2030-ஆம் ஆண்டுக்குள் 30% அரசு பேருந்துகள் மின்சார பேருந்துகளாக இருக்க வேண்டும் - முதல்வர் ஸ்டாலின் இலக்கு
இனி வரும் காலங்களில், அனைத்துத் துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களையும், காலநிலை நடவடிக்கையுடன் இணைந்து செயல்படுத்தும் விதமாக பட்ஜெட் உருவாக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.

Published : February 17, 2026 at 10:21 PM IST
சென்னை: 2030-ஆம் ஆண்டுக்குள் மாநில போக்குவரத்து கழகங்களின் கீழ் இயக்கப்பட்டு வரும் பேருந்துகளில், 30 விழுக்காடு பேருந்துகள் மின்சார பேருந்துகளாக இருக்க வேண்டும் என்பதே இலக்கு என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று சென்னையில் தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு 4.0 (TAMIL NADU CLIMATE SUMMIT 4.0) தொடங்கி வைத்தார். அதன் பின்னர் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், '' காலநிலை உச்சி மாநாடு மட்டுமல்ல, காலநிலை மாற்ற இயக்கம், பசுமைத் தமிழ்நாடு இயக்கம், தமிழ்நாடு ஈரநில இயக்கம், தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் மற்றும் இவற்றிற்கெல்லாம் கொள்கை வழிகாட்டுதல்களை வழங்கி வரும் தமிழ்நாடு காலநிலை மாற்ற ஆட்சி மன்றக் குழு என்று பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து கொண்டிருக்கிறோம்.
அதிகரித்து வரும் வெப்பநிலை, அதீத மழைப்பொழிவு, புயல், வறட்சி வெப்ப அலை - இப்படி எத்தனையோ இயற்கைப் பேரிடர்கள் உலகம் முழுவதும் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. அதுவும், தமிழ்நாடு போன்ற கடலோர மாநிலங்களுக்கு காலநிலை மாற்றம் என்பது எங்கேயோ நடக்கும் சம்பவம் கிடையாது. நமக்கு அது அன்றாட நிகழ்வாக அமைந்திருக்கிறது. நாம் கொண்டு வரும் ஒவ்வொரு திட்டங்களிலும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான தடுப்பு மற்றும் தகவமைப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து செயல்படுத்த வேண்டும். அந்த வகையில், நிறுவப்பட்ட காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவிலேயே இரண்டாவது இடமும், நிறுவப்பட்ட சூரிய ஒளி மற்றும் புதுப்பிக்கத்தக் ஆற்றல் உற்பத்தியில், இந்தியாவிலேயே நான்காவது இடமும் பெற்று, வளர்ந்து வருகின்ற மாநிலங்களில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றபோது இருந்ததைவிட, நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி அளவு, குறுகிய காலத்திலேயே 77 விழுக்காடு உயர்ந்திருக்கிறது. போக்குவரத்து மூலமாக ஏற்படும் கார்பன் உமிழ்வுகளைக் கட்டுப்படுத்த இ-பஸ் பயன்பாட்டை அதிகரித்து கொண்டு வருகிறோம். இப்போதைக்கு, மொத்தம் 380 இ-பஸ்கள் சென்னையில் இயக்கப்படுகிறன.
7 ஆயிரத்து 738 சுற்றுச்சூழலுக்கு உகந்த பேருந்துகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. 2030-ஆம் ஆண்டுக்குள் மாநில போக்குவரத்து கழகங்களின் கீழ் இயக்கப்பட்டு வரும் பேருந்துகளில், 30 விழுக்காடு பேருந்துகள் மின்சார பேருந்துகளாக இருக்க வேண்டும் இதுதான் நம்முடைய டார்கெட். மின்சார வாகனங்களுக்கு 2027-ஆம் ஆண்டு வரை “Road Tax”-லிருந்து விலக்கு கொடுத்திருக்கிறோம்.
சென்னையில் வெள்ள பாதிப்புகளை தவிர்க்க அமைத்திருக்கும் ‘ஸ்பாஞ்ச்’ பூங்காக்கள் நிலத்தடி நீர்மட்டத்தையும் உயர்த்துகிறது. தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கும் இதை விரிவுபடுத்தப் போகிறோம். நீலகிரி, கோவை, விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களை கார்பன் சமநிலை மையங்களாக மாற்ற திட்டம் வகுத்து செயல்படுத்திக் கொண்டு வருகிறோம். தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கத்தின் கீழ், அரிதான கடல்பசு, கடல் ஆமை, பறவைகள் உள்ளிட்ட உயிரினங்களைக் காக்க 6 உயர் சிறப்பு மையங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. அறிவிக்கப்பட்ட 8 புதிய வனஉயிரின சரணாலயங்கள், 100 புதிய காப்புக் காடுகள், அழிவின் விளிம்பில் உள்ள விலங்குகளை பாதுகாக்க 50 கோடி ரூபாய் நிதி, அலையாத்தி, சவுக்கு மற்றும் பனைமரங்கள் நடவு செய்யப்பட்டு, கடலோரப் பகுதிகளில், இயற்கைப் பேரிடர்களை தாக்குப்பிடிக்கும் உயிர்க்கேடயங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவிலேயே முதன்முறையாக, ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், பசுமைக் காலநிலை நிதியம் உருவாக்கப்பட்டு, இன்று, சுற்றுச்சுழல் பொருளாதாரம் மற்றும் தூய்மை மற்றும் போக்குவரத்து சார்ந்த தொழில்களை ஊக்குவிக்க நிதி வழங்கப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டில், முக்கியமான சில அறிவிப்புகளையும் நான் வெளியிட விரும்புகிறேன்.
முதல் அறிவிப்பு
- இனி வரும் காலங்களில், அனைத்துத் துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களையும், காலநிலை நடவடிக்கையுடன் இணைந்து செயல்படுத்தும் விதமாக பட்ஜெட் உருவாக்கப்படும்.
இரண்டாவது அறிவிப்பு
- நமது நாடு பாரிஸ் ஒப்பந்தத்தின்கீழ், கார்பன் உமிழ்வுகளை குறைக்க, தேசிய அளவில், தீர்மானிக்கப்பட்ட சில பங்களிப்புகளை ஏற்றுக் கொண்டது போல், நம் மாநிலத்தின் கார்பன் உமிழ்வுகளைக் குறைக்க, 2030-க்குள் செயல்படுத்தவேண்டிய மாநில அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள் உருவாக்கப்பட்டு, அவற்றை இலக்குகளாக கொண்டு செயல்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மூன்றாவது அறிவிப்பு
- தமிழ்நாடு முழுவதும் நடவு செய்ய ஐந்து லட்சம் சந்தன மரக்கன்றுகள் வழங்கப்படும்.
நான்காவது அறிவிப்பு
- வரும் காலங்களில் தொழிற்சாலைகளும், அரசு நிறுவனங்களும் இணைந்து, பசுமைத் தொழில்நுட்பங்களில் முதலீடு செய்து, உமிழ்வுகளைக் குறைக்கவும், உள்ளாட்சி அமைப்புகள் காலநிலை நடவடிக்கைக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படவும், இளைஞர்கள் காலநிலைத் தலைவர்களாகவும், தூதுவர்களாகவும் உருவெடுக்கவும் தொடர்ச்சியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.'' என பேசினார்.

