ETV Bharat / state

சென்சார் போர்டு ஒன்றிய அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது - 'ஜனநாயகன்' விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தணிக்கை வாரியத்தை பாஜக அரசு இயக்குவதாக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 9, 2026 at 8:38 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை வரிசையில் சென்சார் போர்டும் ஒன்றிய அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது என கடுமையான கண்டனம் தெரிவிப்பதாக பதிவிட்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தைப் பொங்கலை முன்னிட்டு விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படமும், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘பராசக்தி’ திரைப்படமும் அடுத்தடுத்த நாட்களில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இந்த ஆண்டு பாக்ஸ் ஆபீஸில் கடுமையான போட்டி இருக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியம் மறுப்பு தெரிவித்தது.

இதனால் ஏற்கனவே அறிவித்திருந்தபடி ஜனவரி 9 ஆம் தேதி திரைப்படம் ரிலீஸாகாது என படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. மேலும் தணிக்கை வாரியத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை நீதிபதி பி.டி ஆஷா தீர்ப்பளித்தார்.

அப்போது அவர், திரைப்படத்துக்கு U/A சான்று வழங்க முடிவு செய்த பின் படத்தை ஆய்வு செய்த குழுவில் உள்ள உறுப்பினர் புகார் அளித்ததை ஏற்க முடியாது என்றும், தணிக்கை குழுவினர் தெரிவித்த மாற்றங்களை செய்த பின்னர் மறு ஆய்வுக்கு அனுப்ப அதிகாரம் இல்லை என்றும், கூறியதோடு, உடனடியாக தணிக்கை சான்று வழங்க வேண்டுமென உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: 'பராசக்தி'யில் 25 இடங்களில் 'கட்' கொடுத்த சென்சார் போர்டு; 'தீ பரவட்டும்' வசனம் மாற்றம்!

இந்த தீர்ப்பை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்த நிலையில், இன்று பிற்பகல் அந்த வழக்கானது தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அதில் தனி நீதிபதியின் உத்தரவு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதே போல், ’பராசக்தி’ திரைப்படத்திலும் தணிக்கை குழுவினர் 25 இடங்களில் ‘கட்’ கொடுத்துள்ளனர். அதில் ‘தீ பரவட்டும்’ என்ற வசனத்தை ‘நீதி பரவட்டும்’ என மாற்றியுள்ளது. குறிப்பாக, 'இந்தி என் கனவை அழித்தது' என்ற வசனத்தை மாற்றி 'என் ஒரே கனவு இந்தி திணிப்புக்கு எதிரானது' என்று மாற்றப்பட்டுள்ளது. அதே போல் வடஇந்தியர்களின் மிக முக்கிய உணவான சப்பாத்தியை உவமைப்படுத்தி 'வர சப்பாத்தி' என்று வரும் வசனம் மியூட் செய்யப்பட்டு இருக்கிறது.

முதல்வர் ட்வீட்

இந்நிலையில் தமிழ் திரைப்படங்களை தணிக்கை வாரியம் குறி வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின், எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை வரிசையில் சென்சார் போர்டும் ஒன்றிய பாஜக அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது. கடுமையான கண்டனங்கள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

‘ஜனநாயகன்’ திரைப்பட வெளியீட்டில் இடையூறுகள் ஏற்பட்டிருப்பதில் தமிழக அரசின் பங்கும் இருக்கிறது என விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், முதலமைச்சரின் இந்த பதிவு கவனம் பெற்றிருக்கிறது.