ETV Bharat / state

பக்ரீத் பண்டிகை: தமிழக ஆளுநர், முதல்வர் விஜய் வாழ்த்து

பக்ரீத் தியாகத் திருநாளில் இல்லங்கள் மகிழ்ச்சி நிரம்பியதாகவும், இதயங்கள் அமைதி நிறைந்ததாகவும், வாழ்க்கை வளமுடனும் விளங்கட்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.வி.ஆர்லேகர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் விஜய்
முதலமைச்சர் விஜய் (CMO Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 27, 2026 at 1:43 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.வி.ஆர்லேகர், முதலமைச்சர் விஜய் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் இஸ்லாமிய மக்களால் பக்ரீத் பண்டிகை நாளை (மே 28) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, இஸ்லாமிய சமூக மக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.வி.ஆர்லேகர், முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி.ஆர்லேகர் வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்து செய்தியில், “இந்த புனிதமான தியாகத் திருநாளில், உங்கள் இல்லங்கள் மகிழ்ச்சி நிரம்பியதாகவும், உங்கள் இதயங்கள் அமைதி நிறைந்ததாகவும், உங்கள் வாழ்க்கை வளமுடனும் விளங்கட்டும். இந்த புனிதத் திருநாள் தியாகம், கருணை மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகிய நிலையான மதிப்புகளை நமக்கு நினைவூட்டுகிறது.

இந்த தியாக திருநாள் பகிர்வு, பரிவு, ஒற்றுமை மற்றும் சமரசம் ஆகிய மனப்பான்மைகளை ஏற்கத் தூண்டி, நமது பன்முகத்தன்மை வாய்ந்த சமூகத்தை ஒன்றிணைத்து வைத்திருக்கும் பிணைப்புகளை மேலும் வலுப்படுத்துகிறது. இந்த திருநாள் அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்லெண்ணம் மற்றும் புதிய நம்பிக்கையை அளிக்கட்டும்” என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அதிமுக ஒன்றிணைவது உறுதி - சி.வி. சண்முகம் தரப்பு எம்.எல்.ஏ லீமா ரோஸ் தகவல்

இதேபோல், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்துப்பதிவில், “ஈகைத் திருநாளாம் பக்ரீத் திருநாளை முன்னிட்டு, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இறைவனின் கட்டளைக்கிணங்க தனது ஒரே மகன் இஸ்மாயிலை தியாகம் செய்யத் துணிந்த இப்ராஹிம் நபியின் உன்னதமான இறைபக்தியையும், தியாகத்தையும் நினைவுகூரும் வகையில் பக்ரீத் திருநாள் கொண்டாடப்படுகிறது. இறை நம்பிக்கை, தியாகம், கருணை, பகிர்வு, மனிதநேயம் ஆகிய உயரிய விழுமியங்களை மனிதகுலத்திற்கு உணர்த்தும் புனிதப் பெருநாளாக பக்ரீத் திகழ்கிறது.

ஏழை, எளிய மக்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதையும், சமூகத்தில் அன்பும், சமத்துவமும் நிலைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் பக்ரீத் திருநாளில் சமுதாயத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்கிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டு, அனைவருக்கும் எனது பக்ரீத் திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறப்பட்டுள்ளது.