ETV Bharat / state

தான் பிறந்த எழும்பூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு; குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்த முதல்வர் விஜய்

மகப்பேறு மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்திய விஜய், மருத்துவமனையில் வழங்கப்படும் சுகாதார சேவைகள், வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

குழந்தையை கொஞ்சிய முதல்வர் விஜய்
குழந்தையை கொஞ்சிய முதல்வர் விஜய் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : July 8, 2026 at 5:36 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் விஜய் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் பணிகளை முடித்த முதலமைச்சர் விஜய், எழும்பூர் குழந்தைகள் நல அரசு பொது மருத்துவமனையில் இன்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

மருத்துவமனையின் பல்வேறு பிரிவுகளை பார்வையிட்ட அவர், அங்கு சிகிச்சை பெற்று வரும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அப்போது, அங்கிருந்த தாய்மார்களிடம் நலம் விசாரித்த முதலமைச்சர் விஜய், அவர்களின் பச்சிளம் குழந்தைகளை கையில் தூக்கி கொஞ்சி மகிழ்ந்தார்.

தொடர்ந்து, மகப்பேறு மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தி, தாய் மற்றும் குழந்தைகள் நல சேவைகள், மகப்பேறு சிகிச்சை வசதிகள், மருத்துவ உபகரணங்கள், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சையின் தரம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து கேட்டறிந்தார்.

தான் பிறந்த எழும்பூர் அரசு மருத்துவமனையில் விஜய் திடீர் ஆய்வு (ETV Bharat Tamil Nadu)

மேலும், பொதுமக்களுக்கு தரமான மற்றும் விரைவான மருத்துவ சேவைகளை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதேபோல, மருத்துவமனையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், நேற்று வந்தது போல எந்த ஒரு புகாரும் இனிமேல் வரக்கூடாது என மருத்துவர்களிடம் அறிவுறுத்தினார்.

தான் பிறந்த எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு முன்னறிவிப்பின்றி விஜய் சென்றதால், அங்கிருந்த அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். இந்த ஆய்வின்போது, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜிடம் சமூக வலைதளங்களில் அரசு மருத்துவமனை குறித்த புகார்கள் வந்த நிலையில், முதல்வர் இங்கு வந்துள்ளாரா? என்ற கேள்வி கேட்கப்பட்டது.

மருத்துவர்களுடன் பேசிய முதலமைச்சர் விஜய்
மருத்துவர்களுடன் பேசிய முதலமைச்சர் விஜய் (ETV Bharat Tamil Nadu)

அதற்கு பதிலளித்த அவர், "புகார் வந்தவுடன் அது எங்கள் கவனத்திற்கும் வந்தது. உடனடியாக இங்குள்ள மருத்துவ அதிகாரியிடம் தெரிவித்து, மருத்துவமனையில் என்னென்ன வசதிகள் உள்ளன என்பதை நேரில் ஆய்வு செய்தோம். முதலமைச்சர் நீண்ட நாட்களாகவே மருத்துவமனையை பார்வையிட வேண்டும் என்று கூறி வந்தார். இதற்கிடையே, இந்த புகாரைத் தொடர்ந்து நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.

நோயாளிகளிடம் பணம் கேட்கிறார்கள் என்பது போன்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. அதை மறுக்க முடியாது, ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். முடிந்தவரை இதுபோன்ற செயல்கள் நடைபெறக் கூடாது என்று அனைத்து மருத்துவமனைகளுக்கும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். யார் நோயாளிகளிடம் பணம் கேட்டாலும், அவர்கள் பணியிலிருந்து உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களின் உத்தரவு.

முதலமைச்சர் மிகவும் தெளிவாக கூறியிருக்கிறார். நேர்மையான அரசாங்கத்தையும், வெளிப்படையான நிர்வாகத்தையும் வழங்க வேண்டும் என்பதே தவெக அரசின் நோக்கம். அரசு மருத்துவமனைகளுக்கு பெரும்பாலும் ஏழை, எளிய மக்கள்தான் சிகிச்சைக்காக வருகிறார்கள். அவர்களிடம் எந்த சூழலிலும் பணம் வாங்கக் கூடாது.

இதையும் படிங்க: திமுக, அதிமுகவில் ஆளே இல்லாத நிலை ஏற்படும் - அமைச்சர் நிர்மல் குமார்

பொதுமக்களிடம் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் எந்த அரசு மருத்துவமனையாக இருந்தாலும், அங்கு எந்த ஊழியர் பணம் கேட்டாலோ அல்லது வற்புறுத்தினாலோ, தயவுசெய்து 104 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கவும். உடனடியாக அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

பணம் வாங்கிய ஊழியர்கள் ஒப்பந்த ஊழியர்களாக இருந்தால், குற்றச்சாட்டு உறுதியானவுடன் உடனடியாக பணியிலிருந்து நீக்கப்படுவார்கள். அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், மருத்துவமனைகளில் சுத்தமான கழிவறைகள், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் மக்களின் உரிமை. அவற்றை மேம்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். படிப்படியாக மேம்படுத்தும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம்

காப்பீட்டு அட்டை தொடர்பாகவும் சில சந்தேகங்கள் எழுகின்றன. இங்கு மருத்துவ சேவையைப் பெறுவதற்கு காப்பீட்டு அட்டை கட்டாயமல்ல. காப்பீட்டு அட்டை இல்லையென்றாலும், மருத்துவச் சேவை பெறுவது மக்களின் உரிமை. காப்பீட்டு அட்டை இல்லை என்ற காரணத்தால் யாருக்கும் சிகிச்சை மறுக்கப்பட முடியாது." என்று அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.