ETV Bharat / state

சினிமா பஞ்ச் டயலாக்லையிலேயே அரசியல் செய்றாங்க - திமுகவின் விமர்சனத்திற்கு எம்.பி கார்த்தி சிதம்பரம் பதிலடி

த.வெ.க அரசு 5 ஆண்டு காலத்திற்கு எந்த பிரச்சனையுமின்றி ஆட்சி நடத்தும் என மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

எம்.பி கார்த்திக் சிதம்பரம்
எம்.பி கார்த்திக் சிதம்பரம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : July 7, 2026 at 8:01 AM IST

1 Min Read
Choose ETV Bharat

மதுரை: காங்கிரஸ் குறித்து தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ எழிலரசன் விமர்சனத்திற்கு, ‘சினிமா பஞ்ச் டயலாக்லையிலேயே அரசியல் பண்ணலாம் என்று நினைக்கிறார்கள்’ என மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த சிவகங்கை தொகுதி காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காங்கிரஸ் குறித்து தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ எழிலரசன் விமர்சித்தது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ எழிலரசனுக்கு தேசிய அரசியல் தெரியவில்லை. ஒரு மாநிலத்தில் பின்னடைவு ஏற்பட்டிருக்கலாம். இருப்பினும், தென் இந்தியாவில் மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் முதலமைச்சர் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு எத்தனை முதலமைச்சர் இருக்கிறார்கள் என்று கேட்டால் என்ன செய்வார். நிறைய சினிமா பார்ப்பார்கள் போல. சினிமா பஞ்ச் டயலாக்லையிலேயே அரசியல் பண்ணலாம் என்று நினைக்கிறார்கள். ஆக்கப்பூர்வமாகச் சிந்தித்துப் பேச வேண்டும்” எனத் தெரிவித்தார்.

த.வெ.க அரசு குறித்துப் பேசிய அவர், “புதிய அரசு பணியாற்ற போதிய கால அவகாசம் வழங்க வேண்டும். ஆட்சி அமைத்த குறுகிய காலத்திலேயே ஒவ்வொரு நடவடிக்கையையும் விமர்சிப்பது சரியான அணுகுமுறை அல்ல. அரசு பதவியேற்று இன்னும் இரண்டு மாதங்கள் கூட ஆகாத நிலையில், இவ்வாறு விமர்சனங்களை வைப்பது சரியானதல்ல.

பெரும்பாலான அமைச்சர்கள் முதல் முறையாகப் பொறுப்பேற்றிருப்பதால், நிர்வாகத்தில் நிலைபெற அவர்களுக்குக் கால அவகாசம் தேவை. முதல் பட்ஜெட்டுக்குப் பிறகே அரசின் செயல்திட்டம் குறித்து முழுமையாக மதிப்பிட முடியும்” என்றார்.

இதையும் படிங்க: திருச்செந்தூர் முருகன் கோயில் தரிசன கட்டண உயர்வு வழக்கு; அறநிலைய துறைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மேலும், ”ஐந்து வருடத்திற்கு இந்த ஆட்சி கலையப் போவதில்லை. அது குறித்து ஆட்சியில் இருப்பவர்கள் கவலைப்பட தேவையில்லை. யாரையும் சேர்த்துக்கொள்ள வேண்டிய தேவையும் இல்லை; யாரும் விட்டும் போகமாட்டார்கள். ஒருவேளை வெளியே இருப்பவர்கள் ஆட்சியைக் கவிழ்க்க நினைத்தார்கள் என்றால் அது வெற்றியடையாது” எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன் மீது ஆளுநரிடம் புகார் அளித்தது குறித்த கேள்விக்கு, “தமிழ்நாட்டின் அமைச்சர்களை பற்றி எனக்கு இன்னும் பரிச்சயம் ஆகவில்லை. இனிமேல்தான் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டும்” என பதிலளித்தார்.

தொடர்ந்து வைகை ஆற்று விவகாரத்தில் ஆளுநரின் செயல் குறித்து பேசிய அவர், “ஆளுநருக்கு வைகை ஆற்றைப் பற்றி ஆய்வு செய்வதற்கு அதிகாரம் கிடையாது. பா.ஜ.க-வால் நியமிக்கப்பட்டுள்ள அனைத்து ஆளுநர்களும் அவர்களுடைய அரசியல் சாசனத்திற்கும் அதிகாரத்திற்கும் மேலேதான் செயல்படுகிறார்கள்” என விமர்சித்தார்.