ETV Bharat / state

ஜல்லிக்கட்டை பார்வையிட மதுரை வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் - அமைச்சர் மூர்த்தி தகவல்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகின்ற ஜனவரி 15 தொடங்கி 16, 17 ஆகிய நாட்களில் மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன.

அமைச்சர் மூர்த்தி
அமைச்சர் மூர்த்தி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 5, 2026 at 3:37 PM IST

1 Min Read
Choose ETV Bharat

மதுரை: ஜல்லிக்கட்டு போட்டியை காண முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வருகை தரவுள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

வரும் 15-ல் தொடங்கி 16, 17 ஆகிய 3 நாட்கள் மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஆயத்த பணிகள் மேற்கண்ட கிராமங்களில் நடைபெற்று வருகின்றன. போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனையும் தற்போது நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான ஆன்லைன் பதிவு தொடங்க உள்ளது.

இதனிடையே, மதுரை மாவட்டத்தின் முதன் ஜல்லிக்கட்டு நடைபெறும் அவனியாபுரத்தில் முகூர்த்தக் கால் நடும் விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமையேற்று, பந்தக்கால் நட்டு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாட்டுப் பணிகளை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி, ”இந்த முறை ஜல்லிக்கட்டு போட்டிக்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், காவல் துறை ஆகியவை முன் கூட்டியே வேலைகளை ஆரம்பித்துள்ளன. இந்த முறை போட்டியை காண முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வருகை தருகின்றனர். நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு இந்த முறை ஏற்பாடுகள் சிறப்பாக அமையும்” என கூறினார்.

இதையும் படிங்க: 'எங்க ஊரு கயிறு இல்லாம ஜல்லிக்கட்டு இல்லப்பே' - மதுரையில் களைகட்டிய மூக்கணாங்கயிறு விற்பனை!

ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்தவர்களுக்கு கூடுதல் நிதியும், அரசு வேலையும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளதே? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் மூர்த்தி பதிலளிக்கவில்லை.

பின்னர் ஜல்லிக்கட்டு பரிசு குறித்து அவர் பேசுகையில், “ஆன்லைன் பதிவு முறையாக நடக்கும், அதில் ஒன்றும் பிரச்சனை இல்லை. முதல் பரிசு வழக்கம் போல கார், டிராக்டர் மூன்று ஜல்லிக்கட்டுளிலும் வழங்கப்படும். அதில் பாகுபாடு எதுவும் இருக்காது” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன், மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.