கோவை சிறுமி கொலை வழக்கு; கைதானவர்களை 3 நாள்கள் போலீஸ் காவலில் எடுக்க நீதிமன்றம் அனுமதி
ஐந்து நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டிருந்த காவல் துறையின் மனு மீது போக்சோ நீதிமன்றம் இன்று விசாரணை மேற்கொண்டது.

Published : June 3, 2026 at 9:10 PM IST
கோயம்புத்தூர்: கோவையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி உள்ள இருவரையும் 3 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போக்சோ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கோவையில் கடந்த 21 ஆம் தேதி சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கார்த்தி என்பவர் குற்றம்சாட்டப்பட்ட முதல் நபராகவும், அவருக்கு உதவி செய்ததாக மோகன்ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டு இருவர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதில் காவல்துறையிடம் இருந்து தப்ப முயன்றபோது கை, கால் எலும்பு முறிந்த கார்த்தி சிகிச்சைக்குப் பின் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அங்கும் சக கைதிகள் தாக்கியதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் இருவரையும் 5 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் நீதிமன்றத்தில் மனு கொடுத்திருந்தனர். மனு மீதான விசாரணைக்கு இன்று கார்த்தி மற்றும் மோகன்ராஜ் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
இதையும் படிங்க: கோயம்பேடு பார் தகராறு: சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு சிறுமி உயிரிழப்பு
கை, கால் எலும்பு முறிந்த நிலையில் உள்ள கார்த்தி ஸ்ரெக்சரில் அழைத்து வரப்பட்டார். பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய வழக்கில் கைதானவர்கள் என்ற சூழலில் சுமார் 100 காவலர்கள் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.
இவர்கள் மீது தாக்குதல் ஏதும் நடைபெறக் கடாது என்பதால், நீதிமன்ற வளாகத்தில் குறிப்பிட்ட எல்லையில் கயிறுகள் கட்டி காவல்துறையினர் யாரையும் நெருங்காத வண்ணம் நீதிமன்றத்திற்குள் ஆஜர்படுத்தினர்.
ஐந்து நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டிருந்த காவல் துறையின் மனு மீது விசாரணை மேற்கொண்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி பகவதி அம்மாள் 3 நாள்கள் மட்டும் அனுமதி வழங்கினார்.
இந்த வழக்கில் விரைவில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் கூடுதல் வாக்கு மூலம் உள்ளிட்டவற்றை இந்த 3 நாள்களில் போலீஸ் காவலில் பெற நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

