கள் 1,33,116, பெண்கள் 1,38,214, மூன்றாம் பாலினத்தவர் 11 என மொத்தம் 2,71,341 வாக்காளர்கள் ஆவர்.
திருப்பரங்குன்றம் (195) தொகுதி
ஆண்கள் 1,50,596, பெண்கள் 1,57,157, மூன்றாம் பாலினத்தவர் 30 என மொத்தம் 3,07,783 வாக்காளர்கள் உள்ளனர்.
திருமங்கலம் (196) தொகுதி
ஆண்கள் 1,25,756, பெண்கள் 1,33,461, மூன்றாம் பாலினத்தவர் 8 என மொத்தம் 2,59, 225 வாக்காளர்கள் உள்ளனர்.
உசிலம்பட்டி (197) தொகுதி
ஆண்கள் 1,31,411, பெண்கள் 1,32,724, மூன்றாம் பாலினத்தவர் 6 என மொத்தம் 2,64,141 வாக்காளர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
மொத்த வாக்காளர்கள் விவரம்
மொத்தம் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆண்கள் 12,08,651, பெண்கள் 12,58,051 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 252 என மொத்தமாக 24,66,954 வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர் திருத்த தீவிர பணியின் போது மதுரை மாவட்டத்தில் இடமாற்றம் காரணமாக 2,30,068 பேர் மற்றும் இறந்து போனவர்கள் 94,432 பேர், இரட்டை பதிவு காரணமாக 13,336 பேர் என நீக்கம் செய்யப்பட்ட மொத்த வாக்காளர்கள் 3,80,474 பேர் ஆவர். 18 வயது நிறைவடைந்த புதிய வாக்காளர்கள் 1,06,797 பேர் தற்போது சேர்க்கப்பட்டுள்ளனர்.
தனியார் குடியிருப்பில் வாக்குச்சாவடி
மதுரை மாவட்டத்தில் உள்ள பெரிய குடியிருப்புகளில் வாக்கு சாவடி அமைப்பது குறித்த நடவடிக்கையின் அடிப்படையில் சோதனை முயற்சியாக மதுரை கோச்சடை பகுதியில் உள்ள மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 814 வாக்காளர்களைக் கொண்ட சாந்தி சதன் அபார்ட்மெண்ட் வளாகத்தில் அமைந்துள்ள சமுதாயக் கூடத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்பட உள்ளது. எந்த ஒரு வாக்காளரும் தனது வாக்கினை பதிவு செய்ய 2 கிமீ அப்பால் செல்லக் கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் நோக்கத்திற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெண்களுக்காக மாதிரி வாக்குச்சாவடி மையம்
மேலும் மதுரை மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் தொகுதிக்கு ஒன்று என்ற அடிப்படையில் பெண்களுக்காக மட்டும் மாதிரி வாக்குச்சாவடி மையங்கள் உருவாக்கப்பட உள்ளன. இந்த மையங்களில் தேர்தல் அலுவலர்களாகவும் பெண்கள் மட்டுமே இருப்பார்கள். வாக்காளர்களோடு வரும் குழந்தைகளுக்காக மையத்தில் விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட நவீன வசதிகள் ஏற்படுத்தி தரப்பட உள்ளன.
பதற்றம் நிறைந்த 368 வாக்குச்சாவடிகள்
மதுரை மாவட்டத்தில் 368 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றத்துக்கு உரியவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் 90 விழுக்காட்டிற்கு மேல் வாக்குகள் பதிவாகி, அக்குறிப்புட்ட மையத்தில் 75 விழுக்காட்டிற்கு மேல் ஒரே வேட்பாளருக்கு வாக்குகள் பதிவாகி இருந்தாலோ அல்லது பத்து விழுக்காட்டிற்கு குறைவாக வாக்குகள் பதிவாகி இருந்தாலோ அக்குறிப்பிட்ட மையங்கள் மிக கவனத்திற்குரிய வாக்குச்சாவடிகளாக இனம் காணப்படும். அந்த அடிப்படையில் மதுரை மாவட்டத்தில் 12 வாக்குச்சாவடி மையங்கள் சிறப்பு கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட உள்ளன.
5 சட்டமன்ற தொகுதிகள் கூடுதல் கண்காணிப்பு
பரிசு பொருட்கள், பணப்பட்டுவாடா உள்பட பல்வேறு செலவினங்கள் அடிப்படையில் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, திருப்பரங்குன்றம் மற்றும் திருமங்கலம் தொகுதிகள் கூடுதல் கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட உள்ளன. சென்ற தேர்தலில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் அடிப்படையில் மேற்கண்ட சட்டமன்ற தொகுதிகள் கூடுதல் கண்காணிப்பு செய்யப்பட உள்ளன. எனவே Expenditure sensitive assembles என இந்த தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
| இதையும் படிங்க: "கல்வி தான் கடவுள் - அது தேவையான அனைத்தையும் கொடுக்கும்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு |
பரிசு, பணப்பட்டுவாடா ஆகியவற்றின் அடிப்படையில் மதுரை மாவட்டத்தில் ஐந்து தொகுதிகள் (Expenditure Sensitive Assemblies) தீவிரமாக கண்காணிக்கப்படும். கடந்த தேர்தலில் அதிகமாக பணம், பரிசு பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையிலும் அதிகமாக செலவுகள் செய்யப்பட்ட மதுரை மாவட்டத்தின் 5 சட்டமன்ற தொகுதிகள் தீவிர கண்காணிப்பு செய்யப்பட உள்ளன'' என்று மதுரை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிரவீன் குமார் கூறினார்.

