ETV Bharat / state

விஜய் பிரதமராக வேண்டும் என்பது ஒட்டுமொத்த இந்தியர்களின் விருப்பம்: அமைச்சர் நிர்மல்குமார்

விஜய் பிரதமராக வேண்டும் என தவெகவினர் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பேசி வரும் நிலையில், அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமாரின் கருத்து அரசியல் முக்கியத்தும் பெற்றுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 29, 2026 at 8:01 PM IST

2 Min Read
Choose ETV Bharat

மதுரை: விஜய் பிரதமர் ஆக வேண்டும் என்பதே ஒட்டுமொத்த இந்திய மக்களின் விருப்பமாக உள்ளது என்று அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்தார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகளை அமைச்சர் நிர்மல் குமார் இன்று (ஆக.29) பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்து பேசினார்.

அவர் கூறுகையில், "கும்பாபிஷேக விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. திமுக ஆட்சிக்காலத்தில் அக்கட்சி நிர்வாகிகளே அறங்காவலர் குழுவில் இடம்பெற்றிருந்தனர். தவெக ஆட்சியில் இப்படி எல்லாம் நடக்காது. யாரெல்லாம் கோவிலுக்கு பணியாற்றுகிறார்களோ அவர்கள்தான் அறங்காவலர் குழுவில் இடம்பெறுவார்கள்.

கும்பாபிஷேகத்தை ஒட்டி, மதுரையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது" என அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.

விஜய் பிரதமர் ஆக விருப்பம்

தொடர்ந்து, பிரதமர் வேட்பாளர் தேர்வில் முதலமைச்சர் விஜய் மூன்றாம் இடத்தில் உள்ளது குறித்து நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர், "விஜய் பிரதமர் ஆக வேண்டும் என ஒட்டுமொத்த இந்திய மக்களும் விரும்புகின்றனர். எனினும், இப்போது இதை பற்றி பேச வேண்டாம்" என்றார்.

தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்காமல் இருந்திருந்தால், அமித்ஷா என்ன செய்திருப்பார் என விஜய்க்கு தெரிந்திருக்கும் என மாணிக்தாகூர் கூறியது தொடர்பான கேள்விக்கு, "தமிழக வெற்றி கழகம் எப்போதும் நிலையாக இருக்கும் இயக்கம். யாரிடமும், எதற்காகவும் சமரசம் செய்ய மாட்டோம். யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது" என்றார்.

பரந்தூர் விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படுமா? என்ற கேள்விக்கு, "இதுகுறித்து முதலமைச்சர் ஆலோசித்து முடிவெடுப்பார்" என்றார்.

ஜல்லிக்கட்டு விவகாரம்

ஜல்லிக்கட்டு குறித்து தவெக எம்எல்ஏ கருப்பையா பேசியது தொடர்பான கேள்விக்கு, "ஜல்லிக்கட்டு மைதானத்தை திமுக அமைத்ததே கருணாநிதி பெயரை வைப்பதற்கு தான். ஜல்லிக்கட்டு பொழுதுபோக்கு அல்ல; நமது கலாச்சாரம். எல்லா கிராமங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தான் அவர்களுக்கு பெருமை.

அதை விட்டுவிட்டு, மைதானம் கட்டி ஜல்லிக்கட்டை கொச்சைப்படுத்துகிறார்கள். ஸ்டேடியம் கட்டி இளைஞர்களை தவறாக வழி நடத்துகிறார்கள்; மைதானத்தை கட்டி 4 பேரை ஜாலியாக சண்டை போடவிட்டு பார்க்கும் நிகழ்வு கிடையாது ஜல்லிக்கட்டு. இதை தான் எங்கள் எம்எல்ஏ பேசினார்.

இதையும் படிங்க: ராகுல் காந்தி Vs விஜய் - யார் பிரதமர் வேட்பாளர்?

அவர் பேசும் போதே, மைக் ஆஃப் ஆகிவிட்டது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி திமுகவினர் தவறான கருத்தை பரப்பி வருகின்றனர்" என அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் கூறினார்.

மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து

மதுரை அத்யபனா பள்ளியில் தான் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது குறித்த கேள்விக்கு, "அது தனியார் பள்ளி நடத்திய நிகழ்ச்சி. இதுகுறித்து அவர்களாகவே முடிவெடுத்திருக்கிறார்கள். பள்ளி நிகழ்ச்சி என்பதால் சென்றோம்" என பதிலளித்தார்.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மானிய கோரிக்கை கொள்கை குறிப்பேட்டில் தலைவர்கள் அம்பேத்கர், நேரு, பெரியார் பெயர் நீக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு, "உள்நோக்கத்தோடு அதனை செய்யவில்லை" என அமைச்சர் தெரிவித்தார்.