‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தின்மூலம் தமிழ்நாட்டில் 1.91 கோடி மக்கள் பயனடைவர் - முதல்வர் பெருமிதம்
இந்த திட்டத்தின் பணிகளுக்காக மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த சுமார் 50,000 உறுப்பினர்கள் தன்னார்வலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Published : January 9, 2026 at 6:17 PM IST
திருவள்ளூர்: ‘உங்கள் கனவ சொல்லுங்க’ திட்டத்தின் மூலமாக தமிழ்நாட்டில் 1.91 கோடி கிராமப்புற மக்கள் பயன்பெறுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுகவின் திராவிட மாடல் ஆட்சியின்கீழ் மகளிருக்கான விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், நலம் காக்கும் ஸ்டாலின், மக்களைத் தேடி மருத்துவம், அன்பு சோலை திட்டம், நான் முதல்வன் திட்டம், தாயுமானவன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் மூலம் முகாம்கள் அமைக்கப்பட்டு சாதி சான்றிதழ், வருவாய் சான்றிதழ், மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, வீட்டுமனை பட்டா மாற்றுதல் போன்றவற்றை அரசு எளிதாக்கி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ‘உங்க கனவ சொல்லுங்க’ என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தின்கீழ் கடந்த 5 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்களின் தற்போதைய நிலை என்ன? அதுகுறித்து மக்களின் கருத்து என்ன? என்பன குறித்து கேட்டறியப்படுவதுடன், பொதுமக்களின் எதிர்கால தேவைகள் மற்றும் கனவுகளும் கேட்டறியப்படவுள்ளன.
அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம், பாடியநல்லூரில் ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இத்திட்டம் குறித்து பேசிய அவர், “மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளை கண்டறியவும், அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்த கருத்துகளை கேட்டறியவும் தன்னார்வலர்கள் பொதுமக்களின் வசிப்பிடங்களுக்கே நேரடியாக செல்லவுள்ளனர்.
இந்த திட்டத்தின்மூலம் தமிழ்நாட்டில் உள்ள சுமார் 1.91 கோடி கிராமப்புற பகுதிகளில் வசிக்கிற மக்களையும் மற்றும் நகர்ப்புற மக்களையும் தன்னார்வலர்கள் நேரில் சென்று சந்திக்கவுள்ளனர். அரசின் திட்டங்கள் மூலம் பயன்பெற்றோர் குறித்த விவரங்கள் மற்றும் அவர்களுடைய கனவுகள் கேட்டறியப்படவுள்ளன. இந்த திட்டத்தின்கீழ் சுமார் 50 ஆயிரம் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இதன் களப்பணியை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் தமிழக அரசு மேற்கொள்ள உள்ளது” என்றார்.
மேலும் பேசிய அவர், "இப்பணிக்காக மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த சுமார் 50,000 உறுப்பினர்கள் தன்னார்வலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், இப்பணிகளை மேற்கொள்வதற்காக அவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டு பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துகளை பதிவு செய்ய தனியாக கைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது" என்றும் தெரிவித்தார்.

