புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Published : January 3, 2026 at 2:08 PM IST
சென்னை: அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் 20 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்கக் கூடிய புதிய “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை’ செயல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ உள்ளிட்டவை பல ஆண்டுகளாக போராட்டங்களில் ஈடுபட்டு வந்தன. இந்த சூழலில், “திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும்” என 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் கடந்தும் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லையெனில், 2026 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவுக்கு எதிரான நிலைப்பாடு எடுக்கப்படும் என்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 6 முதல் காலவரையறையற்ற போராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ ஜியோ அறிவித்திருந்தது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உத்தரவிட்டார்.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
‘கரோனா பெருந்தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி உயர்வை 2022 ஆம் ஆண்டு முதல் ஒன்றிய அரசிற்கு இணையாக உயர்த்தி வழங்கியதோடு, ஒன்றிய அரசுக்கு இணையாக காலதாமதமின்றி வழங்கப்பட்டு வருகிறது.
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, 01.10.2025 முதல் அரசுப் பணியாளர்கள் தங்களது ஈட்டிய விடுப்பினை ஒப்படைப்பு செய்து பணமாகப் பெற்றுக்கொள்ளும் நடைமுறையை மீண்டும் அரசு செயல்படுத்தியுள்ளது.
அதேபோல, அரசு அலுவலர்களின் நலன் மற்றும் எதிர்பார்ப்புகள், மாநிலத்தின் நிதிநிலை, எதிர்காலத்தில் அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு எவ்வித தடைகளுமின்றி முறையாக ஊதியமும், ஓய்வூதியமும் கிடைக்க செய்ய வேண்டிய பொறுப்பு போன்ற பல அம்சங்களை சீர்தூக்கி பார்த்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குக் கிடைத்து வந்த ஓய்வூதியம் மற்றும் பல்வேறு பலன்களை தொடர்ந்து அளிக்கக் கூடிய ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்’ (Tamil Nadu Assured Pension Scheme) என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் அம்சங்கள் என்னென்ன?
- மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும்.
- 50 சதவீதத்திற்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கு, பணியாளர்களின் 10 சதவீத பங்களிப்போடு, ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்.
- 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் 6 மாதங்களுக்கு ஒருமுறை, அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும்.
- ஓய்வூதியதாரர் இறந்து விட்டால் அவர் ஏற்கெனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60% குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.
- அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும், அவரவரின் பணிக்காலத்திற்கேற்ப ரூ.25 லட்சத்திற்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும்.
- புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்ட பின், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதி பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்.
- பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தின் (Contributory Pension Scheme) கீழ் பணியில் சேர்ந்து, புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் செயல்படுத்தப்படுவதற்கு முன்னர் இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியம் இன்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்புக் கருணை ஓய்வூதியம் வழங்கப்படும்.
இந்த திட்டத்தை அறிமுகப்படுத்துவதால், ஓய்வூதிய நிதியத்திற்கு கூடுதலாக தமிழ்நாடு அரசு ரூ.13 ஆயிரம் கோடி அளிக்க வேண்டும். இது மட்டுமல்லாமல், தமிழக அரசு ஆண்டுதோறும் சுமார் ரூ.11 ஆயிரம் கோடியை அரசின் பங்களிப்பாக வழங்க வேண்டும். இப்பங்களிப்பு தொகை பணியாளர்களின் ஊதியத்திற்கேற்ப ஒவ்வொரு ஆண்டும் மேலும் உயரும்.
| இதையும் படிங்க: நாளை திருச்சி வருகிறார் அமித் ஷா - பொங்கல் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் |
தமிழ்நாடு அரசு சந்தித்து வரும் கடுமையான நிதிச்சூழலிலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களை காப்பதற்காக மேற்கூறிய செலவினங்களை தமிழ்நாடு அரசே முழுமையாக ஏற்கும்.
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனையும் அவர்களின் குடும்பத்தின் எதிர்காலத்தையும் மனதில் கொண்டு, தொலைநோக்கு பார்வையுடனும் நடைமுறை சாத்தியங்களுடனும் கூடிய வகையில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் 20 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றி, பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு இணையான ஓய்வூதியத்தையும், பணப் பயன்களையும் பெற வழிவகுக்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்தினை, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருமனதாக வரவேற்று, அதை செயல்படுத்துவதற்கான முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்’
இவ்வாறு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

