முந்தைய ஆட்சியில் தாக்கலான 12 மணி நேர வேலை மசோதா; வார்த்தை மோதலில் ஈடுபட்ட திமுக-தவெக தரப்பு
முந்தைய திமுக அரசு எந்த விதத்திலும் தொழிலாளர்களுக்கு எதிரான அரசு அல்ல என முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

Published : September 1, 2026 at 7:41 PM IST
சென்னை: சட்டப்பேரவையில் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 12 மணி நேர வேலை மசோதா தொடர்பாக தவெக-திமுக இடையே காரசாரமான விவாதம் எழுந்ததால் பேரவையில் அமளி ஏற்பட்டது.
தொழிலாளர்களின் வேலை நேரத்தை கடந்த திமுக ஆட்சியில் 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்த மசோதா கொண்டுவரப்பட்டது தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் திமுக உறுப்பினர்களுக்கு இடையே சட்டப்பரேவையில் கடும் விவாதம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "கடந்த திமுக ஆட்சியில் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா கொண்டுவரப்பட்டு, பின்னர் தோழமைக் கட்சிகளான கம்யூனிஸ்டுகளின் போராட்டத்திற்குப் பிறகே வாபஸ் பெறப்பட்டது. இதுதான் ஆதிக்க மனநிலை, சாம்சங் போராட்டத்தின் போது கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் தோழர்களையே திமுக அரசு கைது செய்தது.
வெளிநாட்டு முதலாளிகளுக்காக டாக்டர் அம்பேத்கர் சட்டங்களை இயற்றவில்லை; 8 மணி நேர வேலை என்பது நாடு முழுமைக்கும் பொதுவானது. ஒரு முதலாளி நினைத்தால் தொழிலாளியை 12 மணி நேரம் வேலை செய்ய வைக்கலாம் என்ற சிந்தனையே வரலாற்றுப் பிழை" எனச் சாடினார்.
இதற்கு பதிலளித்த திமுக எம்.எல்.ஏ எ.வ.வேலு, "தமிழ்நாட்டிற்கு வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மூலம் இங்குள்ள பட்டதாரி பொறியாளர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. விருப்பமுள்ள தொழிலாளர்கள் 12 மணி நேரம் வேலை செய்யலாம் என்ற அடிப்படையில்தான் அந்த மசோதா கொண்டுவரப்பட்டது; கூட்டணி தோழர்களின் கோரிக்கையை ஏற்று அது திரும்பப்பெறப்பட்டது. சாம்சங் பிரச்சனையும் சுமூகமாக முடித்து வைக்கப்பட்டது. வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்தால் மட்டுமே இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தர முடியும். திமுக அரசு என்றும் தொழிலாளர்களுக்கு எதிரான அரசு அல்ல" என்று தெரிவித்தார்.
எ.வ.வேலுவின் உரையை சுட்டிக்காட்டிய ஆதவ் அர்ஜுனா, "அவரது பேச்சு முழுக்க முழுக்க முதலாளித்துவ சிந்தனை கொண்டது" என்று கடுமையாக விமர்சித்தார். இதனால் பேரவையில் தவெக மற்றும் திமுக உறுப்பினர்களிடையே கடும் வார்த்தைப் போர் மூண்டது.
தொடர்ந்து பேசிய திமுக தரப்பு, "எதற்காக மசோதா கொண்டு வரப்பட்டது, ஏன் திரும்பப் பெறப்பட்டது என்பதற்கு தெளிவான விளக்கம் அளித்த பிறகும் இவ்வாறு பேசுவது எங்களை பேரவையில் இருந்து வெளியேற செய்யும் முயற்சி. இவ்வாறு பேசினால் நாங்கள் பேரவையிலிருந்து வெளியேறுகிறோம்" எனத் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து குறுக்கிட்ட சபாநாயகர், "யாரையும் உள்நோக்கத்துடன் வெளியே அனுப்புவதற்காக நான் இந்த பேரவையில் அமரவில்லை. பேரவையிலிருந்து யாரும் வெளியேறுவதை நான் விரும்பவில்லை. மக்களுக்குப் பயன்படும் கருத்துகளை மட்டுமே உறுப்பினர்கள் பேச வேண்டும்" எனக் கூறி அமைதியை ஏற்படுத்தினார்.

