''கோயம்புத்தூர், மதுரை மெட்ரோ ரயில் திட்டம்'' - சென்னை மெட்ரோ ரயில் இயக்குநர் முக்கிய தகவல்
போரூரில் இருந்து வடபழனி வரை 5.5 கிமீ தூரம் உயர்மட்ட வழித்தடத்தில் சோதனை ரயில் ஓட்டத்தை முடித்துள்ளது. இது ஒரு மைல் கல்.

Published : January 11, 2026 at 5:40 PM IST
சென்னை: கோயம்புத்தூர், மதுரை மெட்ரோ ரயில் பணிகள் நிறுத்தப்படவில்லை எனவும் நிலம் கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம் என்றும் சென்னை மெட்ரோ ரயில் இயக்குநர் சித்திக் தெரிவித்தார்.
சென்னையின் 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் போக்குவரத்து திட்டத்தின் முக்கிய மைல்கல்லாக கருதப்படும் போரூர் - வடபழனி வழித்தடத்தில் முதல்முறையாக சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. தமிழகத்தின் இரண்டாம் அடுக்கு நகரங்களுக்கு மெட்ரோ ரயில் சேவையை விரிவுப்படுத்துவதற்கு மாநில அரசின் ரூ.60000 கோடி நிதி ஒதுக்கீட்டின் ஒரு பகுதியாக மதுரை மெட்ரோ ரயில் திட்டம் ரூ.11368 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த திட்டமிடப்பட்டது.
திருமங்கலத்தில் இருந்து ஒத்தக்கடை வரை 32 கிமீ தூரத்திற்கு 17 ரயில் நிலையங்களை இணைக்கும் விதமாக சென்னை மெட்ரோ ரயில் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. அதேப் போல கோயம்புத்தூருக்கு ரூ.10,740 கோடி மதிப்பிலான மெட்ரோ திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை கடந்த 2023 ஜூலையில் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால் மத்திய அரசு கோயம்புத்தூர், மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி மறுத்தது.
இந்த நிலையில் சென்னை வடபழனியில் மெட்ரோ ரயில் திட்டத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''மதுரை, கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டத்தை பொறுத்தவரை மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசு சொல்லி இருந்த தகவல்களை கூடுதலாக சேர்த்து மீண்டும் அனுப்பி உள்ளோம். மதுரை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு நிலம் கையகப்படுத்துதல், ஆய்வு செய்யக்கூடிய பணிகள் நிறுத்தப்படவில்லை.
மதுரைக்கு ஏற்கனவே முடிந்து விட்டது. கோயம்புத்தூருக்கு இன்னும் சில வாரத்தில் முடிந்து விடும். கோயம்புத்தூர், மதுரை மெட்ரோ ரயிலுக்கான பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் ஒப்புதலுக்கு காத்திருக்கிறோம். கோயம்பேடு- பட்டாபிராம், பூந்தமல்லி சுங்குவார்சத்திரம், விமான நிலையம் - கிளாம்பாக்கம் உள்ளிட்ட 3 வழித் தடங்களுக்கும் பூர்வாங்க பணிகள் ஆரம்பித்துள்ளது. சென்னை கடற்கரை வேளச்சேரி பறக்கும் ரயில் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் இயக்குவதற்கான பணிகளை ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
போரூர் - வடபழனி மெட்ரோ இரண்டாம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றி
மேலும் போரூரில் இருந்து வடபழனி வரை 5.5 கிமீ தூரம் உயர்மட்ட வழித்தடத்தில் சோதனை ரயில் ஓட்டத்தை முடித்துள்ளது. இது ஒரு மைல் கல். பூந்தமல்லி பைபாஸில் இருந்து போரூர் ஜங்ஷன் வரை 2025 டிசம்பருக்கு பணிகள் முடிப்பதற்கு திட்டமிடப்பட்டது. இந்த நிலையில் பணிகள் கிட்டத்தட்ட முழுமையாக நிறைவடையும் நிலையில் உள்ளது. பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை மட்டும் வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து வடபழனி வரையில் பொது மக்களுக்கு இணைப்பு அளிக்க முடியாத நிலை இருந்தது. எனவே பூந்தமல்லியில் இருந்து பயணிக்கும் மக்களுக்கு வடபழனி வரை இணைப்பு கொடுத்தால் தான் உபயோகமாக இருக்கும் என நினைக்கிறோம். அதன் மூலமாகத் தான் மற்ற இணைப்பு ரயில்களையும் மக்கள் பயன்படுத்த முடியும். எனவே இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் வழித்தடத்தில் இருந்து முதல் கட்ட ரயில் வழித்தடத்திற்கு இணைப்பு கொடுத்துள்ளோம்.
போரூரில் இருந்து வடபழனி வரையிலும் டபுள் டக்கர் வழித்தடம் அமைக்கப்பட்டு மிகுந்த சிரமத்திற்கு இடையே பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரயில் செல்லக்கூடிய தண்டவாளம் வழித்தடங்கள் தயார் செய்யப்பட்டு அதற்குரிய தொழில்நுட்ப வசதிகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்பொழுது 15 கிலோமீட்டர் மணிக்கு என்ற நிலையில் இயக்கப்பட்டது.
இந்த மாத இறுதிக்குள் வடபழனி முதல் போரூர் வரையில் மெட்ரோ ரயில் இயல்பாக இயக்கப்படக்கூடிய வேகத்தில் சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. பூந்தமல்லியில் இருந்து மெட்ரோ ரயில் போரூர் அடுத்து வடபழனியில் மட்டும் தான் நிற்கும். ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இது அடுத்த 4, 5 மாதங்களில் ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் சரி செய்து எல்லா நிறுத்தங்களிலும் நின்று செல்ல வழிவகை செய்யப்படும்.
இன்றைய சோதனை ஓட்ட தூரத்தை கடப்பதற்கு 45 நிமிடங்கள் ஆனது. இந்த வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லாத ரயில் தான் இயக்கப்பட உள்ளது. சோதனை ஓட்டம் என்பதால் ஓட்டுநர் வைத்து தான் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அடுத்த ரயில் நிலையங்கள் தயார் ஆகும் வரையில் ஓட்டுநர் மூலம் இயக்கப்படும். பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை 7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. போரூரில் இருந்து வடபழனி வரை ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பின்னர் அவர்கள் அறிவுறுத்தல் படி ரயில் இயக்கப்படும். வடபழனி முதல் போரூர் வரையில் அமைக்கப்பட்டுள்ள அப் அண்டு டவுன் வழித்தடத்தில் 4 அல்லது 5 நாட்களில் இரண்டு வழித்தடத்திலும் சோதனை மேற்கொள்ளப்படும்.
வடபழனியை பொறுத்தவரை பழைய ஸ்டேஷனில் தான் உள்ளே செல்ல அனுமதிக்கப்படும். அதில் இருந்து மெட்ரோ ரயில் கட்டண பகுதிக்கு உள்ளே வந்து ஸ்டேஷன் போகிறவர்கள், மேலே ஏறி பிளார்ட் பார்ம் செல்வார்கள். ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட அதே அளவிற்கான கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் ரயில்வே வாரியம் அனுமதி அளித்த பின்னர் மத்திய, மாநில அரசுகளுக்கு திறப்பதற்கு பிப்ரவரி மாதம் கடிதம் அனுப்பப்படும். அவர்கள் அனுமதி அளித்த பின்னர் முக்கிய விருந்தினர்களை கொண்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம். போரூரில் இருந்து கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் வரை 2026 ஜூன் மாதம் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணிகள் நடைபெறும் பகுதிகளில் பணிகள் முடிந்த பின்னர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அளிப்பதற்கு ஏற்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்று தெரிவித்தார்.
| இதையும் படிங்க: 'தமிழகத்தில் இருந்து 10 ஆயிரம் பேரை திரட்டி பிரதமர் மோடி வீட்டை முற்றுகையிடுவோம்' - செல்வப்பெருந்தகை |
இதன் பின்னர் தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டம்,வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் கோபால் பேசுகையில், ''தமிழ்நாட்டில் மதுரை, கோயம்புத்தூர் முக்கியமான நகரங்கள். தொழில், மக்கள் அடர்த்தி எல்லாமே பூர்த்தி செய்துள்ளது. இந்த மாதிரி நகரங்களுக்கு கண்டிப்பாக மெட்ரோ ரயில் தேவைப்படும் என்று தகவல்களை சேகரித்து அரசுக்கு அனுப்பியுள்ளோம். முதலமைச்சரும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அது சம்பந்தமாக தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்'' என்றார்.

